இல்லறம்

Vinkmag ad

 

–    எம். ஆர். எம். அப்துற் றஹீம் –

 

அண்ட கோளங்களையும் படைத்த இறைவன் அதிலே இம்மண்ணுலகையும் படைத்து அம்மண்ணிலிருந்து, அம்மண்ணில் வாழ்வதற்காக மனிதனையும் படைத்தான். தன்னுடைய மேலான படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவனுடைய நலனுக்காகவே இவ்வண்ட கோளங்களை மட்டுமல்லாது இம்மண்ணுலகில் பல்வேறு படைப்பினங்களைப் படைத்ததோடு மனநிறைவுறவில்லை.

எனவே மனிதனுடைய நலனிற்காக, மனிதகுலத்தை வாழ்விப்பதற்காக அவனுடைய இன்பதுன்பங்களில் பங்கு பெறுவதற்காக அவனுக்குத் துணை நிற்பதற்காகப் பெண்ணையும் தோற்றுவித்தான். அவ்வாறு தோற்றுவிக்கும் பொழுது பெண்ணினத்தை அழகின் திருவுருவாக, அன்பின் இருப்பிடமாக, தன் படைப்புகளிலெல்லாம் மேலானதாகத் தோற்றுவித்தான்.

இதனையே ஆங்கிலக் கவிஞர் மில்ட்டன், “பெண்மை படைப்புகளிலெல்லாம் அழகானது. இறுதியானது, மேலானது, என்று வாயாரப் புகழ்கின்றார். நம் தமிழ் மொழியிலும் ‘பெண் என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள் இருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

ஆண்; ஆண்மை, வீரம், துணிவு, ஆகியவற்றின் பிரதி பிம்பம் என்றால், பெண்; மென்மை, இரக்கம், அன்பு ஆகியவற்றின் திருவுருவாக விளங்குகின்றாள். ஆண் இல்லாதபோது பெண் இல்லை. பெண் இல்லாதபோது ஆண், மென்மை பெற மாட்டான். எனவேதான் தாமஸ் ஆட்வே என்ற அறிஞனும், “பெண்மையே ! அழகுருவாகிய பெண்மையே !! மனிதனை மென்மைப்படுத்துவதற்காக இயற்கை உன்னைப் படைத்துள்ளது. நீ இன்றேல் நாங்கள் விலங்கினங்களாகவல்லவோ இருப்போம். சுவர்க்கத்தைப் பற்றி நாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் வியத்தகு அழகு, தூய்மை, உண்மை, அழியா மகிழ்ச்சி, அணையா அன்பு ஆகியவையெல்லாம் உன்னிடமன்றோ காணப்படுகின்றன.” என்று கூறிக் கூத்தாடுகின்றான்.

மற்றோர் அறிஞனோ, “பெண்மைக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். மனிதனின் வாழ்வில் பெண்மை சுவனத்து ரோஜா மலர்களைப் பின்னிப் பிணைந்து தொடுக்கின்றது. பெண்மைதான் நம்மை அன்புத் தளைகளால் பிணைக்கின்றது. அழகின் திரைக்குள் மறைந்து கிடக்கும் பெண்மை தன்னுடைய தூய கைகளால் மென்மையான உணர்வுகளைக் கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றது” என்று முழங்குகின்றான்.

இவ்வாறு மாபெரும் புனித எண்ணத்தோடு ஆணினத்திற்கு அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அளிப்பதற்காகவே பெண்ணினத்தை இறைவன் உண்டு பண்ணியிருத்தலினால் பெண்மையை, “கட்புலனாயதோர் அமைதித் தன்மை” என்று கூறினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ஆனால் பிற்கால ஆசிரியர்களோ பெண்ணைப் பேயென்றும், மாய்கையென்றும், வெறுக்கத்தக்க மூவாசைகளில் ஒன்றென்றும், வீடுபெறுவதற்குத் தடை கல்லாக நிற்பதென்றும் இன்னும் என்னவென்னவோ பிதற்றிப் போந்தனர்.

காமத்தைக் கடிய வந்த கவிப்பேரரசன் கம்பன் கூட

தூம கேது புவிக்கெனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காம மில்லை யெனிற்கடுந் தீங்கெனும்

நாமமில்லை நரகமு மில்லையே

என்று கூறுகின்றான். தூமகேது என்னும் வால்வெள்ளி வானில் தோன்றின் மன்னர்க்கும் மாநிலத்திற்கும் தீது என்ற நம்பிக்கை மக்களிடை நிலவுவதை வைத்துக் கொண்டு பெண்களும் இப்பூவுலகிற்கு அப்படிப்பட்ட வால்வெள்ளிகளே என்று கம்பன் கூறுகின்றான். பெண் இன்றேல் இப்பூவுலகமும் ஏது, மனித இனமும் ஏது?

கம்பன் கூறுவது போன்றோ, பிற்கால ஆசிரியர்கள் கூறிப்போந்தது போன்றோ, பெண்ணினத்தை இறைவன் உலகிற்கு ஒரு சாபக்கேடாகப் படைக்கவில்லை. அதனை ஓர் அருட்பெருங்கொடையாகவே படைத்துள்ளான். அவ்வாறு படைத்து மனித இனத்தை இவ்வுலகில் தோற்றுவிப்பதற்காக ஆண், பெண் ஆகிய இருபாலரிடத்திலும் உரிய காலத்தில் ஓர் இன்ப உணர்வைத் தோற்றுவித்தான். அதன் காரணமாக ஆண் பெண்ணை மருவவும், பெண், ஆணை மருவவும் விரும்பினர்.

ஓர் ஆண், பல பெண்களைப் பார்த்து மருவ விரும்புவதையும் ஒரு பெண், பல ஆண்களைப் பார்த்து மருவ விரும்புவதையும் காமம் என்றும் ஓர் ஆண், ஒரு பெண்ணைப் பார்த்து அவளையே மருவ விரும்புவதையும், ஒரு பெண், ஓர் ஆணைப் பார்த்து அவனையே மருவ விரும்புவதையும் காதல் என்றும் கட்டுரைத்தனர் தமிழர். இதில் காமத்தைத் தீயதென்றும், காதலைத் தூயதென்றும் கூறினர். எனவேதான் கம்பனும் மேற்கூறிய செய்யுளில் தீமைக்குக் காரணமும் நரகம் ஏற்படுவதற்கான காரணமும் காமமே என்று கூறுகின்றான். காமம் இல்லையேல் தீமை என்ற பெயரே ஏற்பட்டிராது. நரகமே ஏற்பட்டிராது என்று அவன் எடுத்துரைக்கின்றான்.

இந்த உணர்வு ஏற்படுவதற்கு மூலகாரணமே பார்வை எனவே தான் ஒர் அறிஞனும், “முதற் பார்வையிலேயே, இன்ப உணர்வைப் பெறாதவன் யார்?” என்று வினா விடுக்கின்றான். இந்த இன்ப உணர்வானது ஆண் பெண் ஆகிய இருவர் ஒருவர் மற்றொருவரைப் பார்த்ததும் மின்னல் வேகத்தில் அவர்களின் உள்ளத்தில் கிளர்ந்தெழுகின்றது.

ஆனால் காம உணர்வு பெற்றவர்கள் கண்ட கண்ட பேர்களை எல்லாம் பார்த்துக் காமுறும்பொழுது காதல் உணர்வு பெற்றவர்களோ தங்களின் கண்ணிற்கினியவளை, மனத்திற்கு வந்தவளைத் தங்களின் வாழ்க்கைத் துணைவியாக அல்லது துணைவராகத் தேர்ந்தெடுக்க அவாவுறுகின்றனர்.

இந்த அவாவை மனித உள்ளத்திலே ஏற்படுத்துவதற்காக இறைவனும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய காலம் வந்ததும் அவர்களுடைய உடலிலே ஒரு வித எழிலை உண்டு பண்ணுகின்றான். பூக்கள் மலரக்கூடிய பருவம் எய்தியதும் புது மணமும், புதுப் பொலிவும் பெற்று ஈக்களைத் தம்பால் ஈர்த்து அவற்றின் மூலம் மற்றப் பூக்களிலுள்ள மகரந்தத்தூளைத் தம்பால் பெறுகின்றன. இது செடி, கொடிகள் செய்யும் காதல் வாழ்வாகும்.

மின்மினிப் பூச்சியானது உரிய பருவத்தை எய்தியதும் தன் உடலில் ஒளியைப் பெற்று இரவு நேரத்தில் அங்குமிங்கும் பறந்து திரிந்து தான் காதல் வாழ்விற்குத் தகுதி பெற்றுவிட்டதாகத் தன் இனத்திற்கு அறிவிக்கின்றது. இவ்வாறு தாவரம் முதல் மனித இனம் வரை உள்ள அனைத்திற்கும் இறைவன் உரிய காலத்தில் ஒருவித எழிலை நல்கி அவை மற்றவற்றுடன் இன்பத் தொடர்பு கொள்ள வழி கோலுகின்றான். ஆனால் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்துத் தனக்கு இனியவளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையை வழங்கினான்.

இறைவன் எல்லோருக்கும் இரண்டு கண்களையே வழங்கி இருந்த போதினும் எல்லோருடைய கண்களும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை. ஒரு மனிதனின் கண்களுக்கு இனிமையாகத் தோற்றக் கூடியது மற்றொருவரின் கண்களுக்கு இனிமையாகத் தோற்றுவதில்லை. எனவே அழகு என்பது காண்பவர்களின் கண்களைப் பொறுத்ததாகவே இருக்கின்றது.

இது காரணமாகவே அரசர், மஜ்னூனைப் பார்த்து, “நீ ஏன் அழகற்ற கறுப்பியாகிய லைலா மீது அடங்காக் காதல் கொண்டு பித்துப் பிடித்து அலைகின்றாய்? அழகுமயமான ரோஜா நிற மங்கையை மணமுடித்து மருவ விரும்பினால் என்ன? என்று வினவியபொழுது “அரசே! தாங்கள் என்னுடைய கண்களுடன் அவளைப் பார்க்கவில்லையே” என்று மறுமொழி பகர்ந்தான் மஜ்னூன்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தன் கண்ணுக்கினியவரை விரும்புவதனாலே கிரேக்க நாட்டிலும் ”ஒரு தேவதை ஆணையும் பெண்ணையும் முதலில் ஒன்றாகவே படைத்தது; ஆனால் மற்றொரு தேவதை அவர்கள் இருவரையும் வெவ்வேறாகப் பிரித்து விட்டது. அதன் காரணமாக அவர்கள் தங்களின் மற்றொரு பாதியைக் கண்டுபிடிக்கும் வரையில் தேடி அலைந்து கொண்டுள்ளார்கள்” என்று ஒரு புராணக் கதை வழங்குகிறது. அவ்வாறு தேடிக் கண்டுபிடித்தும் ஒருவரை மற்றவர் பாசத்தால் ஈர்த்துக் கொள்கின்றனர். இதனையே கம்பனும்,

பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்

வரிசலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார்.

என்று இராமன் – சீதை காதல் வாழ்வை அழகுற எடுத்துரைக்கின்றான்.

சில பொழுது இந்தக் காதல் உணர்வானது ஒரு தலைப்பட்டதாகவும் உள்ளது. அதாவது ஓர் ஆண் ஒரு பெண் மீது அதிகமாக காதலுறுவான். ஆனால் அவ்வளவு அந்தப் பெண் அந்த ஆண் மீது காதலுறமாட்டாள். அல்லது ஒரு பெண் ஓர் ஆண்மீது அதிகமாகக் காதலுறுவாள். ஆனால் அந்த அளவு அந்த ஆண் அப்பெண் மீது காதலுற மாட்டான். இத்தகு காதலுக்குக் கைக்கிளை என்றும் இருவரும் ஒரு மனப்பட்டு ஒருவர் மற்றொருவரைக் காதலித்தால் அதனைப் பெருந்திணை என்றும் தமிழர் கூறுவர். ஒரு தலைப்பட்ட காதலில் ஒருவர் மற்றவரைக் கவர ஒரே வழி தம் அன்பை மற்றவர் மீது அளவுக்கதிகமாகச் சொரிவது தான். ஆண் வலிமை மிக்கவனாதலின் தான் விரும்பிய பெண்ணைக் கவர்ந்தோடி அவள் மீது தன் அன்பைச் சொரிந்து அவளைத் தனக்குரியவளாக தான் நேசிப்பது போன்று அவளும் தன்னை நேசிப்பவளாய் ஆக்கி இல்வாழ்க்கை நடத்துகின்றான். இவ்வாறே முற்காலத்தில் நிகழ்ந்தது. ஆனால் பிற்காலத்திலோ பணமும் பதவியும் தன்னை விரும்பாதவனையும் விரும்பச் செய்யும் மாய ஆற்றல்களைப் பெற்றன.

மனித வாழ்வின் துவக்க காலத்தில் பெண்மை தன் பலவீன நிலையை உணர்ந்து தனக்குப் பாதுகாப்புப் பெறுவதற்காக, தனக்குப் பாதுகாப்புத் தரத் தகுதி வாய்ந்தவன் என்று தான் கருதிய ஆடவனை அடைந்தது என்றும், போர்க்காலத்தில் வலிமை மிகுந்த வீரனை அது பாதுகாப்புப்பெற நாடியது என்றும் அமைதிக்காலத்தில் அறிவும் ஆற்றலும் செல்வமும் பெற்றவனை அது அணைத்து நின்றது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அவ்வாறு அணையும் பொழுது ஆண், பெண்ணுக்கு பரிசில்கள் அளித்து தன் அதிகாரத்தை அவள் மீது உறுதிப்படுத்தித் தனக்கே உரியவளாக அவளை ஆக்கிக் கொண்டான் என்றும் இவ்வாறு பரிசில்கள் அளித்துத் தன் காதலியைக் கவரும் பண்பு பறவைகளிடம் கூட இருக்கிறது என்றும் ‘பெங்க்வின்’ என்ற ஓர் இனப்பறவை விரும்பும் பெடைக்குப் பல நிறக் கூழாங்கற்களைத் தேடிக் கொணர்கிற தென்றும் மற்றொரு வகைப் பறவை நார்களையும் இலைகளையும் அன்பளிப்புச் செய்கிறதென்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இவ்வாறு வளர்க்கப்படும் இந்தக் காதல் உணர்வானது முதலில் இன்பத்தை நல்குகின்றது, “காதல் செய்வது போன்று வாழ்வில் யாதொன்றையும் நான் அறியேன்” என்று கழறுகின்றான் ஒருவன். “இளமையின் காதற் கனவுகளில் பொதிந்துள்ள இன்பத்தில் அரை அளவு கூட வாழ்வில் நான் எங்கேனும் காணவில்லையே. இரண்டு அன்புக்கரங்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும் அந்தப் புனிதமான இடத்தைவிட இன்பம் பயக்கவல்ல இடம் இப்பூவுலகில் வேறு ஏதேனும் உண்டா? என்று மற்றொருவன் வாயார்ந்து கூறுகின்றான்.

ஆனால் அந்த இன்பத்திற்குள்ளே மாபெரும் துன்பம் பொதிந்துள்ளது என்பதை இளமை உணர்வதில்லை. எல்லா விதமான சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து நிற்கும் இந்தக் காதலுடன் விளையாடுவது தீயோடு விளையாடுவது போன்றதாகும். தீப்புண்ணைத் தாங்குவதே கடினம். ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு கடினமாகக் காதற் புண்ணைத் தாங்குவது, அதன் வடுவிற்கு இவ்வுலகில் மருந்தே இல்லை.

எனவே தான் ஜான் லைலி என்ற ஓர் அறிஞனும், “இறைவனே ! நீ ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்தை, ஒவ்வொரு பிணிக்கும் ஒரு சஞ்சீவியை, ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு நிவாரணத்தைப் படைத்துள்ளாய். காதல் நோய்க்கு மட்டும் ஒரு மருந்தையேனும் உண்டு பண்ணாது விட்டுவிட்டாயே” என்று கதறுகின்றான்.

“மலையின் உச்சியிலிருந்து வீழ்கின்றவனுடைய நிலையை விட மோசமானதாகக் காதல் செய்பவனின் நிலை உள்ளது” என்று ப்ளாட்டஸ் என்பவன் கூறுகின்றான். இத்தகைய அபாயத்தை அது பெற்றிருப்பதனால் தான் காதல் வாழ்விலே திளைத்த ஆங்கிலக் கவிஞன் பைரன் கூட, “காதலே நாங்கள் உன்னைச் சாத்தான் என்று கூற இயலாவிட்டாலும் நீயே துன்பக்கடவுளாக உள்ளாய் என்பது உறுதி” என்று கூறுகின்றான்.

இவ்வாறு காதல் உணர்வு பற்றி இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. காதல் பற்றியும் கடிமண வாழ்வைப் பற்றியும், பெர்னார்ட்ஷா குறிப்பிடும்பொழுது “காதல் என்பது அதிகபட்ச இன்பமும் குறைந்தபட்ச வாய்ப்பும் உள்ளது. ‘கடிமண வாழ்வென்பது குறைந்த பட்ச இன்பமும் அதிகபட்ச வாய்ப்பும் உள்ளது” என்று கூறினார். இந்த இரத்தினச் சுருக்கமான வாசகத்திலிருந்து ஓர் ஆணும், பெண்ணும் தான் விரும்பும் மற்றொருவரை மருவுவதற்குச் சூழ்நிலை, சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றினால் குறைவான வாய்ப்பைப் பெறுவதனால் அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவர் அதிகமான அன்பும், அதன் காரணமாக அதிகமான இன்பமும் ஏற்பட ஏதுவாகிறது என்பதை நாம் அறிகிறோம்.

காதலர் இருவர் ஒருவர் மற்றவரை அணுகி உரையாடும் நேரமானது காற்றின் பொழுது வேகத்தில் பறந்து செல்வதற்கும் அவர்கள் ஒருவரை மற்றவர் அணுக இயலாது பிரிந்திருக்கும் பொழுது ஒரு கணம் ஒரு யுகமாகக் கழிவதற்கும் காரணம் அவர்கள் சேர்ந்திருக்கும் பொழுது கொள்ளும் இன்பமும் பிரிந்திருக்கும் பொழுது கொள்ளும் துன்பமுமேயன்றி வேறில்லை.

இவ்வாறு ஓர் ஆணோ பெண்ணோ தான் விரும்பும் ஒருவரைப் பெற முயலும்போது தான் விரும்பும் ஒருவர் மற்றவரைக் காதலித்து விடுவாரோ, தான் விரும்பும் ஒருவரைக் கடிமணம் செய்ய இயலுமோ, இயலாமற் போய் விடுமோ என்னும் ஐயங்கள் ஏற்பட்டு அவர்களைக் கொல்லாது கொல்கின்றன. இவ்வாறு கவலை நிறைந்த அச்சங்கள் காதலிலே இருப்பதற்குக் காரணம் சமூகக் கட்டுப்பாடுகள் மட்டுமின்றி ஆண்களின் மோசம் செய்யும் இயல்பும் பெண்களின் நிலையற்ற தன்மையும் தாம்.

முற்காலத் தமிழர்கள் களவு மணத்தைப் பெரிதும் போற்றி வந்தனரென்று சங்க நூல்களிலிருந்து நாம் அறிகிறோம். ‘களவு’ என்பதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் கூறும்பொழுது ‘குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவர்க்கும் ஒருத்திக்கும் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதே” என்று குறிப்பிடுகின்றார். ஆனால்,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரண மென்ப”

என்னும் தொல்காப்பியர் சூத்திரத்தால் பின்னர் ஆண் பொய் சொல்லிப் பெண்ணை ஏமாற்றிவிடுவதனாலும் பெண் வழுக்கி விழுந்து மாசுற்று விடுவதனாலும் இப்போதைய திருமணமுறை வழக்கில் வந்தது என்று அறிகிறோம்.

தானே தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது எவ்வளவுதான் நாகரிகமான பண்பு என்று கருதப்பட்ட போதினும் அதிக வெப்பத்தின் காரணமாக அதிகமான உணர்ச்சியை விரைவில் பெற்றுவிடுகின்ற நம் கீழை நாட்டு மக்களுக்கு அது ஒருக்காலும் பொருந்தாது என்பதே நம் துணிவு, ஏனெனில் ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றொருவர் அணுகுவது பஞ்சும் நெருப்பும் – இல்லை இல்லை – பெட்ரோலும் நெருப்பும் ஒன்றையொன்று அணுகுவதற்கு ஒப்பாகுமேயன்றி வேறில்லை. எனவே தான் நபிகள் நாயகம் அவர்களும் “ஒரு பெண்ணும் ஓர் ஆணும் தனித்திருப்பார்களாயின் அவர்கள் இருவர் மட்டும் ஆங்கு இருக்கவில்லை. அவர்களின் ஊடே சாத்தானும் இருக்கின்றான்” என்று கூறினர். சாத்தான் இருக்கும் பொழுது கற்பு என்னாவது?

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின்”

எனக் கூறிய வள்ளுவப் பெருந்தகையைப் பெற்றது நம் நாடு. “கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? என்று அவர் கூறுகின்றார். கற்பு என்னும் திண்மை என்று எவ்வளவு வன்மையாக அதனை அவர் எடுத்துரைக்கின்றார். பெண்கள் பலவீனமாக இதயம் பெற்றவர்கள். ஆடவர்களை வெகு எளிதில் நம்பி விடுபவர்கள் என்பதை மனத்திற்கொண்டே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெண்களின் கற்பைப் போற்றாதார் இவ்வுலகில் எவருமில்லை. “கற்புடைய பெண் இரத்தினத்தைவிட மேலான மதிப்புடையவள்” என்று பைபிள் மறை முழக்குகின்றது.

ஸ்பானிய பேராசிரியர் ஸெர்வாண்டிஸ் “கற்புடைப் பெண்டிர் போன்று விலைமதிப்புள்ள ஆபரணம் இந்த உலகில் வேறொன்றுமில்லை” என்று புகழ்பாடுகின்றார் !

ஆங்கிலக் கவிஞர் சாஸரோ, “தங்கத்தைவிட மேலானது என்ன? சூரிய காந்தம். சூரியகாந்தத்தைவிட மேலானது என்ன? அறிவு, அறிவைவிட மேலானது என்ன? பெண். கற்புடைய பெண்ணைவிட மேலானது என்ன? ஒன்றுமே இல்லை” என்று தாமே வினா எழுப்பி விடை பகர்ந்து வந்து பின்னர் கையை விரிக்கின்றார். “கற்பை இழந்தவள் வேறு எந்த இழிசெயலையும் செய்யத் தயங்கமாட்டாள்” என்று மற்றோர் அறிஞன் எடுத்துரைக்கின்றான்.

ஆதலின் கற்பென்பதை எவ்வளவு விலை மதிக்க முடியாத ஆபரணமாக இறைவன் தங்களுக்கு அளித்துள்ளான் என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிந்து செயலாற்ற வேண்டும். அதற்குச் சிறிதேனும் மதிப்பளியாது தங்களின் இச்சையை எவ்வாறாவது நிறைவு செய்வதற்காகப் பல்லைக் காட்டிப் பசப்பித் திரியும் ஆணினத்திடம் பெண் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இதற்கு அவளிடம் இருக்க வேண்டியது மன அடக்கம் தான்.

“ஆண்களின் இதயத்தைவிடப் பெண்களின் இதயம் காதலால் அதிகம் பாதிக்கப்பெறுகிறது. ஆனால் கெளரவம் என்பதானது அந்தக் காதல் வேகத்தைத் தணிக்கின்றது” என்று ஓர் அறிஞன் கூறினான்.

எனவேதான் பெண்ணினத்திற்கு இறைவன் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய நான்கு தனித்தன்மைகளை நல்கினான். அவையே அவர்களின் காமத்தைத் தவிர்க்கும் கொறடாவாக விளங்குகின்றன. அவற்றை மட்டும் இறைவன் அவர்களுக்கு நல்கியிராவிட்டால் உலக நிலையே வேறுவிதமாக மாறியிருக்கும்.

எனவே ஒரு பெண் தன்னுடைய கெளரவத்தை தன் குடும்ப கெளரவத்தை மனத்திற்கொண்டு மன அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே அவளுக்கு மாபெரும் அரணாகும். எனவே தான் வள்ளுவப் பெருந்தகையும் “மகளிரைக் காவல் செய்து காக்கும் காப்பு முறையால் யாது பயன். அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது” என்னும் கருத்தை உள்ளடக்கி,

“சிறைகாப்பும் காப்பு எவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை”

என்று கூறினார். இதனையே மற்றொருவரும்

“கோட்டையெனிற் கற்பேயாம் கற்பிலாள் காதலனைக்

கோட்டையுளும் கண்டுவிடும்”

என்று சொல்கிறார்.

”ஆனால் இதனையறியாது சில பெண்கள் தங்களின் காதல் துவக்கத்தில் ஆண் அஞ்சி நடுங்கும் பொழுது தாங்கள் பெரிதும் துணிச்சலாக இருக்கின்றார்கள். இவ்வாறு ஆணுடைய தன்மையைப் பெண்ணும் பெண்ணுடைய தன்மையை ஆணும் பெற்றுவிடுகின்றனர்” என்று பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹ்யூகோ நையாண்டியாகக் கூறுகின்றார்.

ஆனால் பெண்களோ காதலனை வெல்லவேண்டுமென்ற ஆவலினால் அம்முயற்சியில் பொதிந்துள்ள பேராபத்தையும் அறியாது அறிவுக்கண் மழுங்கப் பெற்று அசட்டுத் துணிச்சலுடன் செயலாற்றுகின்றனர். எனவே தான் காதல் கடவுள்களாகிய க்யூப்பிட்டைக் குருட்டுக் கடவுளாக உருவகப் படுத்தினார்கள் கிரேக்கர்கள்.

இந்த அசட்டுத் துணிச்சலானது ஒருவேளை நல்லதாக முடிந்துவிடின் நல்லதுதான். ஆனால் தீதாக முடிந்து விட்டால் அவளுடைய நிலை என்ன? ஆண், அவளை மோசம் செய்து விட்டால் அவளுடைய கதி என்னாவது? இதனைப் பெண் சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய மோசமான புனிதமான கற்பை இழந்து விடுவாளாயின் மீண்டும் அவளைக் கற்புடையவளாக்க உலகில் எந்த ஆற்றலினாலும் இயலாது. இறந்தவர்களைக் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டவர்கள் கூட உயிர் பெற்று வீடு திரும்பினர் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் கற்பை இழந்த பெண் மீண்டும் கற்பைப் பெற்றாள் என்று நாம் கண்டு அறியோம். கேட்டும் அறியோம், அவளுடைய அவல நிலையை ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியர் இதயத்தைப் பிழியும் வண்ணம் இதோ எடுத்துரைக்கின்றார்.

“ஐயோ அவள் வீழ்ந்துவிட்டாளே. இருட்கடலில் மூழ்கி விட்டாளே. அவளை மீண்டும் தூய்மைப்படுத்தப் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடலில் ஒரு துளி நீரேனும் இல்லையே”

“அவளுடைய இழந்த கற்பைத்தான் மீட்ட முடியாவிட்டாலும் அவளுடைய அவமானத்தையேனும் போக்க முடியுமா? முடியும். எப்படி? அதற்கு அப்பெரும் கவிஞரே பதில் கூறுகின்றார். “அவளுடைய அவமானத்தை மறைப்பதற்கான அழகிய திரை என்னவென்றால் இறப்புத்தான்” என்று

ஆம். கற்பை இழந்தவள் உலகில் ஓர் அவமானச் சின்னமாக விளங்குகின்றாள். அவள் உலகிற்கே ஒரு சாபக்கேடாக இருக்கிறாள். குடும்பப் பெண்கள் அவளின் கண்ணில் விழிப்பது கூட, அவள் தங்கள் முன் எதிர்ப்படுவது கூட தீ நிமித்தம் என்று கருதுகின்றனர். எந்த ஆணும் அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் ஆண் விலங்குகள் அவளைச் சுற்றி வளையமிட்டு அவளைத் தங்களின் காமநுகர்ச்சிப் பொருளாக ஆக்க முயல்கின்றனர். அவளும் அவர்களைக் கெடுக்கிறாள். அவர்களும் அவளைக் கெடுக்கிறார்கள். பின்னர் இருவரும் பலவித நோய்வாய்ப்பட்டு அழிந்தொழிகின்றார்கள்.

கற்பு என்பது பெண்ணுக்குமட்டும் உரியதன்று. ஆணுக்கும் உரியதேயாகும். அவ்வாறே முற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. கற்பை இழந்த பெண்ணும் ஆணும் ஒரே விதக் குற்றத்தையே செய்கின்றனர். எனவேதான் அவர்கள் இருவரையும் கல்லாலெறிந்து கொல்லுமாறு யூதர்களின் சட்டமும் சவுக்கால் அடிக்குமாறு இஸ்லாமிய சட்டமும் ஆணையிடுகின்றன. இன்றும் சவூதி அரேபியாவில் இம்முறையே பின்பற்றப்படுவதால் இன்று அங்கு வியபிசாரம் என்ற பேச்சே இல்லை.

ஆனால் மற்ற நாடுகளிலோ நாகரிகம் என்ற பேரால் வியபிசாரம் எங்கணும் மலிந்து கிடக்கிறது. பெண் வழுக்கி விழுந்துவிடின் அவளை அவமதிக்கும் இக்கால உலகம் ஆண் வழுக்கி விழுந்துவிடின் அவ்விதம் செய்வதில்லை. மதிப்பிற்குரிய மனிதன் போன்றுதான் அவன் எல்லாருடனும் சேர்ந்து பழகுகின்றான். அவனிடம் பணம் இருந்தாலோ அவனுடைய அந்தரங்கச் சாக்கடை வாழ்வெல்லாம் அழகிய திரையால் மறைக்கப்பட்டு அவனும் பெருமைக்குரிய பெருமனிதனாக விளங்குகின்றான். இந்நிலைமை மாற வேண்டும். கற்பை இழந்தவள் போன்று கற்பை இழந்தவனும் அவன் எவ்வளவு செல்வமும் சேகரமும் உள்ளவனாக இருந்தபோதிலும் ‘தலையின் இழிந்த மயிர்’ போன்று சமூகத்தால் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும்.

காதல் வாழ்வினால் பெண்ணும் ஆணும் வழுக்கி வீழ்ந்து இனத்தூய்மையை மாசு படுத்திவிடுவதோடல்லாது ஆண், பெண்ணை மோசம் செய்வதாலும் பெண், ஆணை மோசம் செய்வதாலும் பற்பல கொலைகள், தற்கொலைகள் எல்லாம் ஏற்படுவதற்கு ஏதுவாகின்றன. பலர் பைத்தியம் பிடித்து அலையவும் நேரிடுகிறது. பைத்தியம் தீர்ந்தால் திருமணம் திருமணமானால் பைத்தியம் தீரும் என்ற நிலை ஏற்பட்டு அவர்கள் நச்சுசு சூழலில் சிக்கி மாய்கின்றார்கள்.

காதல் வாழ்விலே இவ்விதப் பேரபாயம் இருக்கின்றது என்பதை நன்கு உணர்ந்து பெண் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அவ்விதம் இப்போதைய நாகரிகப் பெண்கள் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. சிங்காரித்துக் கொண்டு வெளியில் சுற்றித் திரிவதிலும் ஆண் இனத்துடன் கலந்துறவாடுவதிலும் அவர்கள் இன்பம் காண்கின்றனர். அவ்விதம் செய்வதால் எத்தனை இளைஞர்களின் உள்ளங்களைக்கெடுக்க ஏதுவாவதோடு தாங்களும் கெட்டுத் தொலைய வழி ஏற்படுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஸ்நோ, பெளடர் பூசி மினுமினுக்கும் சேலையுடனும் மிடுக்கு நடையுடனும் அவர்கள் சாலையின் நடுவில் செல்லும் பொழுது மரியாதையுள்ள ஆண்கள் தாம் ஒதுங்கிச் செல்ல வேண்டியதேற்படுகிறது.

இவ்வாறு நான் சொல்லும்பொழுது பெண்கள் தாம் இவ்விதம் தவறாக நடந்து கொள்கின்றார்கள். ஆண்கள் அவ்விதம் நடந்து கொள்வதே இல்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம் ! “அகில உலகத்திலும் ஆண்களைப் பிடிக்கப்பெண்களால் கண்ணிகள், பொறிகள், படுகுழிகள் ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று பெர்னார்ட்ஷா கூறுவது போன்று நானும் கூறவில்லை.

ஒரு வேடன் ஒரு மங்கையுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பெரியார் ஒருவர் “வேடனே ! ஜாக்கிரதை நீயே வேட்டைப் பொருளாக ஆகிவிடாதே !” என்று வேடனை மட்டும் எச்சரிக்கை செய்தது போன்று நானும் எச்சரிக்கை செய்ய விரும்பவில்லை.

பெண்களைத் தங்களின் மாயவலையில் சிக்கவைக்க ஆண் இனமும் வேலை செய்கிறது என்று தான் கூறுகிறேன்.

பஸ்களிலும், பீச்சிகளிலும், கூட்டங்களிலும் கடைத்தெருக்களிலும் பெண்களைப் பார்த்துத் தங்களுக்குள்ளே கேலிச்சிரிப்புச் சிரித்து நையாண்டி செய்து கொள்வதற்காக ஆண்கள் கூட்டம் அலங்காரமாக உடை உடுத்துக் கொண்டும் சீட்டியடித்துக் கொண்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்டு நம் நெஞ்சம் நெகிழ்கிறது.

அவர்களின் இக்காம உணர்ச்சியைத் தூண்டி கண்களால் செய்யப்படும் வியபிசாரமேயன்றி வேறில்லை. எனவேதான் அகிலத்திற்கு அறவுரை பகர வந்த நபிகள் நாயகம் அவர்களும், “முதற்பார்வை திடுமென ஏற்பட்டது; இரண்டாவது பார்வை சாத்தானுடையது” என்று கூறினார்கள்.

ஏனெனில் நாம் தெருவில் செல்லும் பொழுது கண்களை மூடிக் கொண்டு செல்வதென்பது இயலாத செயல். எனவே நாம் தெருவில் செல்லும் பொழுது ஒரு பெண் நம் எதிரேவரின் அவள் மீது நம் கண்படுவது இயல்பு. ஆனால் அவளை மற்றொருமுறை நாம் பார்ப்போமாயின் அது கெட்ட எண்ணத்தினால் ஏற்படக்கூடிய பார்வையேயன்றி வேறு என்ன?

இக்கட்டத்தில் வைத்து என்னிடம் ஒருவர் கூறிய செய்தி நினைவு வருகிறது. தாமும் தம் நண்பர் ஒருவரும் தெரு வழியே செல்வதாகவும் தம் நண்பர் தெருவிலே செல்லும் நவநாகரிகப் பெண்களை முறைத்து முறைத்துப் பார்த்ததோடு பக்கத்தில் சென்று கொண்டிருந்த தம்மையும் விரல்களால் நோண்டி, ‘இதோ பார் ! இவளைப் பார் !!’ என்று கூறித் தம்முடைய கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் ‘தாங்கள் இவ்விதம் செய்வது தவறு; பெரும் பாவம்’ என்று அவர் கூறிய பொழுது ‘நீ ஒரு பெண்ணையன்; பெண்களைப் பார்த்து இரசிக்கத் தெரியாதவன்’ என்று கூறியதாகவும் அவர் என்னிடம் கூறினார்.

அவர் கூறிய இந்நிகழ்ச்சியும் “இறைவன் எங்களுக்கு அழகைத் தந்துள்ளான். அதை ஆண்கள் பார்த்து ரசிக்குமாறு அரைகுறை உடையுடுத்தி ஒய்யாரமாகத் திரிந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது” என்று ஒரு பெண் கூறிய கூற்றும் எவ்வளவு இழிவுடையது.

இந்தப்போலி நாகரிகம் மக்களினத்தை எதில் கொண்டு போய் விடுமோ நாம் அறிவோம். அந்தப் பெண்ணின் கூற்றைத் தள்ளுங்கள். ஆனால் அந்த ஆண் ஆண்மை என்றால் பிற பெண்ணை முறைத்துப் பார்த்து இரசிப்பதுதான் என்று கூறுபவர் தம்முடைய மனைவியையோ உடன் பிறந்தவளையோ பிற ஆடவர் பார்த்து இரசிப்பதை இரசித்துக் கொண்டிருப்பாரா என்று நாம் கேட்கிறோம். இதற்கு அவர் தம் மனத்தைத் தொட்டுப் பதில் கூறட்டும்.

ஆதலின் ஆணும், பெண்ணும் தங்களுக்கு உரிய காலத்தில் இறைவன் தங்களுக்கு அளிக்கும் இன்பக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்திச் செயலாற்ற வேண்டும். கட்டுப்படுத்திச் செயலாற்றுவதென்பது மன அடக்கத்துடன் நிகழ்ந்து இல்லற வாழ்வில் புகுவதேயாகும்.

ஆனால் அவ்விதம் செய்வதற்குப் பதிலாகச் சிலர் அந்த வேட்கையைத் தணிப்பதற்காக மருந்துண்கின்றனர். இதனால் ஏற்படும் தீய பலன்களை அவர்கள் அறியாது செயலாற்றுவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். உயிர் நிலையில் வன்மை இருந்தால் தான் ஒருவனுக்கு அறிவுத் தெளிவு, நினைவாற்றல், வீரம், மன உறுதி, அழகு ஆகிய எல்லாவித நலன்களும் ஏற்படும். இல்லையேல் ஒன்றுமே இல்லை. எனவே ஆண்மை என்னும் சொல் வெளிப்படையாக வீரம், தைரியம் ஆகியவற்றைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட போதினும் மறை பொருளில் உயிர் நிலையின் வன்மையையே குறிக்கின்றது.

தங்களின் பால் உணர்ச்சியால் ஏற்படும் ஆற்றலைத் தங்களின் குறிக்கோள் மீது செலுத்திச் செயலாற்றுகின்றவர்கள் பெருவெற்றி பெற்று விடுகிறார்கள். உலகில் அரும்பெரும் செயலாற்றிய பெரியோர்கள் எல்லாம் அவ்விதம் செய்தவர்கள் தாம்.

சிலர் புலனடக்கம், புலனடக்கம் என்று கூறிக்கொண்டு திருமணம் செய்யாது இருக்கின்றனர். புலனடக்கம் என்றால் தீய வழியில் செல்லாது அறிவு வழியில் அளவோடு சென்று அடக்கமாக இருப்பதைக் குறிக்குமேயன்றித் திருமணம் முடிக்காது இருப்பது என்று பொருள்படாது ஒவ்வோர் உறுப்பையும் ஒவ்வோர் அலுவல் செய்வதற்காக படைத்திருக்கும் இறைவன் இன உறுப்பையும் அதற்குரிய அலுவலை ஆற்றுவதற்காகவே படைத்துள்ளான். அதனுடைய அலுவல் இன்பம் நுகர்வதும் மக்களை உற்பத்தி செய்வதுமாகும். இதை உணராது தம்முடைய வேட்கையைத் தணிப்பதற்கு மருந்துண்பதோ, மண முடிக்காதிருப்பதோ பெரிதும் தவறுடையது என்பதில் ஐயமில்லை எனவே தவறான புலனடக்கத்தைக் கடிந்தும் தாம் அத்தவற்றினைச் செய்யாததற்காகத் தம்மைப் புகழ்ந்தும் திருமூலர் “அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே என்று கூறியுள்ளார். மேலும் அவ்விதம் அஞ்சும் அடக்கில் அசேதனமாம்” என்றும் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

ஆம். உரிய காலத்தில் மணமுடிக்காது சிலர் வாளா இருப்பதனால் அவர்களின் இன உறுப்பு வன்மை குன்றி அதனால் அவர்கள் நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தலைவலி கண்மங்கல் ஆகிய பல நோய்களுக்கு ஆளாகின்றனர். மணமுடிக்காத பலர் பல தீய மனக்கிளர்ச்சிகளினால் உறக்கத்தில் சக்தியை அடிக்கடி இழந்து பின்னர் மெலிந்து துரும்பாகிப் பலவித நோய்களுக்கும் ஆளாகின்றனர். மாதம் இருமுறை உறக்கத்தில் சக்தி கழிவது நல்லதே ஆகும். ஆனால் தீய மனக் கிளர்ச்சிகளினால் அடிக்கடி அவ்வாறு உறக்கத்தில் கழிவது பெரும் இழப்பை உண்டுபண்ணும். அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி மணமுடிக்கு முன் இளைஞர்கள் பணியாற்றுவதை விட மணமுடித்த பின் அதிகமான திறமையுடனும் வேகத்துடனும் பணியாற்றுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலர் போலித் துறவறம் பூண்டு தங்களுக்கே தாங்கள் இழிவையும் அழிவையும் உண்டுபண்ணிக் கொள்கின்றனர். ஏன் அவர்கள் இவ்வாறு வெளியே ஒரு கோலமும் உள்ளே ஒரு கோலமும் கொண்டு திரிய வேண்டும் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இல்லறம் நடத்துவது இழிவுடையதா, போலித் துறவறம் பூண்டிருப்பது பெருமையுடையதா என்று கேட்கின்றேன்.

துறவறம் என்பது எளிதானதல்ல, மாமுனிவரான விசுவாமித்திரர் கூட மேனகையைக் கண்டு மயங்கி விட்டார் என்று நாம் புராணக்கதையில் படித்துள்ளோம். காட்டில் கடும் தவம் செய்த அம் மாமுனிவருக்கே தம்மை அடக்க இயலாது போய் விட்டபோது உலகிலே பலவித மாய ஆற்றல்களுக்கு நடுவே வாழ்ந்துகொண்டு துறவறத்தை மேற்கொண்டிருப்பது மிக மிகச் சிரமமான செயலாகும். கோடியில் ஒருவர்தம் அவ்விதம் இருக்க இயலும். அவ்விதம் இருப்பதும் இயற்கை வழிக்கு இறைவன் வழிக்கு மாறு செய்வதாகும்.

எனவேதான் பதினெட்டு ஆண்டுகள் காட்டில் சருகுகளையும் கிழங்குகளையும் உண்டு கடும் தவம் செய்த ஒரு மகான் கூடப் பின்னர் ஊர் திரும்பி இறைவகுத்த நன்னெறியாகிய இல்லறம் புகுந்து பல நன்மக்களை ஈன்றெடுத்து இனிது வாழ்ந்தார் என்று நாம் வரலாற்றில் படிக்கிறோம். அவ்விதம் செய்ததை அவர் பெரிய வணக்கம் என்று கருதினாரென்றும் அவ்விதம் வாழும் பொழுது புளியம் பழத்தோடு தோடெனப் பொருந்தி வாழ்ந்தார் என்றும் அறிகிறோம். இதுவே உண்மையான துறவுநிலை. உலகில் வாழ்ந்தும் உலகப் பொருள்களில் பற்று நீக்கி வாழும் பாங்கே மிகச் சிறந்தது. துறவறம் பூண்டு காட்டில் போய்த்தவம் செய்வதைவிட இது எவ்வளவோ சிறந்தது. ஏனெனில் காட்டில் கடும் தவம் செய்யும் துறவி தனக்கேதான் நன்மை செய்து கொள்ளப் பாடுபடும்பொழுது இல்வாழ்க்கை நடத்துகின்றவனோ தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் உலக மக்களின் நன்மைக்காகவும் பாடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறான். எனவேதான் துறவறத்தை விட இல்லறம் எவ்வளவோ மேலானதென்பதை வலியுறுத்தி,

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவது எவன்”

என்று வள்ளுவப் பெருந்தகை வினா விடுக்கின்றார்.

ஆதலின் இல்லறம் என்பதே எல்லாவற்றிலும் மேலானது. அது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இன்ப வாழ்வாகும். அதனை ஒவ்வொருவரும் எய்தப் பெறுவார்களாக ! எய்தப் பெற்று அதிலே அறத்தாறு வாழ்வார்களாக ! அதனைத் தங்களுக்கு நல்கிய இறைவனைப் போற்றிப் புகழ்வார்களாக !

 

வெளியீடு :

 

யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

13 ( ப.எண் 6/1 ) இரண்டாவது தெரு

டாக்டர் சுப்பராயன் நகர்

கோடம்பாக்கம்

சென்னை 600 024

தொலைபேசி : 2483 6907 / 2834 3385

 

முதற்பதிப்பு  ஆகஸ்ட் 1960

 

News

Read Previous

முதுகுளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி : முதுகுளத்தூர்.காம் வாழ்த்து

Read Next

நோன்பு..மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *