இரு நண்பர்கள்

Vinkmag ad

இரு நண்பர்கள்

சுந்தர்ஜி பிரகாஷ்

நீண்ட காலம் சந்திக்க வாய்ப்பில்லாமல் போன என் நண்பனின் அப்பாவைச் சந்திக்க அப்பா விரும்பினார். பெரிய கோயில், அந்தச் சந்திப்புக்கு ஏற்றதாக இருக்கும் என முடிவானது. 

பெருவுடையார் சந்நிதியில் போய் வணங்க விருப்பம் இருந்த போதும், படிகள் ஏற இன்று ஆயாசமாக இருக்கிறது. அதனால் புல்வெளியில் அமர்ந்து சந்தித்து விட்டுத் திரும்பலாம் என்று விரும்பினார் அப்பா.
எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் இருவரும் கை கூப்பி வணங்கிக் கொண்டார்கள். கையைப் பிடித்துக் கொண்டார்கள். ‘ எத்தனை காலம் கழித்துச் சந்திக்கிறோம்?’ என்றார் நண்பனின் அப்பா. ஒவ்வொரு நாளாகக் கிழிபட்டு மெலிந்த நாட்காட்டி, என் நினைவில் தொங்கியது.
 ‘நான் அதிகம் பேசுவதில்லை. இவன்தான் நிறையப் பேசுவான்’ – என்னை நோக்கி கையைக் காட்டினார் அப்பா. புல்தரையில் காலை நீட்டி இருவரும் அமர்ந்து கொண்டார்கள். மாலை வெயில் சாய்வு நாற்காலியில் சரிந்து எங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.
அன்று கூட்டம் அதிகமாக இருந்தது. திடீரென நாதஸ்வரம், மேளதாளம் முழங்க, ஒரே வண்ணத்தில் புடவை அணிந்திருந்த பெண்கள் கூட்டம் தலையில் முளைப்பாரியைச் சுமந்தபடி கோயிலுக்குள் நுழைந்தது. வெளிநாட்டினர் அதைக் கண்டு வியந்து படம் பிடித்துக் கொண்டார்கள்.
பெரும்பாலும் குழந்தைகள் பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக அழுது கொண்டோ, ஏதோ நச்சரித்தபடியோ இருந்தார்கள். கோயில்களும், பள்ளிகளும் நமது குழந்தைகளை அதிகம் ஈர்ப்பதில்லை. ஒரு பூங்காவின் சுதந்திரம் ஒருவேளை குழந்தைகளின் விருப்பமாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.
தியானம் செய்வது உண்டா?
இல்லை. விநாயகர் அகவல், விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம் இவற்றைத் தினமும் பாராயணம் செய்வதுண்டு
இரவு உறக்கம் வருகிறதா?
நான் உறக்கம் வருவதற்கு முன்பே உறங்கி விடுகிறேன்.
தஞ்சாவூர் ரொம்ப மாறிப் போச்சுதானே?
சத்தமும், கூட்டமும் அதிகமாக இருக்கு. மக்களுக்கு நடுவே நம்பிக்கை குறைஞ்சு போச்சு. ஊர் அப்படியே தான் இருக்கு.
சுற்றியுள்ள மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இடையிடையே இவர்களின் துண்டு துண்டான உரையாடல் மிகவும் பிடித்திருந்தது.
இருவரின் வாழ்க்கையும் துயர் நிரம்பிய பக்கங்கள் மிகுந்தவைதான். பிறர் மூலம் ஒருவரின் வாழ்க்கையை அடுத்தவர் அறிந்து கொண்டிருந்த போதும், அவை குறித்து ஒரு வார்த்தை கூட இருவரும் சிந்தவில்லை. இந்த முதிர் நிலையை நான் கண்கள் கலங்க ரசித்தேன்.
இதுவல்ல, இதுவல்ல என்று அல்லாதவற்றை விலக்கி, நிலையான மெய்ப்பொருள் தேடும் தத்துவப் பாதையை ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வாசித்த நினைவு வந்தது. பேசிப் பேசி மனதை ரணமாக்கிக் கொள்ள விரும்பாமல், தவிர்க்க வேண்டிய துயரங்களைத் தவிர்த்து, நளினம் நிறைந்த வார்த்தைகளாலும், மௌனத்தாலும் தங்கள் பக்கங்களைப் பரிமாறிக் கொண்ட அந்த சந்திப்பில் அவர்கள் இருவரையும் விட நான் திளைத்துக் கொண்டிருந்தேன்.
இருவரும் கை கூப்பி விடைபெற்றுக் கொள்ளும் தருணம் வந்தது. சிரித்துக் கொண்டே கைகளைப் பற்றி விடைபெற்றார்கள். இருவரின் சந்திப்புக்கும் இடையில் இருபத்தி ஐந்து ஆண்டுகள் கரைந்திருந்தன. இருவரும் மீண்டும் சந்திக்கக்கூடிய முகாந்திரமும் அநேகமாக இல்லை.
அதிகம் ஏதும் பேசிக் கொள்ளாமல் – அவர்கள் சந்திக்காமல் கடந்து போன இடைவெளி குறித்து – எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொண்ட ஒரு நிறைவு இருவரின் மீதும் பூசப்பட்டிருந்ததாய் உணர்ந்தேன்.
 
சுந்தர்ஜி, எழுத்தாளர் – கவிஞர்.
தொடர்பு மின்னஞ்சல் முகவரி: sundargprakash@gmail.com
அலைபேசி எண் 94432 27895

News

Read Previous

முதுகுளத்தூரில் மழை

Read Next

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *