இயல்முறி குழந்தை வளர்ப்பு

Vinkmag ad
 
                                               – செ.அ.வீரபாண்டியன் –
http://musicdrvee.blogspot.in/                        http://musictholkappiam.blogspot.in/
 
நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலையின்றி,  தமது இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன், புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழ்வதிலும் குழந்தைப் பருவத்திற்கு ஈடான வேறு பருவம் கிடையாது. எவ்வளவு வயதானாலும் தமது படைப்பாற்றலையும், கற்பனைத் திறனையும் நன்கு பேணி இயற்கையோடும், சமூகத்தோடும் இயைந்து மகிழ்ந்து வாழ, நமக்குள் இருக்கும் குழந்தையை நாம் இழந்து விடக் கூடாது. (குறிப்பு கீழே) அவ்வாறு குழந்தையைப் போல ஆர்வத்துடன் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் தமது வாழ்வில் இயைந்து வாழ்பவர்கள் வயதானாலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.( ‘Creativity may play  key role in healthy aging. ‘ http://www.nbcnews.com/id/4893420/ns/health-aging/t/creativity-may-play-key-role-healthy-aging/#.U5lNz0DUqdE)
 
1940- களில் மலேசியாவில் சீனக் குடும்பங்களில்,  பெண் குழந்தைகளின் கால் மணிக்கட்டில் சிறு வயதிலேயே ஒரு வளையத்தை மாட்டிவிடும் பழக்கம் இருந்தது. குழந்தைகள் வளர்ந்து பெரிய பெண்கள் ஆனாலும், கால் மணிக்கட்டு, அவர்கள் வீட்டை விட்டு தாமாகவே ஓட முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும்.    குழந்தைப் பருவத்தில் உடல்ரீதியில் செயற்கையாக பாதிப்பினை மனிதர்களால் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
 
அது போலவே, தமிழ்நாட்டில் கடந்த 40 வருடங்களாக குழந்தைகளின் குழந்தைப் பருவ விலை மதிக்க முடியாத ‘இயல்பை’ முறித்து வளர்க்கும் பெற்றோர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் நகரங்களில் ( அதைப் பார்த்து இப்போது சிற்றூர்களிலும், கிராமங்களிலும் கூட) குழந்தை 2 வயது கடந்தவுடனேயே விளையாட்டுப் பள்ளியில் சேர்த்து ஆங்கில வழியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டு சூழலில் குழந்தையின் இயல்பை முறிக்கும் படலம் தொடங்குகிறது. தமது தாய்மொழியில் தமது பண்பாட்டு சூழலில் , நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலையின்றி,  தமது இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன் புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழும் இயல்பானது முறிக்கப்படுகிறது. பிறர் நம் குழந்தைகளைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையில், பெற்றோர்கள் தம் கவலையை  குழந்தைகள் மனதிலும் அதை விதைக்க‌,  ‘இயல்முறி குழந்தை வளர்ப்பு’ செயல்நுட்பம் தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது.
 
ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்புக்கேற்ற வகையில் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க,  அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் அறிவுரையாகும். பொருள் புரிந்தும் புரியாமலும் ஆங்கில நர்சரி பாடல்களை மனப்பாடம் செய்து ‘பெற்றோர் மகிழ்ந்து பெருமிதம் அடையும் அளவுக்கு, ‘ குரங்காட்டியிடம் பயின்ற குரங்கைப் போல ‘ நர்சரி வித்தைகள்’ செய்து காண்பிக்குமாறு குழந்தைகள்  ‘ஊக்குவிக்கப் படுகீறார்கள்/ மிரட்டப் படுகிறர்கள்’. அக்குழந்தை 6 வயதில் முதலாம் வகுப்பைக் கடக்கும் முன்னரே, தமது குழந்தைப் பருவ இயல்பை தொலைத்து விட்டு, ‘முதியவரை’ப் போல, குறுக்கு புத்தியோடும்(cunning), தம்மை எப்போதும் உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்ற முனைப்போடும் வளர்கிறார்கள்.
 
விடியற்காலை 5 மணிக்கே தூக்கக் கலக்கம் கூட கலையாத குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சீருடை அணிவித்து வேனில் ஏற்றும் வரை அவர்கள் கடைபிடிக்கும் கட்டாயப்படுத்தல் போக்கும் சரி, பள்ளி திரும்பிய குழந்தைகளைப் பின் படிக்க வைக்கும் போக்கும் சரி, மதிப் பெண்கள் குறைந்தால் பெறும் கோபமும், பிள்ளைகளை அடிப்பதும் சரி, குரங்காட்டியையும் விஞ்சி,  பெரும்பாலான தாய்மார்கள் ‘நன்கு வளர்க்கும் வெறியில்’ குழந்தைப் பருவ இயல்பை  முறித்து வருகிறார்கள்.. குரங்குகள் குரங்காட்டியை ‘தாஜா’ செய்து காரியங்கள் சாதிக்க முயல்வது போல, குழந்தைகளும் பயம் கலந்த ‘எஜமான’ பாசத்தை பெற்றோர்களிடம் காட்டுகிறார்கள். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய ‘இயல்பான’ அன்பானது,’இயல்முறி குழந்தை வளர்ப்பின்’ காரணமாக ‘எஜமானன்‍ – சேவகன்’ வகை அன்பாக, அல்லது ‘எஜமான – செல்லப் பிராணி’  வகை  அன்பாக‌ மாறிவிடுகிறது.
 
அந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனுபவித்திராத வசவுகளையும், தண்டனைகளையும்முதலாம் வகுப்பு சேரும் முன்னரே இக்குழந்தைகள் அனுபவித்து விடுகின்றனர். அந்தக் கால கல்லூரி மாணவர்களை விட, தப்பிப்பதற்காக பொய் சொல்லுதல், புறங்கூறுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட ‘கலைகளில்’ முதலாம் வகுப்பிலேயே அக்குழந்தைகள் நிபுணராகி விடுகிறார்கள். அடிப்படைக் கல்வி( primary education)  பயிலும்போதே, குழந்தைப் பருவ இயல்பைத் தொலைத்து ‘முதியவராகி’ விடுகிறார்கள்.
 
குழந்தைப் பருவத்தில் தமது இயல்பை ஒட்டி ‘சுதந்திரமாக’ மேற்கொள்ளும் பரிசோதனைகளே (விரும்பியவாறு பாடுதல், ஆடுதல், உடைத்தல், கிறுக்குதல், etc) , படைப்பாற்றல்/சுய உருவாக்கல் போன்றவற்றின் ஊற்றுக்கண்கள் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
  1. “When we attempt to foster children’s creativity, including in the visual arts, we need to observe the principle of freedom, which is generally an essential condition for all kinds of creativity. This means that the creative activities of children cannot be compulsory or forced and must arise only out of their own interests. “ http://lchc.ucsd.edu/mca/Mail/xmcamail.2008_03.dir/att-0189/Vygotsky__Imag___Creat_in_Childhood.pdf
 
  1. “If you look at the mavericks of science and technology you will see a pattern of creative outlets being a key to their childhood. Creative activity in childhood rewires your brain to think out-of-the-box according to the researchers.” http://www.psychologytoday.com/blog/the-athletes-way/201310/childhood-creativity-leads-innovation-in-adulthood
மதிப்பெண்கள் பெறுவதற்காக, அல்லது தாம் விரும்பும் கலை/விளையாட்டில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை அடித்து, மிரட்டி, கதற கதற அழவைத்து அதன் ‘இயல்பை’ முறிக்கும் முறையே தமிழ்நாட்டில் குழந்தை வளர்ப்பாக வளர்ந்து வருகிறது.
 
உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழி கல்வியற்ற ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல் (originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970‍களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு  பயிலும் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள். இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள். 
 
செல்லப் பிராணிகளாகள் போன்று வளர்ந்த குழந்தைகள், பெற்றோர்களிடம் காட்டிய எஜமான அன்பை, திருமண‌மான பின், ஆண் தன் மனைவியிடமும், பெண் தன் கணவனிடமும் காட்ட, பெற்றோர்கள் மனைமுடைந்து வாழும் நிலையும் வளர்ந்து வருகிறது. முதுகெலும்பு முறிந்தவர்கள் சுயமாக துணையின்றி நடமாட முடியாது. அது போல  ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்’  காரணமாக, அம்முறையில் குழந்தைகள் வளர்ந்து பெரியவரான பின்னும், மனரீதியில் முதுகெலும்ப‌ற்றவர்களாக, ‘எஜமான’ துணையுடன் வாழ வாண்டியவர்கள் ஆகி விடுகிறர்கள். 
 
விளையாட்டுப் பள்ளி (play school) முதல் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை ‘மதிப்பெண் ரோபோக்களாக’ கட்டாயப்படுத்தி, அதன் விளைவாக அதிக அழுத்தமும், எரிச்சலும் அகவயப் பட்ட பெண்களாக மாறி , தங்கள் சொந்த மகிழ்ச்சியையும் இழந்து ‘கனவுக்காக’வாழ்கிறார்கள். மிக ஆசையுடன் ‘செல்லப் பிராணி’ போல் வளர்த்த குழந்தைகள் வாலிப வயதில் தாய்மார்களின் கனவுகள் சிதையும் அளவுக்கு, பாரம்பரிய ஒழுக்கமின்றி திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்தில் வாழ்வது,  அல்லது திருமணத்திற்குப் பின் ‘எஜமான’ இடத்திலிருந்து பெற்றோர்களை அகற்றுவது,  அவர்களுக்கு அதிர்ச்சியாகிறது. அதனால் மனநோய் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும் அளவுக்கு பல தாய்மார்கள் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்ததற்காக மாணவர்களும் பெற்றொர்களும் தற்கொலை  செய்து கொள்ளும் போக்கும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
 
ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது. அதிலும் அவர்களின் இயல்புக்கேற்ற துறையை அடையாளம் கண்டு, அதற்கான திறமைகளை வளர்த்து சாதிப்பதும் தடை படுகிறது. பெற்றோர்களின் கனவுகளுக்காக அவர்களின் வாழ்வு ஒரு வகையிலான மனித ரோபோக்களாக அமைந்து விடுகிறது.
 
மேலே விளக்கியுள்ள ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்’ காரணமாக, பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகள் முக்கியத்துவம் இழந்த சூழலில்,  வளர்ந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆவது கடந்த 40 வருடங்களில் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் ‘பெரிய மனிதர்கள்’ ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் ‘புத்திசாலித்தனமாக’ பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத ‘முட்டாள்களே’, திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ‘குற்றவாளிகளாக’ காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் ‘சம்பாதித்த’ பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(blsack sheep)  வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைப் பின் தள்ளி, சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான்,  ‘இயல் முறி குழந்தை வளர்ப்பை’ ஒழித்து, சமூகத்தைக் காப்பாற்ற முடியும்.


குறிப்பு: பல‌ வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் மிகவும் வயதான தமிழ்ப் பெண்கள் குழந்தைகளைப் போல உற்சாகமாக மேடையில் நடனமாடியதைக் கண்டது மறக்க முடியாத மகிழ்ச்சியாக அமைந்தது. வயதானாலும் தனிமையில் இருக்கும் போது பாட வேண்டும் என்று தோன்றும்போது பாடுவதையும், நமது இயல்பை ஒட்டிய அசைவுகளோடு நடனமாடுவதையும் எந்த வயதிலும் நான் நிறுத்தியதில்லை. இயன்றவரை ‘போலியாக’ மனிதர்களுடன் பழகுவதைக் குறைத்து கொண்டு, இயற்கையில் உள்ள மரங்கள், பறவைகள் போன்றவைகளோடு ‘நெருக்கமாக’ நேரத்தை இயன்ற அளவு கூடுதலாக செலவழித்து வாழ்கிறேன்.நமக்குள் இருக்கும் குழந்தையை நாம் பாதுகாத்து வாழ இது செயல்சாத்தியமுள்ள வழியாக எனக்கு படுகிறது.

News

Read Previous

உமர் ராவுத்தர் மகள் வஃபாத்து

Read Next

சிவில் சர்வீசஸ் நினைவாக தபால்தலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *