இன்று சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்

Vinkmag ad

உடல் மண்ணுக்கு!
உயிர் தமிழுக்கு!

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார்
பிறந்த நாள்
27.9.1905

தமிழ்நாட்டில் 1938இல் உருவான இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் எழுப்பப்பட்டது. இது தமிழ்த் தேசியத்தின் முதல் எழுச்சிப் போராட்டமாகும். அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்த போராட்டம் மிகவும் கவர்ந்தது. தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பினார்.

உடனடியாக சென்னைக்கு குடும்பத்தோடு வந்தடைந்தார். அப்போது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் நீதிக்கட்சியால் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றம் பெற்றிருந்தது. அதனை விரும்பாத ஆதித்தனார் தனித்தமிழ் நாடு கோரும் இயக்கமொன்றை தனியாக உருவாக்க எண்ணினார். அதன்படி 1942இல் ‘தமிழ் ராச்சியக் கட்சி’யை தொடங்கினார். பின்னர் அதனை 1957இல் ‘நாம் தமிழர் இயக்கம்’ என்று பெயர் மாற்றினார்.

அதற்கான காரணத்த அவரே விளக்குகிறார்: “நான் அயர்லாந்து விடுதலை இயக்கத்தை அறிந்துள்ளேன். அதன் பெயர் ‘சின்பெயின்’. அதன் பொருள் நாங்கள் ஐரிஷ் மக்கள். பிரித்தானியரும் ஐரிஷ் மக்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் அது குறித்தது. அதுபோல் ‘நாம் தமிழர்’ என்று சொல்லும் போது நாங்கள் இந்தியர்களுமல்ல, திராவிடர்களுமல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதனால் தான் நாம் தமிழர் என்ற பெயரை தெரிவு செய்தேன்”. என்றார்.

1942ஆம் ஆண்டு ‘தமிழப்பேரரசு’ எனும் அரிய நூலை வெளியிட்டார். ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழர்கள் இழந்த ஆட்சி உரிமையைப் பெற்று, ஒரு பேரரசாக உலகத்தில் மீண்டும் விளங்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டது. அந்நூலில், ஆதித்தனார் கூறுகிறார்: “தமிழ்நாட்டின் வரலாற்றில் 600 ஆண்டு என்பது ஒரு கால வட்டம் ஆகும். அதாவது, தமிழர்களுக்கு 600 ஆண்டு வாழ்வும் அதன் பின் தாழ்வுமாக மாறி மாறியே வந்துள்ளது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை பிற நாட்டவர்களான வடவர்களைத் தோற்கடித்து தமிழர்கள் ஆண்டார்கள். வில்,புலி, மீன் கொடி உயரப் பறந்தது. முதல் 600 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பொற்கால வட்டமாகும்.

அடுத்து, கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள், பல்லவர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆட்சி செய்தனர். வில், புலி, மீன் கொடி மறைந்தது. வடமொழி வளர்ந்தது. இரண்டாவது 600 ஆண்டுகள் தமிழகம் அடிமைக்கால வட்டமாகும்.

அடுத்து, வடநாட்டு அரசர்களுக்கும், வடமொழிக்கும் அடிமைப்பட்ட தமிழினம் மீண்டும் 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசால் தலை நிமிர்ந்தது. மூன்றாவது 600 ஆண்டுகள் தமிழகத்தின் இரண்டாவது பொற்கால வட்டமாகும்.

அடுத்து கி.பி.14ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை தமிழினம் அடிமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விசயநகரப் பேரரசு, உருது நவாப்புகள் அரசு, ஆங்கிலப்பேரரசு, தில்லி இந்திப் பேரரசு என்று தொடர்ந்தாற் போல் வேற்றினத்தாரால் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது. இந்த 600 ஆண்டுகள் தமிழகத்திற்கு ‘கறுப்பு கால வட்டம்’ என்ற போதிலும் அதனை தற்போது கடந்து விட்டோம். தமிழகத்தின் பொற்காலம் மீண்டும் தோன்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ்மக்கள் விழித்து எழுவது உறுதி. சுதந்திர தமிழப் பேரரசு அமைத்திடுவோம்…

என்று விரிவாக அந்த நூலில் ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழன் தன்னை திராவிடன் என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.

உலகில் சிறுபான்மையினர் என்றாலே அதற்கு அடிமை என்று பொருள். இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை. சிங்களரோ பெரும்பான்மை. அதனால் தமிழர்கள் அடிமைப்படுத்தப் பட்டனர். அதுபோல் இந்தியாவில் இந்தி பேசுபவர் பெரும்பான்மை. தமிழ்நாட்டினர் சிறுபான்மை. அதனால் தில்லி ஆட்சிக்கு தமிழர்கள் அடிமையாக உள்ளனர்.

அறிஞர் அண்ணா எழுப்பும் திராவிட நாட்டிலும் தெலுங்கர்கள் அதிகமாக இருப்பர். தமிழர்கள் சிறுபான்மை ஆகி விடுவர். எனவே திராவிட நாடு கிடைத்தாலும் அதிலிருந்து விடுபட தமிழ்நாடு விடுதலையை நடத்துவேன் என்றும் முழங்கினார்.

சுதந்திரத் தமிழ்நாடு என்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றது என்று பாரத மாதா புத்திரர்கள் கேலி பேசி வந்தனர். அப்போது, “தமிழ்நாட்டை விடச் சிறியவைகளான 74 நாடுகள் முழு உரிமையுடன் வாழுகின்றன. அவை குண்டுச் சட்டியை விடச் சின்னஞ்சிறிய தேநீர் கோப்பைக்குள் குதிரை ஓட்டுவது கண்ணுக்குத் தெரிய வில்லையா?” என்று பதிலடி தந்தார்.

1958இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ மாநாடு நடத்தினார். அதில் இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினார். தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட நிலையில் அவரோடு இணைந்து (1960) பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அதில் கைது செய்யப் பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியை திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்ட முனைந்த போதும் கைது செய்யப்பட்டார்.

ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்கு ‘தமிழன்’ என்றும், இயக்க அலுவலகத்திற்கு ‘தமிழன் இல்லம்’ என்றும், இயக்க வார இதழுக்கு ‘தமிழ்க்கொடி’ என்றும், பதிப்பகத்திற்கு ‘தமிழ்த்தாய்’ என்றும் பெயர் சூட்டினார்.

 

News

Read Previous

தயிர்

Read Next

ஜப்பானிய நீர் சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *