இந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா?

Vinkmag ad

அறிவியல் கதிர்

இந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா?
பேராசிரியர் கே. ராஜு

1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நம்மிடம் வெகு சில அறிவியல் நிறுவனங்களே இருந்தன. அறிவியல் ஆய்வாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இன்று அறிவியல் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அப்போது ஒரே ஒரு அறிவியல் கல்லூரி மட்டுமே இருந்தது. அங்கு படித்து பி.எஸ்.சி. பட்டம் மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது.

நாம் ஏழை நாடாக இருந்தபோதிலும் 1958-லேயே நமது நாடாளுமன்றம் அறிவியலின் முக்கியத்துவத்தை பிரகடனம் செய்தது. 1980-களின் இறுதிக்குள் பல ஐஐடி-க்களும் வேறு பல அறிவியல் நிறுவனங்களும் தோன்றிவிட்டன. இன்று 700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் கணிசமான எண்ணிக்கையில் ஐஐடி-க்களும் நம் நாட்டில் இருக்கின்றன. ஐஐஎஸ்ஈஆர் அறிவியல் நிறுவனங்கள் வெகு விரைவிலேயே அறிவியல் ஆராய்ச்சிகளின் ஊற்றுக்கண்களாக மாறுவதற்கான வாய்ப்பு தோன்றியிருக்கிறது.

சீனாவும் இந்தியாவும் சேர்ந்து உலகில் நடந்து வந்த அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு சதவீத பங்களிப்பை மட்டுமே அளித்ததாக நேச்சர் இதழ் கட்டுரையில் சில ஆண்டுகளுக்கு முன் டேவிட் கிங் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்று சீனாவின் பங்களிப்பு வெகுவாகக் கூடியிருக்கிறது. உலக ஆராய்ச்சி வெளியீடுகளில் சுமார் 16 சதத்தை அடைந்து, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை சீனா எட்டிப்பிடித்திருக்கிறது. ஆய்வுகளின் அளவிலும் ஆய்வுத்தாள்கள் வெளியீட்டிலும் வெகு விரைவில் சீனா அமெரிக்காவை முந்திவிடும் நிலை தோன்றியிருக்கிறது. இந்தியாவின் பங்களிப்போ 2-லிருந்து 3 சதம் மட்டுமே கூடியிருக்கிறது. இந்திய ஆய்வின் தரம் ஏன் வெகுவாகக் கூடவில்லை? அறிவியலிலும் பொறியியலிலும் சில குறிப்பிட்ட  துறைகளிலாவது தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு இந்திய வல்லுநர்கள் ஏன் தோன்றவில்லை?

ஆசியப் பகுதியிலேயே வளர்ந்துவரும் போட்டி இதற்கு முக்கியமான காரணம். நிறுவனங்களின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் மத்திய மாநில அரசுகளின் தலையீடுகள் மற்றுமொரு காரணம். நமது கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. நிதியளிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் தேவை. தேசிய நானோ திட்டத்தில் விஞ்ஞானிகள் இலக்கு நிர்ணயித்து நிதியளித்த முறை நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது என்பது நமது சமீபத்திய அனுபவம். அறிவியல் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதி மிகவும் குறைவு.. மொத்த தேசிய உற்பத்தியில் 1 சதம் மட்டுமே அறிவியலுக்கு செலவழிக்கப்படுகிறது என்பதே பொதுவாக நம் விஞ்ஞானிகள் தொடுக்கும் குற்றச்சாட்டு. ஒட்டுமொத்த கல்விக்கே நாம் தேசிய உற்பத்தியில் 4 சதத்திற்கும் குறைவாகவே நிதி ஒதுக்குகிறோம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். உலக அறிவியல் வரைபடத்தில் உடனே நாம் முதல் இடத்தைப் பெற்றுவிடுவோமா? அல்ல, அல்ல, அறிவியலும் மேதமையும் நமது சமூகத்தில் உரிய மரியாதையைப் பெறுவதில்லை. நமது விழுமிய மதிப்பீடுகளில் அவை உயரிய இடத்தைப் பெறுவதில்லை. சில மிகத் திறமையான விஞ்ஞானிகள் நம்மிடையே எப்போதுமே இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் நாம் போதுமான அளவு கடினமாக உழைப்பதில்லை. ஏதாவதொரு முக்கியமானதொரு கண்டுபிடிப்பை அடைய மேலும் தீவிரமான முயற்சிகள் நிச்சயம் தேவை. அப்போதுதான் நம்மிடையே பெயர் சொல்லத்தக்க விஞ்ஞானிகள் இருப்பார்கள். உலகத்தர வரிசையில் நமது நிறுவனங்கள் இயல்பாக இடம் பிடிக்கும்.

அறிவியல் துறையில் பெரிய அளவில் திட்டமிடுவதில் உள்ள கவனத்தை சிறிய அளவில் நிறைவேற்றக் கூடிய அறிவியல் திட்டங்கள்பால் நாம் திருப்ப வேண்டும். பல நன்மைகளைத் தரக்கூடிய வெற்றிகளை தனிப்பட்டவர்கள் சோதனைச்சாலைகளில் நிகழ்த்தக் கூடிய சிறுசிறு கண்டுபிடிப்புகளே நமக்கு ஈட்டித்தரும். மூன்று விதமான அறிவியல் திட்டங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1) ஆற்றல், உடல்நலன், தண்ணீர் போன்ற மனிதர்களை அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்த அறிவியல்.
2) குறிப்பிட்ட இலக்கோடு வழக்கமாகச் செய்யப்படும் ஆய்வுகளை விட, உள்ஆர்வத்தின் உந்துதலினால் செய்யப்படும்  புதிய தேடல்களில் ஈடுபட்டு எதிர்காலத்தில் சிறந்த அறிவியல் தலைவர்களைத் தரக்கூடிய ஆய்வுகளில் கவனத்தைச் செலுத்துதல்.
3) தொழில், விவசாயம் ஆகிய துறைகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய தேசிய முயற்சிகளுக்குரிய அறிவியல்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அறிவியல் செய்திகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளையும் சென்றடைவதை நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
(2018 மே மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் பிரபல இந்திய விஞ்ஞானி பாரத ரத்னா பேரா. சி.என்.ஆர்.ராவ் எழுதிய கட்டுரை)

News

Read Previous

வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?

Read Next

Dubai : ரமழான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *