அறிவுச் செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

Vinkmag ad

kiaape-visuvanatham01

செல்வம் பலவகை, அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால் அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட ‘‘அறிவே செல்வம்’’ என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

எச்செல்வமும் இல்லாத ஒருவரிடம் அறிவுச் செல்வம் ஒன்றிருந்து விட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவான். எல்லாச் செல்வங்களையும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெறாதவனாக இருந்தால் அவன் எல்லா செல்வங்களையும் இழந்தவனாகிவிடுவான்.

எந்தச் செல்வத்தையும் உண்டு பண்ணும் ஆற்றல் அறிவுச் செல்வத்திற்கு உண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றல் இல்லை. இதனாலேயே வள்ளுவர் ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ எனக் கூறினார்.

செல்வங்கள் அனைத்துமோ, சில செல்வங்கள் மட்டுமோ அல்லது தனித்த ஒரு செல்வமோ அறிவற்ற மக்களிடத்தில் நிலையாது என்பது வள்ளுவர் கருத்து. இதனை ‘அறிவிலார் என்னுடையரேனும் இலர்’ என்பதால் நன்கறியலாம்.

பிற செல்வங்களைப் பெற்றவன் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அவ ற்றையும்  காப்பாற்றியாக வேண்டும். ஆனால் அறிவுச் செல்வமானது தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு தன்னைச் சார்ந்தவர்களையும் காத்து நிற்கும் ஒரு அருஞ் செல்வமாகும்.

பல செல்வங்கள் காலத்தால் அழியக்கூடியன. சில செல்வங்கள் பகைவரால் அழிக்கக் கூடியன. இன்னும் சில செல்வங்கள் தானே அழிந்துவிடக் கூடியன. ஆனால் அறிவுச் செல்வமோ எப்போதும் அழியாததாகும். எவராலும் அழிக்க முடியாததுமாகும்.

மனம் வேறு, அறிவு வேறு. ‘‘மனமே அறிவு’’ என மயங்குவர் சிலர். மனம் மயங்கும் அறிவு மயங்காது. மனம் கலங்கும் அறிவு கலங்காது. மனம் வாய்க்காலில் ஓடும் நீர் அறிவு அதன் இருகரைகள். மனம் குதிரை அறிவு குதிரையோட்டி. மனம் குதிக்கும். அறிவு அடக்கும். மனம் ஆசைப்படும். அறிவு அதைத் தடுக்கும். மனநினைவு மனம் நினைப்பது. மன்ம் நினைத்துக் கொண்டேயிருப்பது. மனிதன் மனதின் வழிச் செல்பவன் என்றாவான். அவ்வாறு செல்லாமல் அறிவு செலுத்தும் வழியிற் செல்பவரே ‘அறிஞர்’ எனப்படுவர்.

அறிவை அறியாதவர் சிலர். அறிந்தும் அதனை அடையாதவர் சிலர். அமைந்தும் அதனை வளர்க்காதவர் சிலர். வளர்த்தும் பயன்படுத்தாதவரோ பலர். இந்த நால்வகையினரையும் ‘அறிவிழந்தவர்’ என அறிவைப் பெற்றவர் கூறுவர்.

அறிவை இழந்தவர் மானத்தையும் இழப்பர். அவரை ‘உயிர் இழந்த உடல்’ எனக் கூறலாம். கூறிப்பயன்? உயிரிழந்த உடல் அழிந்தொழிந்து போய்விடும். இது அழிந்து ஒழியாமல் அலைந்து திரிந்து கொண்டேயிருக்கும். உயிரிழந்த உடல் காடுகளிற் கிடந்தால் நாய் நரிகளுக்கேனும் உதவும் இது நாட்டின் நடுவிற் கிடந்தாலும் யாருக்கும் எதற்கும் உதவாது. உயிரிழந்த உடலை அதன் உறவினர்கள் கண்டால் அதனை எரித்தோ, புதைத்தோ அழுது வருந்துவர். ஆனால் இதன் உறவினர்களோ எரிக்காமலும், புதைக்காமலும், அழாமலும் பார்த்துக் கொண்டேயிருப்பர். அதிகம் கூறுவானேன். உயிரிழந்த உடலுக்கு உற்ற நண்பர்கள் இருந்தால் மலர் மாலையிட்டுப் போற்றுவர். ஆனால் இதற்கு உற்ற நண்பர்கள் இருந்தால் வெறுத்து ஒதுக்கி விடுவர். ஆகவே, அறிவிழந்த மக்களை ‘உயிரிழந்த உடல்’ எனக் கூறுவது ஒருபோதும் பொருந்தாது.

அறிவுடையவர்கள் எத்தகைய மக்களையும் நட்பாக்கிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, பெற்ற அந்நட்பை குறைத்துக் கொள்ளாமலும், வளர்த்துக் கொள்ளாமலும் ஒரே மாதிரியாக வாழ்ந்து வருவர். அறிவிழந்த மக்களால் இது ஒரு போதும் இயலாது.

அறிவுடையார் கண்ணாற் காண முடியாததையும் காண்பர். காதால் கேட்க முடியாததையும் கேட்பர். அதுமட்டுமல்ல, பின்னால் என்ன வரும்? என்ன நேரிடும்? என்பதைக் கூட முன்கூட்டியே அறிவர். அறிவுச் செல்வத்தை இழந்தவர்களால் இது இயலாது.

வில் அம்புகளைக் கண்டாலும் வேல் கம்புகளைக் கண்டாலும் அறிவுடையோர் அஞ்சுவதில்லை. எதற்கும் அஞ்சாத இவ்வீரர்கள் பழிபாவங்களுக்குப் பெரிதும் அஞ்சி நடுங்குவர்.

அறிவுடையோர் அதிகமாகப் பேசுவதில்லை. குறைவாகப் பேசினும், எதிரியின் உள்ளத்திற் பதியுமாறு தெளிவாகப் பேசுவர். அது மட்டுமல்ல, எதிரியின் பேச்சுக்களுக்குள் மறைந்து கிடக்கும் உண்மையையும் எளிதில் அறிவர். அவர்கள் ஏமாறுவதில்லை. எவரையும் ஏமாற்றுவதுமில்லை.

உயர்ந்தவர்கள் என்று சொல்வதையெல்லாம் நம்புவதையோ, தாழ்ந்தவர்கள் என்று சொல்வதையெல்லாம் மறுப்பதையோ, நண்பர்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்பதையோ, பகைவர்கள் என்று சொல்வதையெல்லாம் வெறுப்பதையோ அறிவுடையவர்களிடம் காண முடியாது. இந்நால்வரின் சொற்களிலும் காணப்படுகிற உண்மைகளை மட்டும் ஆராய்ந்து வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அறிவுடையார்க்கு மட்டுமே உண்டு.

கண்ணாற் கண்டவையும் கூட அறிவுடையாரிடத்திற் பொய்த்துப் போவதுண்டு; கடலின் ஆழமான விடத்து நீர் நிறமாகத் தோன்றும். குறைந்த ஆழமுள்ள விடத்து நீர் பச்சை நிறமாகத் தோன்றும். அலையிலுள்ள நீர் முத்துப் போன்று வெண்மை நிறமாகத் தோன்றும். இரு கைகளிலும் அள்ளிப் பார்த்தால் நிறமற்று விளங்கும். உண்மை என்னவெனில் நீருக்கு நிறமில்லை என்பதே. இதனால் கண் கண்ட உண்மையைக் கூட அறிவு மறுத்தறிவதைக் காணலாம்.

 

காதாற் கேட்பவையும் கூட அறிவுடையாரிடத்திற் பொய்த்துப் போவதுண்டு. சிவாசி கணேசன் பாட்டு; காதில் விழும். நிழற்படத்திற் கண்டதும் கேட்டதும் கூட நினைவிற்கு வரும் என்றாலும் பாடியது அவரல்ல, வேறொருவர் என்பதும், அதுவும் இப்போது கேட்டது சொந்தக் குரலல்ல, ஒலிப்பதிவு என்பதுவுமே உண்மையாக விருக்கும். இதனால் காதுகேட்டு அறியும் உண்மையைக் கூட அறிவு மறுத்தறிவதைக் காணலாம்.

சாதி வேற்றுமை கூறுபவர் முன் ‘ஒன்றே குலம்’ என்பவரும், சமய வேற்றுமை கூறுபவர் முன் ‘ஒருவனே தேவன்’ என்பவரும், இட வேற்றுமை கூறுபவர் முன் ‘யாதும் ஊரே’ என்பவரும் இன வேற்றுமை கூறுபவர் முன் ‘யாவரும் கேளிர்’ என்பவரும் அறிவுடையோராகக் காட்சியளிப்பர்.

அறிவுடையோர் எதனையும் நன்கு ஆராய்ந்து பிறகே செய்யத் தொடங்குவர். அறிவற்றவர் ஆராயாது செய்யத் தொடங்கிவிட்டுத் துன்புறுவதோடு தமது செயலை எண்ணியும் துன்புறுவர்.

அறிவுடையோர் ஒருவர்க்கு வாக்களிப்பதாயின் நன்கு ஆராய்ந்த பின்னரே வாக்களிப்பர். வாக்களித்து விட்டார் உயிர் போவதானாலும் செய்து கொடுப்பர். அறிவற்றோர் ஆராயாது வாக்களித்துவிட்டுப் பின்னால் தாமும் செய்யாமல், அவரையும் செய்து கொள்ளவிடாமல் தாமும் துன்புற்று, அவரையும் துன்புறுத்தி வருவர்.

‘‘ஒரு அறிவாளி தன்னை அறிவாளி என நினைப்பது நல்லதல்ல’’ என்பது ஒரு அறிவாளியின் கருத்து. ‘‘அது தவறு’’ என்பது நமது கருத்து. தன்னை அறிவாளி என நினைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் மற்றவர்களை ‘அறிவற்றவர்கள்’ எனக் கருதுவது தான் தவறு. ஏனெனில் அறிவுள்ளவர் அறிவு அற்றவர் என எவரையும் பிரிக்க இயலாது ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறிது அறிவுடையவராகவே காட்சியளிப்பர். ‘‘எல்லாம் அறிந்தவரும், ஏதும் அறியாதவரும் இவ்வுலகம்மீது இல்லை’ என்ற தாயுமானவர் வாக்கும் இதனை மெய்ப்பிக்கும்.

ஒருவரை அறிவு அற்றவர் என்பதைவிட அறிவு குறைந்தவர் என்பதே நியாயமானதாகயிருக்கும். ‘‘செல்வம்’’ என்பது கூட அப்படியே ஐந்து ஆயிரம் உரூபாய் சொத்து உள்ளவன் ஒருவன் 500 உரூபாய் சொத்துள்ளவனுக்கு பணக்காரனே. ஆனால் அவன் 50 ஆயிரம் சொத்துள்ளவனுக்கு ஏழைதானே. அவனும் 5 இலட்சம் சொத்துள்ளவனுக்கு ஏழைதானே. இவர்களில் யார் செல்வர்? என்று எப்படிக் கூறுவது? அவ்வாறு அறிவில் செல்வத்தையும் செல்வத்தில் அறிவையும் காணும்பொழுதுதான் அது அறிவுச் செல்வமாகவே திகழ்கிறது.

திருக்குறளில் 40 ஆம் அதிகாரத்தில் கல்விச் செல்வத்தை வற்புறுத்திக் கூறிய வள்ளுவர் 42இல் கேள்விச் செல்வத்தை மிக உயர்த்திக் கூறிப் பின்னரே 43இல் அறிவுச் செல்வத்தை விளக்கிக் காட்டுகிறார். இதிலிருந்து அறிவுச் செல்வம் கல்விச் செல்வத்திலும், கேள்விச் செல்வத்திலும் மிகமிக உயர்ந்த செல்வம் என்றாகிறது.

தம்பி! நீ அறிவுடையவனாக இருக்க விரும்புகிறாயா? அப்படியானால் அறிவுச் செல்வத்தைப் பெறு! அது அந்த உயர்ந்தவிடத்தில் இருக்கிறது. இந்த ஒன்பது படிகளிலும் ஏறினால், அதனை எளிதாக அடையலாம்.

1. பெரியோரை வணங்கு

2. எளியோர்க்கு உதவு

3. பொருளைப் போற்று

4. உடலை ஓம்பு

5. நன்றாகப் படி

6. அதிகமாகக் கேள்

7. பொறுமையாகச் சிந்தி

8. குறைவாகப் பேசு

9. ஒழுக்கமாக நட.

ஆம் நட! வெற்றி பெறுவாய்! அப்பொழுதுதான் நீயும் அறிவுச் செல்வம் பெற்ற நன்மகனாய்த் திகழ்வாய்! உன்னைப் போன்ற அறிவுச் செல்வங்களை நிறையப் பெற்றால்தான் பெற்ற நாடும், வளர்த்த மொழியும் சிறப்படையும்.

வாழட்டும் தமிழகம்!

வளரட்டும் தமிழ்மொழி!

thamizh-01


– முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் 

News

Read Previous

மெர்ஸ் வைரஸ் குறித்து ………

Read Next

அம்பேத்கர் ஒரு தேசபக்தர்! – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

Leave a Reply

Your email address will not be published.