அறிவியல் போராளி பி.எம்.பார்கவா

Vinkmag ad

அறிவியல் கதிர்

அறிவியல் போராளி பி.எம்.பார்கவா 
பேராசிரியர் கே. ராஜு

அறிவியல் சிந்தனையாளராக மட்டுமின்றி ஒரு போராளியாகவும் வாழ்ந்த புஷ்ப மித்ர பார்கவா (வயது 89) ஆகஸ்ட் 1 அன்று ஹைதராபாதில் உள்ள தன் இல்லத்தில் மரணம் அடைந்தார். மாற்றுக்கருத்துகளுக்கு இடம் இல்லாத சமூகம் ஜனநாயக சமூகமே அல்ல என்பதில் உறுதியாக இருந்தவர் பார்கவா.
லக்னோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பி.எச்.டி. பட்டம் முடித்த பார்கவா 1950-களில் ஹைதராபாத் வந்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப சோதனைச்சாலைகளில் பணி புரியத் தொடங்கினார். பின்னர் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட மாடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகம் சென்றார். 1958-ல் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் பணிபுரிய ஹைதராபாத் திரும்பினார். அங்கு 1977-ல் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology – CCMB)  தொடங்கப்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் பார்கவாதான். சிசிஎம்பி-யின் நிறுவன இயக்குநராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். உயிரணு, மரபணு, மூலக்கூறு உயிரியல் ஆகிய துறைகளில் மக்களுக்குப் பயன்படுத்தும் விதத்தில் சிறப்புமிக்க ஆராய்ச்சிகளைச் செய்ததோடு அறிவியல் நிறுவனத்திற்கு தொழில் துறையினருடன் நெருக்கமான தொடர்பினையும் அவர் ஏற்படுத்தினார். 1986-ம் ஆண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உயிரித் தொழில்நுட்பத் துறை ஒன்றையும் ஏற்படுத்த அவர் காரணமாக இருந்தார். “மரபணுப் பொறியியல்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திய முன்னோடிகளில் பார்கவா முக்கியமானவர். வாழ்நாள் இறுதிவரை அறிவியல் பிரச்சினைகளிலும் கொள்கை உருவாக்கத்திலும் பார்கவா ஈடுபாட்டினைச் செலுத்தி வந்தார். பன்னாட்டு விதைக் கம்பெனிகளையும் இந்தியாவில் மரபணு மாற்றப் பயிர்கள் புகுத்தப்படுவதையும் அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். மரபணு மாற்றப் பயிர்கள் இல்லாமலேயே நம்மால் தேவையான அளவுக்கு உணவு உற்பத்தி செய்ய முடியும் என்பது அவர் கருத்து.
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, எம்.எம்.கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டனர். மாட்டிறைச்சியை வைத்திருந்ததாகக் கூறி உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் முகமது அக்லாக் அடித்தே கொல்லப்பட்டார். இம்மாதிரி வெறிச்செயல்களுக்கு எதிராக போராட்டங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. 2015-ம் ஆண்டில் நாட்டில் பெருகிவரும் சகிப்புத்தன்மைக்கு எதிராக தங்கள் மறுப்பைத் தெரிவிக்கும் விதத்தில் விஞ்ஞானிகளும் எழுத்தாளர்களும் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பித்தரத் தொடங்கினர். 1986-ல் தான் பெற்ற பத்ம பூஷன் விருதை 2016 நவம்பரில் அரசுக்கு திருப்பி அனுப்பி அந்த இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கியவர் பார்கவா. ஆனால் அறிவாளிகளின் எதிர்ப்பைப் பற்றி மனச்சாட்சி மரத்துப்போன பாஜக அரசு அலட்டிக் கொள்ளவில்லை.
பகுத்தறிவுக்கு எதிரான கருத்துகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்ப்பதில் சோர்விலா போராளியாக பார்கவா விளங்கினார். தனது கருத்துகளில் உறுதியாகவும் நேர்மையாகவும் இருந்த அவர் எதிர்ப்புகளைக் கண்டு சிறிதும் அஞ்சாதவராகவும் இருந்தார். 1964-ல் “தி சொசைட்டி ஃபார் சைன்டிஃபிக் டெம்பர்” என்ற அறிவியல் கண்ணோட்டத்திற்கான ஓர் அமைப்பை அவர் ஏற்படுத்தினார். ஆதி காலத்திலேயே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் நம்மிடம் இருந்தன, புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி நாம் செய்தததற்கு அத்தாட்சிதான் பிள்ளையார் என்ற போலி அறிவியல் பெருமைகளை அவர் சாடினார். 1966-ம் ஆண்டில் கோல்வால்கர் பசுவதைத் தடைச்சட்டம் கேட்டு நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, பார்கவாவின் தலைமையில் அதற்கு எதிராக ஒரு நிகழ்ச்சி நடந்தது. சங்பரிவாரத்தின் கோபத்தை அன்றே அவர் எதிர்கொண்டார். இந்திய அறிவியல் அமைப்பின் போதாமைகளை எடுத்துக் காட்ட தனது சகா சந்தனா சக்ரபர்த்தியுடன் இணைந்து The Saga of Indian Science since Independence என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
இயற்கையாக  பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாத இணையருக்கு செயற்கையாக இனப்பெருக்கம் செய்து கொள்ள உதவும் தொழில்நுட்பங்களுக்கான மசோதா தயாரிக்கும் குழு 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக பார்கவா இருந்தார். வாடகைத்தாய் (கட்டுப்பாடு) மசோதாவிற்கு 2016-ம் ஆண்டில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வாடகைத்தாய்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பார்கவா உறுதியாக இருந்தார். பார்கவா இந்தியாவுக்கு உயிரணு, மூலக்கூறு உயிரியல் பற்றிய நவீன பார்வையைக் கொணர்ந்தார். பொதுமக்களுக்கு அறிவியலைக் கொண்டுசெல்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். அறிவியல் கொள்கைகள் வகுக்கப்பட அரசுக்கு உறுதுணையாகவும் அவர் இருந்தார்.
பார்கவாவின் வரலாற்றை ஆழ்ந்து  படித்து மாணவர்களிடையே கொண்டு செல்லும் கடமை அனைத்து ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.
(உதவிய கட்டுரை : ஆகஸ்ட் 2 தி ஹிண்டு நாளிதழில் ஜேக்கப் ரோசி, செரீஷ் நானிசேத்தி ஆகியோர் எழுதிய கட்டுரை)

News

Read Previous

மக்கள் விஞ்ஞானிகளை மறக்கலாமா!

Read Next

விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *