அறிவியலில் உண்மையும் போலியும்

Vinkmag ad

அறிவியல் கதிர்
அறிவியலில் உண்மையும் போலியும்
பேராசிரியர் கே. ராஜு
மதச்சார்பின்மை பற்றிப் பேசினால் அது போலி மதச்சார்பின்மை என்றும் தாங்கள் சொல்வதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்றும் பேசுவோர் இருப்பது மாதிரி, அறிவியலிலும் உண்மை எது, போலி எது என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இல்லையெனில், போலி அறிவியல் அவர்களை ஆட்கொண்டுவிடும். இரு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, தங்களது சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அறிவுக்குப் பொருந்திவரக் கூடிய வாதம் எது என்பதை அவரவர் முடிவு செய்ய வேண்டிய காலம் இது.
கடந்த ஆண்டு நடந்த இந்திய அறிவியல் காங்கிரசின் 102வது மாநாட்டில் “சம்ஸ்கிருதம் வழியாக பண்டைய விஞ்ஞானங்கள்” என்ற தலைப்பில் ஓர் அமர்வினை மும்பை பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை ஏற்பாடு செய்திருந்தது. வான்வழிப் பயணத் தொழில்நுட்பம் பற்றி கேப்டன் ஆனந்த் போடாஸ் என்பவர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார். அவர் ஒரு விமான ஓட்டியாக இருந்து ஓய்வு பெற்றவர். நவீன அறிவியலை அறிவியலுக்குப் புறம்பானது என்று அவர் ஒதுக்கிவிட்டதோடு பண்டைக்கால இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் ஒரு விமானம் பற்றி விலாவரியாக விவரித்தார். “அது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு, ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு காற்றில் பயணிக்கக்கூடியதாக இருந்தது. அந்நாட்களில் விமானங்கள் மிகப் பெரியதாக இருந்தன. அவை இடதுபுறமாகவும் வலது புறமாகவும் மட்டுமல்ல, பின்பக்கமாகவும் செல்லக்கூடியவை. ஆனால் நவீன விமானங்களோ முன்னோக்கி மட்டுமே பயணிக்கக்கூடியவை” என்று பேசினார். பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறைத் தலைவர் “போடாஸ் பேசியதை நாம் உண்மையென எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம், அவர் ஒரு விமான ஓட்டியாக இருந்தவர்” என்று போடாஸின் கட்டுரைக்கு நற்சான்றிதழ் கொடுத்தார்.
இங்குதான் உண்மை அறிவியலுக்கும் போலி அறிவியலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெளிப்படுகிறது. ஒரு கருத்து அறிவியல்ரீதியான சோதனைகளுக்குப் பிறகு நிலைநாட்டப்பட்டுள்ளதா, தெளிவான சான்றுகள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பதுதான் அறிவியல். மாறாக அவர் சொன்னார், இவர் சொன்னார், அவர் எவ்வளவு பெரிய மனிதர், அவர் சொல்வது தவறாக இருக்க முடியுமா என்றெல்லாம் பார்த்து முடிவு செய்வது அறிவியல் உண்மையாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. பாரத்வாஜ முனிவரால் சுப்பராய சாஸ்திரி என்பவருக்கு போதிக்கப்பட்டவற்றை உள்ளடக்கிய “வைமானிக சாஸ்திரா” என்ற சம்ஸ்கிருத நூலை  அடிப்படையாகக் கொண்டுதான் போடாஸ் இப்படிப் பேசினார். சாஸ்திரியார் 1866-லிருந்து 1940 வரை வாழ்ந்தவர். பாரத்வாஜ முனிவர் 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். பிறகு எப்படி அவர் இவருக்குப் போதித்திருக்க முடியும்? பெங்களூரு ஐஐடி வான்வழிப் பயணத்துறைத் துறையைச் சேர்ந்த ஐந்து பேராசிரியர்கள் வைமானிக சாஸ்திராவை ஆழ்ந்து படித்து, சாஸ்திரி பிறந்த ஊருக்கே சென்று ஆய்வு செய்து 1974 சயன்டிபிக் ஒபினியன் இதழில் தங்கள் முடிவினைப் பதிவு செய்தனர். “வைமானிக சாஸ்திரா என்ற நூல் ஆதிகாலத்தில் இயற்றப்பட்ட புனித நூல் அல்ல. 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நவீன சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதே தவிர, வேதகாலத்து சம்ஸ்கிருதத்தில் அல்ல. சாஸ்திரியார் மெய்மறந்த நிலையில் (psychic trance) இருந்தபோது பாரத்வாஜ முனிவர் அவரிடம் வந்து எழுதுமாறு ஆணையிட்டவற்றையே தான் எழுதி நூலாக வெளியிட்டதாகக் கூறுகிறார் சுப்பராய சாஸ்திரி. நூலில் விவரித்தபடியான விமானம் பறந்திருக்க வாய்ப்பே இல்லை. நூலாசிரியரின் கற்பனையிலிருந்து உதித்தவையே இத்தகைய விமானங்கள்” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்திய அறிவியல் காங்கிரசிலேயே துணிச்சலாக இப்படியொரு “ஆய்வறிக்கையை” ஒருவரால் எப்படி சமர்ப்பிக்க முடிகிறது? மரபணு அறிவியலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் ஆதிகாலத்திலேயே நம்மிடம் இருந்தன என்று பிரதமரே வந்து துவக்கவுரை நிகழ்த்தும் ஒரு மாநாட்டில் போடாஸ் இப்படியொரு “அறிவியல் உரை” நிகழ்த்துவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

News

Read Previous

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

Read Next

நமது வேர்களை தெரிந்து கொள்வோம் – டாக்டர் ராஜா முஹம்மது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *