அதிக சத்தத்திலிருந்து விடுதலை எப்போது…?

Vinkmag ad

அறிவியல் கதிர்

அதிக சத்தத்திலிருந்து விடுதலை எப்போது…?
பேராசிரியர் கே. ராஜு

சத்தம் வாழ்வியல் நடைமுறைகளில் ஒன்றாக நம்மை ஆட்கொண்டுவிட்டது. நாம் விட்டுவிலக வேண்டிய நடைமுறைகளில் “தேவைக்கு மீறிய அதிக சத்தம்” மிக முக்கியமானது. இந்த சத்தம் நம்மைப் படுத்தும் பாட்டினைப் பற்றி தி ஹிண்டு நாளிதழில் (ஜூன் 23) சுந்தர் சாருக்கை என்ற பெங்களூரு சிந்தனையாளர் எழுதியதை அப்படியே தருகிறேன்.
சாலைகளில் நாம் நடக்கும்போது பலவிதமான ஹார்ன் சத்தங்கள் காதில் விழாமல் ஓரடி கூட எடுத்துவைக்க முடிவதில்லை. சத்தம் எழுப்புவதன் மூலமாகவும் எப்போதும் சத்தம் நம்மைச் சுற்றி இருப்பதன் மூலமாகவுமே நாம் உயிரோடு இருப்பதை நாமே நம்பமுடியும் என்ற நிலைக்கு அநேகமாக வந்துவிட்டோம். பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்று எச்சரிப்பது மாதிரி, “சத்தம் உங்கள் காதுகளுக்கு மட்டுமல்ல, மன அமைதிக்குமே கேடானது” என்ற எச்சரிக்கை வரிகளை எழுதி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கற்பனைக்கெட்டாத விதங்களில் சத்தம் நம்மைக் கட்டி ஆள்கிறது. ரயில் வண்டிகளில் பயணிக்கும்போது பிற மனிதர்களின் சத்தமான உரையாடல்களை (சிலர் போனில் பேசும்போது இவர் போனில்தான் பேசுகிறாரா அல்லது அடுத்த முனையில் இருப்பவரிடம் நேரடியாகவே பேசுகிறாரா.. போனில் பேசினால் என்ன என்ற கேள்வி கூட நமக்குள் எழும்)… அவர்கள் வைக்கும் சத்தமான பாடல்களை அல்லது சினிமா வசனங்களை நாம் கேட்டே  ஆகவேண்டும். அண்மையில் நான் அப்படிப் பயணித்தபோது ஒரு வயதான மனிதர் தன்னுடைய அலைபேசியில் வேத மந்திரங்களை சத்தமாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். இருவர் தங்களுடைய வர்த்தகம் சம்பந்தமாக சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒரு இளம் பெண் அலைபேசியில் பேசுகையில் அவ்வப்போது சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண் சாயி பாபா பஜனைப் பாடல்களை சத்தமாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். குழந்தைகள் போட்ட சத்தம் வேறு. அமைதியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மற்ற பயணிகள் எனக்குக் கொடுக்கவில்லை.
யார் வீட்டுக்காவது நான் செல்லும்போது இப்படிப்பட்ட சத்தங்களைச் சந்திக்கிறேன். வரவேற்பறையில் சினிமா பாடல்களை டிவி சத்தமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது..அடுத்த அறையில் ஒரு சிடி பிளேயர் பஜனைப் பாடல்களை சத்தமாக பாடிக்கொண்டிருக்கிறது..இன்னொரு அறையில் குழந்தைகள் கம்ப்யூட்டர் கேம் விளையாடுகிறார்கள்.. துப்பாக்கிக் குண்டுகள், வெடிகுண்டுகள் சத்தம் காதைக்  கிழிக்கிறது..யாருடனாவது பேச வேண்டுமென்றால் இந்த சத்தங்களுக்கும் மேலாக நான் கத்த வேண்டியிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுகளை டிவியில் பார்ப்பது என் வழக்கம். அண்மையில் பெங்களூரில் நடந்த இறுதிச் சுற்றை நேரடியாகப் பார்க்கப் போனேன். மிக அதிக சத்தத்தில் இசை ஸ்டேடியத்தை ஆக்கிரமித்திருந்தது. மாட்ச் ஆரம்பித்ததும் இந்த சத்தம் ஓயுமென்று நினைத்தேன். அதுதான் இல்லை. விளையாட்டு நடக்கத் தொடங்கியதும் இசையுடன் பார்வையாளர்களின் நடனமும் சேர்ந்து கொண்டது. இந்த லட்சணத்தில்  அவர்களது கூத்தும் இசையும்  ஓகேயா என்று பிற பார்வையாளர்களைப் பார்த்து மைக்கில் சத்தமாகக் கேள்விகள் வேறு! பல பார்வையாளர்களும் விசிலடித்து விதவிதமான சத்தங்களை எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். கிரிக்கெட் விளையாட்டு பின்னுக்குப் போய்விட்டது. இவர்களின் சத்தம்தான் கூடிக்கொண்டே வந்தது.
எப்.எம்.ரேடியோ நிலையங்களுக்கும் இந்த சத்த ஃபோபியா பரவிவிட்டது. ஒரு பாட்டையும் அமைதியாகக் கேட்க முடியாது. அதனுடன் கூடவே சத்தமான உரையாடல்கள், செயற்கையான மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் சேர்ந்தேதான் கேட்டாக வேண்டும். டிவி சீரியல்களிலும் இந்தப் போக்கு நுழைந்துவிட்டது.
சத்தம் என்பது நமது வாழ்க்கையில் சேர்ந்துவிட்ட புதிய குப்பை. அது தயாரிக்கப்படுகிறது.. உடனே அழிக்கப்படுகிறது. எப்போதும் சத்தங்களால் சூழ்ந்தபடி இருப்பது நமது உடல்நிலையைப் பாதிப்பது மட்டுமின்றி சமூக நலனுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது. அதிக சத்தம் என்பதே ஆதிக்கத்தின் மொழிதான். ஒருவர் அமைதியாக இருந்தால் அது மன அழுத்தத்தின் அறிகுறியாகவும் சமூக விரோத அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. பள்ளியிலும் வீட்டிலும் அமைதியாக இருப்பது அல்லது இருக்கச் சொல்வது ஒரு தண்டனையாகத் தரப்படுகிறது. தன்னை அதிதீவிரமாக முன்னிறுத்திக் கொள்வது வெற்றிக்கான ஒரு மந்திரமாகிவிட்டது. தியானம் என்பது தனக்குள் அமைதிக்கான தேடல் எனில், பொதுவெளியில் சத்தங்களைக் குறைப்பது சமூகம் தன்னை அறிந்துகொள்வதற்கான தேடல் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

News

Read Previous

இறைவனிடம் கையேந்துங்கள்

Read Next

தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *