அண்டத்தில் சூரியனே ஒரு கடுகுதான்..!

Vinkmag ad
அறிவியல் கதிர்

2007-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்

அண்டத்தில் சூரியனே ஒரு கடுகுதான்..!

பூமி, உலகம் என்றால் புரிகிறது. அண்டம் என்றால் என்ன?

நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வரும் எட்டு கோள்களில் ஒன்று. இந்த கோள்களில் ஒவ்வொன்றையும் பல துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. சூரியன், கோள்கள், துணைக்கோள்கள் எல்லாம் சேர்ந்ததே சூரியக் குடும்பம். சூரியன் ஒரு நட்சத்திரம். அதாவது தானாகவே ஒளிவிடக் கூடியது. கோள் என்பது ஒளியைப் பிரதிபலிக்குமே தவிர, தானாகவே ஒளிவிடக் கூடியதல்ல. சந்திரன் பூமியைச் சுற்றிவரக் கூடிய ஒரு துணைக்கோள். சூரியன் பூமியிலிருந்து 150 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) கி.மீ. தூரத்தில் உள்ளது. சூரியனுடைய விட்டம் சந்திரனுடைய விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அப்படியெனில் பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டுமே ஒரே அளவுள்ள வட்டங்களாகவல்லவா தெரிகின்றன? அது எப்படி? சூரியன் சந்திரனைப் போல பல மடங்கு பெரிதாகவல்லவா தெரியவேண்டும்? இயற்கையில் அமைந்துள்ள ஓர் ஆச்சரியமான ஒற்றுமைதான் இதற்குக் காரணம். சந்திரன் பூமியிலிருந்து இருக்கும் தூரத்தைப் போல சுமார் 400 மடங்கு தூரத்தில் சூரியன் இருக்கிறது ! இதனால்தான் இரண்டும் ஒரே அளவுள்ளவையாக நமக்குத் தோன்றுகின்றன. ஒரு பொருளின் அளவு உண்மையில் ஒன்றாக இருக்கும். ஆனால் அது நம்மிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அதனுடைய அளவு `மாறும். அதாவது அப்படித் தோற்றமளிக்கும். அவ்வளவு பெரிய சூரியனை கண் பக்கத்தில் ஒன்றிரண்டு கைவிரல்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு மறைக்க முடிவது இதன் காரணமாகத்தான். தூரத்தில் வரும் லாரி ஒரு புள்ளியாகத் தெரிவதும் இப்படித்தான்.

ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட நட்சத்திரங்கள் சேர்ந்த தொகுப்பிற்கு “விண்மீன்திரள் (galaxy)” என்று பெயர். நமது சூரியக் குடும்பம் உள்ள  விண்மீன்திரள் “பால் வீதி (milky way)” என்று அழைக்கப்படுகிறது. பால் வீதியில்  சுமார் 400 பில்லியன் ( ஒரு பில்லியன் 1000 மில்லியனுக்கு சமம்) நட்சத்திரங்களும் அவற்றின் கோள்களும் உள்ளன. சூரியன் பால் வீதியில் ஒரு நட்சத்திரம்தான். பால் வீதியின் அகலம் சுமார் ஒரு லட்சம் ஒளி வருடங்கள். ஒளி வருடம் என்பது கி.மீ. மாதிரி தூரத்தை அளக்க உதவும் ஒரு அளவுகோல். ஒளி ஒரு விநாடியில் 3 லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடந்து விடும். அப்படியெனில் ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் செல்லும் எனக் கணக்குப் போட்டுப் பாருங்கள். (3 x 60 x 60 x 24 x 365 லட்சம் கிலோமீட்டர்கள் ! பள்ளியில் படிக்கும் உங்கள் மகனையோ, மகளையோ கேட்டால் கணக்கிட்டுச் சொல்வார்கள்).  இந்த தூரமே ஒரு `ஒளி வருடம்! ஒரு லட்சம் ஒளிவருடம் எனில்..? நமது கற்பனைக்கு எட்டாத தூரம்!

இதைப் புரிந்து கொள்ள ஒரு கணக்கு : பால் வீதியை 130 கி.மீ. உள்ளதாகச் சுருக்கினால், அதில் சூரியக் குடும்பத்தின் அகலம் வெறும் 2 மி.மீ. அளவே இருக்கும்!

நமது பால்வீதியைப் போல லட்சக்கணக்கான விண்மீன்திரள்கள் உள்ளன.  எல்லா விண்மீன்திரள்களும் சேர்ந்ததுதான் “அண்டம் (universe) ”. இப்பொழுது   சொல்லுங்கள். அண்டத்தோடு ஒப்பிடும்போது சூரியனை ஒரு கடுகு எனக் கூறலாமல்லவா?

News

Read Previous

பொங்கல் வாழ்த்துப்பா!

Read Next

விசுவாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *