இன்பாவின் நூல் வெளியீடு!

Vinkmag ad

இன்பாவின் நூல் வெளியீடு!

கவிஞர் இன்பா எழுதி  வெளியீடு கண்ட 4 நூல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை! அவற்றின் சிறப்பைப் பாராட்டியவர்கள் தமிழகத்திலிருந்து வந்த நால்வர். நூல்களின் சிறப்பில் அவர்கள் பெருமைப் பட்டுக் கொண்டனர். ஒரு சிங்கப்பூர் கவிஞருக்கு இத்தனை பெருமையா என நம் நெஞ்சமும் விம்மித் தணிந்தது. உமறுப் புலவர் தமிழரங்கில் இன்று மாலை நடந்த இன்பாவின் நூல்கள் அறிமுக விழா ரசனைக்குரியது.

‘உணர்வுகளின் ஊர்வலம்’ என்று வாயாரப் புகழ்ந்தார் ஒருவர் அவர் அழகப்பா கல்லூரியின் முன்னாள் துணை வேந்தர், முனைவர் எஸ்.சுப்பையா. சொந்த அனுபவங்களையும் படைப்பிலக்கியமாக்கத் தெரிந்த கவிஞர் இன்பா, வரலாறு எழுதும் எதிர் காலக் கவிஞர் என்றார்.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரனின் கண்களில் இன்பா ஒரு திறன்மிகு கவிஞராக மட்டுமன்றி, நம் சிங்கப்பூரின் எதிர்கால கவிமாமணிகளை உருவாக்கும் மாமணியாகவும் தென்பட்டார். தன்னைப் போன்ற கவிதாமணிகளை உள் நாட்டில் வளர்த்து, தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் காப்பாற்ற முன் வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அடுப்பங்கரையிலும், களத்து மேடுகளிலும் காலத்தை ஓட்டி, சமுதாய அடிமைகளாக இருந்த பெண்ணினத்தைப் புதுமைப் பெண் என்று நெஞ்சுணர்வோடு தூக்கி வைத்துப் போற்றிப் புகழ்ந்த பாரதியையும், பெண்ணினத்தின் உயர்வுக்குத் தன் இறுதிக் காலத்தை அர்ப்பணித்த பெரியாரையும் நினைவுபடுத்திய தமிழ்ச் செல்வி கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி, சிங்கைப் பெண்களின் அடிநாளைய கஷ்ட நஷ்டங்களை தன் படைப்புகளில் அடிநாதமாகப் பதித்திருக்கும் கவிஞர் இன்பா, இங்கு மட்டுமல்ல எங்கள் பூமியிலும் கொடி நாட்டவிருப்பவர் என்று வாயாரப் புகழ்ந்தார். ஆசிரியரின் ‘சவப் பிரசவம்’, ‘சாம்பல் மூட்டை’ போன்ற அசாதரண ஆழக் கருத்துடைய சொல்லாடல்களை, அனுபவ எழுத்தாளி ஆண்டாள் வெகுவாக சிலாகித்தார். கவியரங்கங்களில் இன்பா பார்த்த அசாதாரணப் பார்வைகளை ஆழப் பார்த்தார் ஆண்டாள். கூனியின் தனிப் போக்கு, யாரைக் கேட்டு மணிமேகலையை பிட்சினி ஆக்கினாய்? என மாதவியிடம் கேள்வி எழுப்பும் கவிதா நெஞ்சம்….இப்படி நிறையப் புகழ்ந்தார், நேரச் சிக்கலில் மாட்டிக் கொண்ட கவிதாமணி ஆண்டாள். ஆண்டாளுக்கு மகாகவி பாரதி தான், வழிப் பாதை காட்டும் ஆசான். அவ்வப்போது அவனை நெஞ்சாரத் தழுவி மகிழ்கிறார்.

மொழிக்குள் இன்னொரு மொழி கண்பது தான் கவிதை என்று தொடங்கிய தமிழகத்தின் சிறந்த கல்வியாளரும், மக்கள் கவிஞருமான தங்கம் மூர்த்தி, படைப்பு மனம் கொண்ட இன்பாவின் சொல்லாற்றலை அனுபவித்துச் சுகமாகப் பாராட்டினார். வார்த்தைகளைப் பிளந்து, வைரங்களை எடுக்கும் மகத்தான சக்தி படைத்த கவிஞனின் ஆற்றலைப் புகழ்ந்த கவிஞர், சின்னச் சின்ன கவிதையில், சின்ன சின்ன வார்த்தைகளில் தமிழின்பம் காட்டும் கவிஞர் இன்பாவின் ஆற்றலை வெகுவாகப் புகழ்ந்தார். இசையின் பெருமை உணர்த்தும் அக்பர்-தான்சேன் கதை அருமை. ஒட்டுமொத்த சமுதாயத்தைப்பற்றி, சிறு சிறு அசைவுகளின் வழி ‘ஹைகூ’ கவிதைகள் உணர்த்தும் ஆழுணர்வுகளை அவர் வெளியிட்ட விதம் சிறப்பு.

நிகழ்ச்சியின் முன் பகுதி அம்சங்கள் சற்று நீளம் தான் என்றாலும், சலிப்புத்தட்டா முறையில் அமைந்தன. கலாமஞ்சரி குழுவினரின் திருக்குறள் நடனம், இளஞர்கள் பங்கு கொண்ட இன்பாவின் கவிதைகள், தடம் தவறாத் தயாரிப்பான ‘பெண் பாவாய்’ அனைத்துமே நன்கு ரசிக்கப்பட்டன.

அழைப்பில் இடம் பெறாத நிகழ்ச்சி ஒன்று, வந்திருந்தோரின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றது. உணர்ச்சி வடிவாக கதாசிரியர் ஆண்டாள் பிரியதர்சினியால் எழுதப்பட்ட புகழ்பெற்ற சிறுகதை ஒன்றுக்கு , தனியொருவளாக நின்று மேடையில் உயிர் கொடுத்தார் செல்வி சக்தி ரமணி. ஒரு அப்பாவின் அந்திமக் கால அவதிகளை, பாசப் பிடிப்பில் சிக்கித் தவித்து நெக்குருகும் மகளாக நின்று, அச் சிறுகதையின் அத்தனை அட்சரங்களும் புரியும்படி நமக்குத் தெள்ளத் தெளிவாக சாறு பிழிந்தார் சக்தி. ஆங்கில பாணி ஓரங்க நாடகம் போல் அமைந்த இக் காட்சியில், அங்க அசைவுகளுடன், பாத்திரங்கள் அலுங்காமல், கதைக் கருத்து மேலோங்க, முழுக் கதையையும் சிந்தாமல் சிதறாமல் அற்புதமாகச் சித்தரித்தார் செல்வி சக்தி ரமணி. சக்தி வேறு யாருமல்ல – கலைச் செல்வி ஆண்டாளின் அருமை மகள்! தாயின் எழுத்துப் படைப்பை அதன் நயம் குறையாமல் அரங்கேற்றும் ஆற்றல், அவரின் மகளுக்கு இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

அத்தனை பேருக்கும் நெஞ்சம் பொங்கும் நன்றிகளை அள்ளிக் கொட்டினார் கவிஞர் இன்பா. இன்பாவுக்கு ஒரு திருஷ்டி சுற்றிப் போடுவது பொருத்தமாக இருக்கும்.,,

 

நன்றி:- ஏ.பி.ராமன் அய்யா…   
 
 
இந்த இணைப்பில் படங்களை காணவேண்டுகிறேன்.

https://drive.google.com/drive/u/0/folders/1c5-VdrmcHkuBDn3KX2GYk8JVdruYaZWQ

News

Read Previous

வரலாற்றில் இன்று 04.01.2019

Read Next

வீரகேரளர் ஆட்சியில் கொங்குநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *