மாற்றுத் திறனாளிகள் !

Vinkmag ad

மாற்றுத் திறனாளிகள் !

மவ்லவீ எஃப். ஜமால் பாக்கவீ

 

அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிக அழகான அறிவான படைப்பு மனிதன் தான். மனிதன் மட்டுமே தலை நிமிர்ந்து நடைபோடுகிறான். கல்வி கற்கிறான். சம்பாத்தியம் செய்கிறான். திருமணத்தின் மூலமாக குழந்தைச் செல்வங்களை பெற்றுக் கொள்கிறான். ஆடை அணிகின்றான். வாகனங்களை தானே இயக்கிச் செல்கிறான். பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறான். இன்னும் பலப்பல அரிய காரியங்களை ஆற்றுகிறான். இவை யாவும் மனித குலத்திற்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்புக்களாகும்.

“மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்”

-அல்குர்ஆன் (95:4)

‘மனிதனே ! கண்ணியமிக்க உனது இறைவனைப்பற்றி உன்னை ஏமாற்றியது எது? அவன் தான் ஒன்றுமில்லாதிருந்த உன்னைப்படைத்து சீராக்கி, செம்மையாக்கினான்”

-அல்குர்ஆன் (82:67)      ஆக, “மனிதன் மட்டுமே அழகிய அமைப்பில், செம்மையாக சீராக படைக்கப்பட்டுள்ளான்” என்பது மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் மூலமாக தெரிகிறது.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது; அதனினும் அரிது; கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது; என்று தமிழ்ப்பாட்டி அவ்வை பாட்டியார் பாடுவார்.

இவ்வுலகில் மனிதர்களாய் பிறப்பதற்கே நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதிலும், உடலுறுப்புக்கள் சேதமின்றி, ஊனமின்றி, செவிடு, குருடு, ஊமைத்தனம் இன்றி பிறப்பதற்கு பெருந்தவம் செய்திடல் வேண்டும்.

மனிதர்களில் புனிதர்களான நபிமார்களில் யாருமே ஊனமுற்றோராக இருக்கவில்லை. அவர்கள் அனைவரையும் நல்ல நிலையில் உடலுறுப்புகள் யாவும் நன்றாக செயல்படும் நிலையிலேயே அல்லாஹ் படைத்திருந்தான். எவ்வித குறைபாடுகளையும் அவர்களின் படைப்பிலும், குணங்களிலும், நடைமுறைகளிலும் காணவே முடியாது. அந்த அளவிற்கு பரிசுத்தமானவர்களாக நபிமார்களை அல்லாஹ் ஆக்கியிருந்தான்.

“நபி (ஸல்) அவர்கள், தான் எப்படி பிறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்களோ அவ்வாறே பிறந்துள்ளார்கள்” என்று ஒரு கவிஞர் பாடுகிறார்.

நபிமார்கள் அல்லாத மற்ற மனிதர்களில் சிலர் மாற்றுத்திறனாளிகளாக வாழ்வதைக் காண்கின்றோம். சிலர் பிறப்பிலேயே உடல் ஊனமுற்றோர்களாகவும், இன்னும் சிலர், பிறந்தபின் நோய் – விபத்து போன்றவைகளால் மாற்றுத் திறனாளிகளாகவும் மாறிவிடுகின்றனர்.

நம் நாட்டில் (2013ல்) 7 ½ கோடி பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். ஆனால், தவறான புள்ளி விபரப்படி 2 ½ கோடி பேர் மட்டுமே காட்டப்படுகின்றனர். இவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது.

கணக்கெடுக்கப்படாத மீதமுள்ள 5 கோடி பேர் அரசின் எவ்வித சலுகையுமின்றி, வீடுகளிலும் அவர்கள் சரிவர பராமரிக்கப்படாமல் கண்டு கொள்ளப்படாமல் விட்டு விடப்பட்டுள்ளனர். இது மனித நேயமற்ற மனிதாபிமானமற்ற மிகப்பெரும் கொடூரமான செயலாகும்.

இந்த 5 கோடி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எப்படி கழிகிறது? வேலை வாய்ப்புகளின்றி…

மனிதக் கழிவுகளை அள்ளுவது;

குப்பைகளை பொறுக்குதல்;

பிச்சை எடுத்தல்;

கொத்தடிமைகளாக வேலை செய்தல் போன்ற தங்களது சக்திக்கு மீறிய செயல்களை செய்து தங்களது வயிறுகளை நிரப்பி வருகின்றார்கள்.

கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 2 ½ கோடி மாற்றுத்திறனாளிகளுக்காவது அரசின் சலுகைகள் சரிவர சென்றடைகிறதா? என்றால் அதுவும் கிடையாது. அவர்கள் ஒவ்வொரு நாளும் தனிமையாகவோ, அல்லது பெற்றோர் உற்றார் துணையுடனோ அரசு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வேலை கேட்டு, தங்கள் உரிமைகளை கேட்டு அலைந்து திரிவதைக் காண முடிகிறது. ஆனால், அரசு அலுவலர்களில் சிலர் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இவர்களின் பணிகளை முடித்து தருவதும் இல்லை. பேருந்துகளில் மாற்றித் திறனாளிகளின் இருக்கை என்று ஒரு இருக்கை உண்டு. மாற்றுத் திறனாளி அவ்விருக்கை அருகே நிற்க முடியாமல் நின்று கொண்டிருப்பார். ஆனால், அவரது இருக்கையில் நல்ல திடகாத்திரமான ஒருவர் அமர்ந்திருப்பார். இவரை கண்டும் காணாமல் வீற்றிருப்பார். இது மாபெரும் அக்கிரமமாகும்.

இஸ்லாம் இச்செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறு அநாகரீமாக நடந்து கொள்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் அழகல்ல. நாம் நமக்குரிய இருக்கையில் அமர்ந்திருந்தாலும் மாற்றுத் திறனாளிகளோ, வயதானவர்களோ, கர்ப்பிணிகளோ நிற்கக் கண்டால் நாம் எழுந்து அவர்களை அமர வைக்க வேண்டும். இதனால் கூட அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகக் கூட அமையலாம். இதனை ஒவ்வொரு பெற்றோரும் தத்தமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், இன்றைய இளைஞர்களில் சிலர், ஊனமுற்றவர்களை, வயதானவர்களைக் கண்டால் அவர்களைக் கேலி – கிண்டல் செய்வதையும், அவர்களின் மீது கற்களை எறிந்து வேதனை செய்வதையும் காணமுடிகிறது.

“யார் சிறுவர்கள் மீது இரக்கம் காட்டவில்லையோ, பெரியவர்கள் மீது மரியாதை செலுத்தவில்லையோ அவர்கள் நம்மைச் சார்ந்தோரல்ல” என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“தங்களுக்கும் வயதான காலம் வரும்” என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஊனம் என்றால் ?

உடலில் அல்லது மனதில் ஏற்பட்ட மாற்றமே ஊனம் எனப்படும். இதனால், சில செயல்களைச் செய்ய முடியாமல் போய்விடும்.

மரபணுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றம். இதனால், ஊனம், செவிடு, குருடு, ஊமை, சில உறுப்புகள் அதிகமாக இருத்தல், குறைவாக இருத்தல், உள் உறுப்புகள் குறைபாடு ஆகியன.

குழந்தையுண்டான பெண் மருத்துவரின் ஆலோசனையின்றி தலைவலி, வாந்தி, மயக்கம், ஜுரம், உடல் வலி போன்றவைகளுக்கு மருந்து மாத்திரைகளை உட்கொள்வதினால் கருவில் வளரும் குழந்தை பாதிப்படைகிறது. குறைகளுடன் அக்குழந்தை பிறக்கிறது.

மேலும், மருத்துவர் உட்கொள்ளச் சொன்ன மருந்துகளை சரியாக சாப்பிடாததினாலும் கருவின் வளர்ச்சி தடைபட்டு ஊனமாக பிறக்க வாய்ப்புகள் உண்டாகின்றது.

சில பெண்கள் கருத்தரித்த பின் குழந்தை வேண்டாமென்றெண்ணி சுயமாகவே கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அவை பெரும்பாலும் கருவை கரைக்காமல் கருவை வளர்க்கச் செய்துவிடுகிறது. மேலும், ஊனங்களையும் அவை ஏற்படுத்தி விடுகிறது.

அதற்கும் மேலாக அல்லாஹ் அந்த கருவை எப்படி வளர்க்க நாடுகிறானோ அவனது நாட்டப்படி அக்கரு வளர்கிறது.

குழந்தை பிறந்த பின் ஏற்படும் சில நோய்களினாலும் குழந்தைகள் ஊனமாகலாம். மூளைக் காய்ச்சல், குழந்தைகள் கீழே விழுதல், தலையில் அடிபடுதல், பெற்றோர், குழந்தைகளின் கன்னத்தில் அடித்தல் போன்றவைகளினால் ஊனம் ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் “போலியோ சொட்டு மருந்து” குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. அதனைப் பெற்றோர் அலட்சியம் செய்யாமல் அதனைக் குழந்தைகளுக்கு கொடுத்திட வேண்டும். குழந்தைப் பருவத்தில் போட வேண்டிய ஊசிகளை ஒழுங்காக போட்டுவிட வேண்டும். “குழந்தைகளை எக்காரணம் கொண்டும் முகத்தில், கன்னத்தில் அடிக்கவே கூடாது” என்று மாநபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

மேற்கூறப்பட்டவர்களே, “மாற்றுத் திறனாளிகள்” என்று அறியப்பட்டுள்ளான்.

ஆனால், சில “மாற்றுத்திறனாளிகளை” அல்லாஹ் அல்-குர்ஆன் வாயிலாக அறிமுகம் செய்கின்றான். அவர்களே உண்மையில் மாற்றுத் திறனாளிகளாவர். அவர்கள் யார்?

கண்கள் இருந்தும் சத்தியத்தை பார்க்க மறந்தோர்

காதுகள் இருந்தும் சத்தியத்தை கேட்க மறந்தோர்

உள்ளங்கள் இருந்தும் சத்தியத்தை விளங்க மறந்தோர்

கைகள் இருந்தும் நல்லவற்றை செய்ய மறந்தோர்

கால்கள் இருந்தும் நல்லவற்றின்பக்கம் நடக்க மறந்தோர்

உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளை செய்ய மறந்தோர்…

இவர்களே அல்லாஹ்வின் வாக்கின்படி ஊனமுற்றோர். இந்த உறுப்புக்கள் இருந்தும் செயல்படவில்லையெனில் அதுதானே ஊனம். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

“ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர் இல்லை. அதை விடவும் வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்”

-அல்குர்ஆன் (7:179)

ஈமான் (இறைநம்பிக்கை) இருந்தும் அதன்படி செயல்படாதோரும் ஊனமுற்றவர்களே ! என்பதை விளங்க வேண்டும். உடல் ஊனமானவர்கள் கூட தொழுகைக்கு ஒழுங்காக வந்து செல்கின்றனர்.

ஆனால், அனைத்து உறுப்புகளும் சரிவர செயல்பட்டுக் கொண்டிருப்போரில் பலர் தொழுகையின்பால் நாட்டமின்றி நடமாடிக் கொண்டிருப்பது வேதனையாகவே உள்ளது.

யா அல்லாஹ் ! இவர்களை நேர்வழியின்பால் சேர்த்து வைப்பாயாக!

( குர்ஆனின் குரல் – மார்ச் 2015 )

 

News

Read Previous

36 வயதினிலே – திரை விமர்சனம்

Read Next

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *