மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’

Vinkmag ad

மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’

( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )

  “அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது.

மனிதர்கள் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி, சக்திக்கேற்ப தங்கள் சரீரத்தைப் பீடித்த நோய்க்கு சிகிச்சையளிக்கின்றனர். ஆனால் அனைவருமே சிகிச்சையளிக்க வேண்டிய முக்கியமான ஒரு உறுப்பைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.

அந்த உறுப்பு செயலற்றுவிட்டால், ஏனைய உறுப்புக்கள் எவ்வளவு திடகாத்திரமாக இருந்தாலும் பயனில்லை. ‘மையித்து’ என்று இனம் காட்டப்பட்டு ஒதுக்கி தள்ளப்படுகிறது. அந்த உறுப்பு இயங்கிக் கொண்டிருந்தால் மற்ற உறுப்புகள் துண்டாடப்பட்டாலும், புழுத்துக் கொட்டினாலும் மனிதன் என்ற மரியாதையளிக்கப்படுகிறது.

அந்த உறுப்பில் நோயின் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அனைத்து உறுப்புகளிலும் நோய் தொற்றிக் கொள்கிறது. அந்த உறுப்பு ஆரோக்கியமாக இருந்தால் ஏனைய உறுப்புகள் எவ்வளவு நோய் தொற்றினாலும் சமாளித்துக் கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த உறுப்பை இனம் காட்டுகிறார்கள். “சரீரத்தில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீரடைந்தால் சரீரமனைத்தும் சீர் பெற்று விடும். அது சீரழிந்தால் சரீரமனைத்தும் சீரழிந்து விடும். தெரிந்து கொள்ளுங்கள். அது தான் ‘இருதயம்’ என்பதாகும்.

புரையோடும் புற்று நோய்கள்

இருதயம் என்ற அந்த பிரதான உறுப்பைத் தொற்றிக் கொள்ளும் வியாதிகள் அனந்தம் ! அனந்தம் ! அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் கவலை, பயம், சந்தேகம் ,கோபம், பொறாமை போன்ற வியாதிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

ஒருவன் ஏதாவதொரு கவலையால் பீடிக்கப்படும்போது, அவனுக்கு உணவு செல்ல மறுக்கிறது. உறக்கம் பிடிப்பதில்லை. அவன் எவ்வளவு திடகாத்திரம் படைத்தவனாக இருந்தாலும், நாளடைவில் நலிந்து உருக்குலைந்து போகிறான்.

பயம் என்பதும் ஒரு நோய். அந்நோய் ஒரு மனிதனைக் கவ்விக் கொண்டால் அது அவனை அழிக்கும் வரை ஓய்வதில்லை. ‘ அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று கூறுவர்.

சற்று கடுமையான உடல் நோயால் பாதிக்கப்பட்டால் எங்கே இந்நோய் நம்மை மரணிக்கச் செய்துவிடுமோவென்று பயந்து சாகக் கூடிய மனிதர்கள் பலரை நாம் கண்டு வருகிறோம்.

பயத்தைப் போன்று சந்தேகம் என்பதும் ஒரு கொடிய நோயாகும். ‘தன் குடும்பத்தினர் தவறான நடத்தையை மேற்கொண்டு விடுவார்களோ? நம் தொழிலாளர்கள் நாணயமில்லாது நடப்பார்களோ? நமக்கு யாரும் செய்வினை செய்திருப்பார்களோ? நமக்கு யாரும் மருந்திட்டிருப்பார்களோ?’ என்பன போன்று பல வகைகளில் மனிதன் சந்தேகம் கொள்கிறான். சிலர் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் சந்தேகப்பிராணியாகவே இருப்பார்கள். சந்தேகம் என்ற நோய் பீடித்து விட்டால் அது சதாவும் சிந்தனையை குழப்பிக் கொண்டே இருக்கும். இதனால் மனிதன் உண்ணப் பிடிக்காமல் உறக்கம் வராமல் தவிப்பான்.

மனிதனை அழிக்கும் குணங்களில் கோபம் என்பது பிரதான இடத்தை வகிப்பதை, இன்றைய உடல்கூறு நிபுணர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்கள். ஹார்ட் – அட்டாக், பிளட் – பிரஷ்ஷர் போன்ற ஆட்கொல்லி நோய்கள் மனிதனைத் தாக்குவதற்கு கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவையே முக்கிய காரணங்களாக அவர்கள் கூறுகின்றனர்.

உடல்கூறு மருத்துவ நிபுணர்கள் நோயாளிக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியைத் தெரிவிக்காதீர்கள் என்று கூறி உளநோய் பற்றி இனம் காட்டுவதைக் காணலாம்.

உள்ளத்தைத் தாக்கி உடலையே அழித்துவிடும் இவை போன்ற நோய்களை வளரவிட்டு, உடலுக்கு மட்டும் சிகிச்சையளிப்பது விந்தையிலும் விந்தையே.

உள சிகிச்சை

நோய் தாக்கிவிட்ட ஊன மனத்துக்கு ஒடிந்த உள்ளத்துக்கு சிகிச்சையளிப்பது எங்ஙனம்? என்பதை மேற்கண்ட இறைவசனம் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது. சதாவும் இறைவனைத் தியானித்துக் கொண்டே இருந்தால், உள நோய்கள் அகன்று அமைதி ஏற்படும். உடலும் படிப்படியாக ஆரோக்கியம் பெறும் என்பது அத்திருவசனத்தின் கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அறிந்து கொள்ளுங்கள் ! வலுமிக்க இரும்பு துருப்பிடித்தால் அழிந்து விடுவது போன்று உரம் மிக்க இருதயமும் துருப்பிடித்து அழிந்து விடுகிறது. ‘லா இலாஹ இல்லல்லாஹு’ என்ற இறை தியானமே உள்ளத் துருவை நீக்க வல்லதாகும். என்று நவின்றுள்ளார்கள்.

நமக்கு மேலாக ஒருவன் இருக்கிறான். அவன் நாடியது தான் நடக்கும். அவன் நாடாத ஒன்றை உலகத்தார் ஒன்று கூடினாலும் அதை நிகழ்த்திக் காட்ட முடியாது. அவன் நாடிய ஒன்றை உலகத்தார் ஒன்று கூடினாலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற உண்மையை படிப்படியாக பயிற்சி கொடுத்து இருதயத்துக்கு சிகிச்சையளிக்கும் போது அதைப் பாதித்த நோய்கள் அகலுவதைக் காணலாம். எல்லாம் அவன் விதிப்படியே நடக்கும் என்ற உணர்வை உள்ளத்துள் பதியச் செய்து விட்டால் நாம் கவலைப்பட்டு என்ன சாதித்திட முடியும்? என்ற உண்மை புலப்பட்டால் கவலை பறந்தோடுவதைக் காணலாம். இவ்வாறே உள்ளத்தைப் பீடித்த நோய்கள் அனைத்தும் அந்த உணர்வு ஏற்பட்டவுடன் கதிரவனைக் கண்ட பனித்துளிகள் போன்று உருக்குலைந்து போய்விடும்.

ஆனால் புரையோடிவிட்ட இந்தப் புண்களை ஆற்றுவதற்கு ஓரிரு தடவைகள் ‘அல்லாஹ் ! அல்லாஹ் ! என்று கூறுவது அருமருந்தாகி விட முடியாது. நோயின் ஆழத்துக்குத் தக்க தியானம் என்ற மருத்துவத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.

ஆற்றல் மிக்க அற்புத உள்ளங்கள்

இறை தியானத்தால் இருதயம் நோயற்ற வாழ்வைப் பெறுவதை இறைமறை மேற்கண்ட வசனம் மூலம் கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாது தியானத்தைத் தொழிலாகக் கொண்ட உள்ளங்கள் பெற்ற ஆற்றலையும் சரித்திர ஆதாரத்துடன் விளக்குகிறது.

இப்ராஹீம் நபி (ஸல்) அவர்களை எதிரிகள் நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறிந்த போது இறை தியானத்தால் நிரம்பி வழிந்த அவர்களின் மனம் துணுக்குறவில்லை. மாறாக துணிவுடன் அச்சோதனையை எதிர்கொண்டு அழைத்தது. இறை உதவி இருக்குமேயானால் இந்த நெருப்பு என்ன செய்து விட முடியும்? என்று துணிந்தது. எனவே அவர்களின் உடலில் உரோமங்களைக் கூட அந்த கொழுந்துவிட்டு எரியும் நெருப்பால் கரிக்க முடியவில்லை.

இப்ராஹீம் நபி (அலை) அவர்களுக்கிருந்த மனோநிலைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடும்போது ‘அவர் தனது இறைவனின் சன்னிதானத்திற்கு சாந்தி பெற்ற உள்ளத்தோடு வந்தார்’ என்று கூறுகிறது. (37:84)

யூனுஸ் நபி (அலை) அவர்களை ஒரு மீன் விழுங்கிய போது அவர்கள் இறை தியானத்தில் திளைத்திருந்தார்கள். எனவே அப்பெரும் மீனால் அவர்களின் உடலை ஜீரணிக்கமுடியவில்லை. அச்சரித்திரம்           பற்றிக் குர்ஆன் கூறும்போது ‘அவர் இறைதியானத்தில் திளைத்திருக்கவில்லையாயின், மறுஉலக காலம் வரை அம்மீன் வயிற்றிலேயே ஒன்றிப் போயிருப்பார் எனக் குறிப்பிடுகிறது. (37:144)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற நேரத்தில் அவர்கள் மறைந்திருந்த குகையின் அருகில் எதிரிகள் இனங்கண்டு வந்தபோது அவர்கள் மனம் தளராதிருந்ததற்கு ‘இன்னல்லாஹ மஅனா’ (அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்) என்று கூறிய அவர்களின் மனப்பக்குவம் காரணமாகும். (9:40)

மூஸா – நபி (அலை) அவர்கள் தனது சமூகத்தவர்களுடன் நாடு கடந்து வரும்போது அவர்களுக்கு முன்னால் பிரவாகமெடுத்து ஓடும் நைல் நதியும், பின்னால் வெள்ளமெனத் திரண்டு வரும் பிர்அவ்னின் படையும் சூழ்ந்து கொண்டபோது அவர்கள் துணுக்குறாமல் ‘இன்னமஇய ரப்பீ’ (26:62) (என்னுடன் எனது இறைவன் இருக்கிறான்) எனக்கென்ன கவலையென்று கூறியது அவர்களின் மனப்பக்குவத்தை எடுத்துக் காட்டவில்லையா?

எது தேவை ? வாழ்வா – தாழ்வா ?

திருக்குர்ஆனில் காணப்படும் சான்றுகளைப் போன்றே திருநபி மொழிகளிலும் சான்றுகளைக் காணலாம்.

40 பேர் சேர்ந்து தூக்க முடியாத கைபர் கோட்டைக் கதவை தனது இடதுகையால் தாங்கிப் பிடித்து அதைக் கேடயமாகக் கருதிக் கொண்டு சுழன்று சுழன்று போரிட்ட ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களுக்கு அத்துணை பலம் எங்கிருந்து வந்தது. அவர்களின் உள்ளம் இறை தியானத்தால் பக்குவப்பட்டதால் அல்லவோ அத்தகைய சக்தியைப் பெற்றார்கள். இவை போன்ற எண்ணற்ற சம்பவங்கள் கற்பிக்கும் பாடமென்ன? உள்ளம் தியானத்தால் நிரம்பப் பெற்றால் உடலும் அசாத்தியத் திறமையும், மன அமைதியும் பெறுகிறது. இறைதியானம் அற்றுப்போனால் உடலுடன் சேர்ந்து உள்ளமும் கெட்டுப் போகிறது. அழிவின் பாதையை அதிவிரைவில் அடைகிறது என்பது தானே !

 

 

நன்றி : நர்கிஸ்  – ஜனவரி 2013

 

News

Read Previous

ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே.!

Read Next

சென்னையில் ஒய். ஹ‌பீபுக்கு பேத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *