பொது சிவில் சட்டம்!

Vinkmag ad

பொது சிவில் சட்டம்!

வெளிச்சத்தின் மீது எழுதப்படும் இருட்டு!

-புதுமடம் ஜாபர் அலி



சில வார்த்தைகள் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டில்
பரபரப்பையும், கவன ஈர்ப்பையும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு
வகிக்கின்றன. அப்படிப்பட்டவற்றில் முக்கியமான ஒன்றுதான், ‘பொது சிவில்
சட்டம்’!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கான  சட்ட ரீதியான ஏற்பாடுகள் 1947 ஆகஸ்டுக்கு
பல மாதங்கள் முன்பே தொடங்கின. நமது அரசியலமைப்பை உருவாக்கும் பணியில்
சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு  அமைக்கப்பட்டது. அந்த வகையில் 1947 ம்
ஆண்டு மார்ச் 28 ம் தேதி அடிப்படை உரிமைகள் பற்றி ஆராய்வதற்காக ஒரு துணை
கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த துணை கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான
எம்.ஆர். மஸானி திடீரென பொது சிவில் சட்டம் பற்றிய ஒரு பிரேரணையை
கொண்டுவருகிறார். துணை கமிட்டியில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அதைக்
கடுமையாக எதிர்க்கிறார்கள். அதனால் மஸானியின் கோரிக்கை கைவிடப்படுகிறது.
1947  மார்ச் 30 ம் தேதி மீண்டும் இது விவாதிக்கப்பட்டது.

அதன் பிறகு பிரிவு 36 முதல் 51 வரையிலான அரசியல் சாசனத்தின் வழிகாட்டும்
நெறிமுறைகளில் ஒன்றாக வேண்டுமானால் பொது சிவில் சட்டம் என்ற கருத்தியலை
வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது.

அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் இன்னும் என்னென்ன தெரியுமா
இருக்கின்றன?

* 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விக் கொடுக்கப்பட வேண்டும்

* ஆண்-பெண் இருபாலருக்கும் சம வேலை வாய்ப்பு, சம ஊதிய முறையை
நடைமுறைப்படுத்திட வேண்டும்

*நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்

ஆகிய இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் வரிசையில்தான்,

‘பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்’ என்றும் இருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, மதுவிலக்கு உள்ளிட்ட இந்திய பொது சிவில் சமூகத்தின்
முக்கியமான தலையாய பிரச்னைகளில்… இந்திய அரசியல் சாசனம் தெரிவித்துள்ள
வழிகாட்டும் நெறிமுறைகளை வசதியாக மறந்தும் மறைத்தும் வைத்திருக்கும்
மத்திய அரசு இப்போது அந்த வரிசையில் இருக்கும் பொது சிவில் சட்டத்தை
மட்டும் கையிலெடுத்து ஒரு பதற்றப் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
என்பதுதான் உண்மை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆசானான அண்ணல் அம்பேத்கர், ‘பொது
சிவில் சட்டம் முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது’
என்று அரசியல் சாசனத்தை உருவாக்கும்போதே உறுதியளித்தார்.

ஆனால் இன்று மத்திய அரசின் சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்தைக்
கொண்டுவருவது பற்றி மக்களிடம் கருத்துக் கேட்கிறது.

இப்போது பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டிய அளவுக்கு என்ன அவசியம்
ஏற்பட்டிருக்கிறது? பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு
முஸ்லிம் மதச் சட்டமான, ‘ஷரியத்’ சட்டத்தினால் பாதிப்பு ஏற்படுகிறது
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டார்களா?  அல்லது காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் ஐம்பது பேர் திரண்டு பிரதமர்
இல்லத்துக்கு சென்றது போல் பெருந்திரளான மக்கள் பிரதிநிதிகள் பிரதமரின்
இல்லத்தைத் தேடிச் சென்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று
கோரிக்கை வைத்தார்களா?

தன் காதில் பலமாக விழும் மக்கள் கோரிக்கைகளை எல்லாம் கிஞ்சித்தும்
கண்டுகொள்ளாத பிரதமர் மோடி… யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் விரல்
விட்டு எண்ணக் கூடிய சில முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்ததன் அடிப்படையில்…  பொது சிவில் சட்டம் பற்றி கருத்துக் கேட்க
வேண்டிய அவசியம் என்ன?

இங்குதான் இலை மறை பூசணிக்காயாக  பட்டவர்த்தனமாகத் தெரிகிறது மத்திய மோடி
அரசின் அரசியல் சதுரங்கம்.

உலகத்திலுள்ள  எல்லா முஸ்லிம்களூம் அந்தந்த நாட்டின் குடிமை மற்றும்
குற்றவியல் சட்டங்களுக்கு உட்பட்டுதான் வாழ்கிறார்கள். ஆனால் குடும்ப
சம்பந்தப்பட்ட திருமணம், விவகாரத்து, குடும்பச் சொத்தில் பங்கு ஆகிய
விவகாரங்களில் மட்டும் இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்வியல் கோட்பாடான
குடும்பவியல் சட்டத்தை அதாவது ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.
இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையாக இருக்கும் மற்ற மதத்தினர் தங்கள்
திருமணம், விவாகரத்து, குடும்பச் சொத்தின் பங்கு போன்றவற்றில் தத்தமது
தனியார் சட்டங்களைப் பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சில அறிவுஜீவிகள், ‘இந்தியாவில் முஸ்லிம் கொலை செய்தாலும், இந்து கொலை
செய்தாலும், கிறிஸ்துவர் கொலை செய்தாலும் ஒரே கிரிமினல் சட்டம்தானே
இருக்கிறது. பின் ஏன் திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் தனித் தனி சட்டம்
வேண்டும்?’ என்று தங்கள் பரபரப்பு வாயில் பதற்ற அவல் போட்டு
மெல்லுகிறார்கள்.

குற்றவியல் சட்டத்துக்கும் குடும்பவியல் சட்டத்துக்கும் வித்தியாசம்
இருக்கிறது என்பதை அந்த அறிவுஜீவிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குற்றவியல் சட்டம் என்பது அரசால் கையாளப்படும் சட்டம். குடும்பவியல்
என்பது தனி மனித உரிமை.  ஒரு கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை என்றால் அது
காவல்நிலையத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ வந்தால்தான் அதில் சட்டம் தலையிட
முடியும். அதுவரை அரசாங்கம் அவர்கள் வாழ்வியலில் தலையிட முடியாது.

இந்தியாவில் இந்துக்களுக்கு என தனி குடும்பவியல் சட்டம் இருக்கிறது.
அதுபோல முஸ்லிம்களுக்கும் குடும்பவியல் சட்டம் இருக்கிறது. இதனைப்
பின்பற்றுவதால்  மதக்கலவரமோ, தீவிரவாதப் பிரச்னைகளோ எழ வாய்ப்பே இல்லை.

நிக்காஹ் என்ற அரபு வார்த்தைக்கு இணைதல் என்று பெயர். ஆண்&பெண் பருவம்
அடைந்து திருமணத்துக்குத் தகுதியானவர் என்ற நிலையில் இந்த நிக்காஹ்
நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இந்தியாவில் ஆணுக்கு திருமண
வயது 21 என்றும் பெண்ணுக்குத் திருமண வயது 18 என்றும்
நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது. உலகின் ஒவ்வொரு நாடுகளில் ஆண்& பெண்
வளர்ச்சி என்பது வெவ்வேறு வயதுக் கணக்கீடுகளில் மதிப்பிடப்படுகிறது.



நிக்காஹ் எப்படி நடக்கும்?



பெண்ணின் தகப்பனார் நல்ல மனநிலையில் இருக்கும் சமூக அந்தஸ்து கொண்ட இரு
சாட்சிகள் நேரடியாக பங்கேற்கும் நிலையில்… வாழ்வில் இணையும்
இருவரிடமும் சம்மதம் பெற வேண்டும். பின் மஹர் எனப்படும் திருமணத் தொகையை
பெண் தன்னுடைய விருப்பம் போல நிர்ணயித்து ஆணிடம் கேட்க வேண்டும்.  இந்தத்
தொகையை பெற்ற பின் நிக்காஹ் நடைபெறும். இதில் மத அறிஞரான் இமாம் இருக்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு மிக எளிமையான திருமண முறையையே
இஸ்லாம் வழிகாட்டுகிறது. திருமண விருந்தினை மணமகன் தன் வசதிக்கு ஏற்ப
அளித்திட வேண்டும்.  இதுதான் இஸ்லாமியத் திருமண முறை.

இந்தியாவில் தமிழகத்தில் ஏற்கனவே இந்துக்களாக இருந்து பிற்காலத்தில்
முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள்… தங்கள் வாழ்வியல் முறைகளில் சில
சம்பிரதாயங்களையும், கலாச்சாரங்களையும்  விட்டுவிட முடியாமல்
பின்பற்றுகிறார்கள்.  இந்துக்களாக இருந்தபோது தேரோட்டம் செய்தவர்கள்
முஸ்லிம்களாக மாறியவுடன் தர்காவில் சந்தனக் கூடு நடத்துகிறார்கள்.
வேட்டி பின் லுங்கியானது. இதுமாதிரி தமிழகத்தில் இஸ்லாமிய திருமணங்களில்
கருகமணி கட்டுவது என்பதும் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இதுவும்
இந்துக்களின் கலாசாரத்தில் இருந்து தழுவப்பெற்றதுதான்.  ஆனால் இஸ்லாமியத்
திருமண முறையில் வரதட்சணை உள்ளிட்டவை கோட்பாட்டில் கிடையாது.



இந்த நிக்காஹ் வுக்கு பின்னான காலங்களில் தலாக் என்ற சொல் இப்போது
மிகவும் தவறான சித்திரிப்புடன் பல பொது ஊடகங்களில் பேசப்படுகிறது. அந்த
விவாதங்களில் கலந்துகொள்ளும் இஸ்லாமியத் தரப்பினர் கூட அந்த தவறான
சித்திரிப்புகளை உடைக்கும்படியான உண்மைகளை எடுத்து முன் வைப்பதில்லை.

தலாக் என்ற அரபுச் சொல்லுக்கு அவிழ்த்தல் என்று பொருள்.  மனைவியை
கணவருக்குப் பிடிக்கவில்லை என்றால் மண முறிவு ஏற்படும் பட்சத்தில்  பெண்
சார்பாக ஒரு நபரும்,  ஆணின் சார்பாக ஒரு நபரும் பேசித் தங்கள் திருமண
பந்தத்தை அவிழ்த்துக் கொள்ளுதல்தான் தலாக்.  இதில் ஏகப்பட்ட
கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு கணவர் தலாக் சொல்ல முற்படுகிறார்
என்றால்… முதல் தலாக்  சொல்லியபின் இருவரும் ஒரே வீட்டில்  தாம்பத்ய
உறவில்லாமல் ஒருமாத காலம் வசிக்கலாம். இது இருவருக்கும் தனிமை, பிரிவு,
வலிகளை உணர்வதற்கான ஒரு முன்னோட்ட எச்சரிக்கைக் காலமாக இருக்கிறது. இந்த
ஒரு மாத காலத்தில் அவர்களுக்குள் இருந்த பிணக்குகள் சரியாகிவிடும்
பட்சத்தில் கணவர் இரண்டாவது தலாக் சொல்லாமல் தொடர்ந்து அவர்கள் கணவன்
மனைவியாகவே வாழலாம்.

இரண்டாவது தலாக் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டால்…  அதற்குப் பின் மேலும்
ஒரு மாத கால அவகாசம் அந்தத் தம்பதியருக்கு அளிக்கப்படும். முதல்
மாதத்தில் பிணக்கு சரியாகவில்லை என்றால் இரண்டாவது மாதத்தில் கூட
சரியாகும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவே இந்த அவகாசம். அதையும்
தாண்டி கசப்புணர்வு தொடர்ந்தால் மூன்றாவது தலாக் சொல்லலாம்., அதுவும்
உடனே செல்லுபடியாகாது. மூன்றாவதாக ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். ஆக
மொத்தம் தலாக் சொன்னாலும் தொண்ணூறு நாட்கள்

இந்த மூன்று தவணைகளிலும் ஏதேனும் மன மாற்றம் வந்துவிடாதா அவர்களின் மண
முறிவு முடிவு மாற்றப்படாதா என்ற அக்கறையில்தான் இஸ்லாம் இந்த காலக்
கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்த மூன்று மாதத்தையும் கடந்து அவர்கள் பிரிவில் உறுதியாக இருந்தால்
அவர்களுக்கு மணமுறிவு வழங்குகிறது இஸ்லாம். அதுவும், இந்த மூன்று
மாதத்துக்கான செலவையும் கணவரே ஏற்கவேண்டும். பிறகு அந்தப் பெண்ணுக்கு
குழந்தை இருப்பின் அதற்கான முழு செலவையும் கணவரே ஏற்க வேண்டும், அந்தக்
குழந்தை வளரும் வரை.  தலாக் சொல்லி பிரிந்துவிட்டால் கூட உடனே மறுமணம்
செய்துவிட முடியாது.  மேலும் மூன்று மாத காலம் காத்திருக்க வேண்டும்.

இதற்கு ’இத்தா’ காலம்  என்று பெயர்.  பெண்களுக்கு  மட்டுமே இத்தா காலம்
வழங்கப்பட்டிருக்கிறது. காரணம்,  மூன்று மாதம் என்பது வெறும் கால அவகாசம்
மட்டுமல்ல, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்ணுக்கு  தரப்படும்
தரப்படும் சோதனைக் காலம்தான் ’இத்தா”.  ஒருவேளை பெண் கருவுற்றிருக்கிறாரா
என்பதை சோதனை செய்யும் காலமாக அமைந்திருக்கிறது.  ஒருவேளை
கருவுற்றிருந்தால் அவளை அவளது கணவனால் ஏமாற்ற முடியாது.

விவகாரத்து பெறுவதில் பெரும் சிரமம், நீண்ட கால இழுத்தடிப்பு, பொருள்
விரயம், விவகாரத்து வழக்கு நடைபெறும் நீண்ட கால இடைவெளியில் மற்ற ஆண்கள்
மூலமாக வரும் இடைஞ்சல்கள், அதன் மூலம் பெண்களுக்கு வரும் மன அழுத்தம்,
தற்கொலைக்குத் தள்ளப்படும் கட்டாயம், பெண்கள் தொட்டால் மட்டுமே
வெடிக்கும் ஸ்டவ் ஆகிய எதுவும் இஸ்லாம் கூறும் வழிமுறைகளில் கிடையாது.

மண முறிவு பெறுவதற்காக கணவரும் மனைவியும் பரஸ்பரம் அபாண்டமாக பழி
சுமத்தும் படலமும் இஸ்லாத்தில் கிடையாது. இவற்றை எல்லாம் தவிர்த்து
கண்ணியமான முறையில் பிரிந்து மீண்டும் இன்னொரு குடும்ப வாழ்க்கைத் தொடர
இஸ்லாம் வழி செய்கிறது.

சிலர் முத்தலாக் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு தலாக் குக்கும் இடையே ஒரு
மாதம் ஆக மூன்று மாதம் இடைவெளி இருக்க வேண்டும் என்பதே ஷரியத் சட்டம்.
ஆனால் ஒரே நேரத்தில் தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லி,
பிரியாணி சாப்பிட்டுவிட்டு கை கழுவிவிட்டுப் போவதைப் போல பெண்டாட்டியை
விட்டுச் செல்கிறார்கள் என்ற தவறான பிம்பமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

‘உடனடிப் பயணம், போர், பெண்ணின் ஒழுக்கம் பற்றி கண்கூடாக அறிந்துகொள்ளல்
ஆகிய அரிதான சந்தர்ப்பங்களில்தான்  போலீஸாருக்கு கண்டதும் சுடும்
அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது போல ஆண்களுக்கு முத்தலாக்கை ஒரே நேரத்தில்
சொல்லும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது’ என்று சில மத அறிஞர்கள்
மழுப்புகிறார்கள். ஆனால்… இதுபோன்ற முத்தலாக் அனுமதி இஸ்லாத்தில் அறவே
இல்லை என்று  வேறு சில மத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் இந்த
இரு வாதங்களுமே சம பலத்தில்தான் இப்போது இருக்கின்றன.

இங்கே பலரும் தலாக் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். மத்திய அரசு கூட தலாக்
தலாக் என்று சொல்லி முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்துவிடுகிறார்கள்.
எனவே முஸ்லிம் பெண்களை அப்படிப்பட்ட இக்கட்டில் இருந்து பாதுகாக்கவே பொது
சிவில் சட்டம் என்ற பல்லவியைப் பாடுகிறது.

ஆனால் இஸ்லாமிய குடும்பவியல் சட்டத்தில் ‘குலா’ என்ற வார்த்தை பொது
சமூகத்திடம் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. குலா என்றால்
என்ன தெரியுமா?

ஆணை பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் மூன்று மாத கால அவகாசத்தில்
மூன்று முறை தலாக் சொல்லி பிரியலாம் என்று ஆணுக்குக் கொடுக்கப்பட்ட
வாய்ப்பு போல பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் வாய்ப்புதான் குலா.
இது பெண்ணுரிமையின் பெரியதொரு அம்சம்.

கணவருக்கு தீராத பால்வினை தொடர்பான நோய், அல்லது தனக்கும்
குடும்பத்துக்கும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில்
இருப்பவர்,  நீண்ட காலமாக தன்னை விட்டுச் சென்றுவிடுதல் போன்ற
காரணங்களின் அடிப்படையில்… முஸ்லிம் பெண் மத சட்ட வல்லுநர்களை அணுகி
தன் கணவருக்கு குலா சொல்லலாம். அதாவது கணவரிடம் இருந்து பிரிந்து
செல்லும் உரிமையைக் கோருதல். இதில்  மார்க்க சட்ட வல்லுநர்கள் நன்கு
ஆராய்ந்து அந்த பெண் தன் கணவரைப பிரிந்து செல்வதற்கும், வேறொரு ஆணை
திருமணம் செய்துகொள்வதற்கும் அனுமதி அளிக்கலாம்.

இதில் காணாமல் போன கணவன் மீண்டும் திரும்பி வந்தால்… இந்தப் பெண்
மறுமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் அப்பெண்ணின் விருப்பத்தின் பேரில்
மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த
ஆணுக்கு அறிவுரை வழங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள
அறிவுறுத்தப்படும்.

ஒரு பெண் இளமைக் காலத்தில் வலியுடனும், வறுமையுடனும் இருக்கக் கூடாது
என்பதால்தான் இத்தகைய திருமண சட்ட திட்டங்களை இஸ்லாம் வரையறை செய்து
வைத்திருக்கிறது.

தலாக், முத்தலாக் போன்றவை தவறாகப் பயன்படுத்தப்படுவதே இல்லை என்றும்
முற்று முழுதாக சொல்லிவிட முடியாது.  ஷரியத் சட்டங்களின் அடிப்படையில்
தீர்ப்பு வழங்குவது அந்தந்த பகுதியில் இருக்கும் ஜமாத்தார்கள்தான். கடந்த
காலங்களில் பாரம்பரியம் கொண்ட நேர்மையான தூய்மையான பெரியவர்களே ஜமாத்
நிர்வாகிகளாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் ஆகிய
எத்தரப்பிலும் செல்வாக்கும் மதிப்பும் கொண்டிருந்தார்கள்.



ஆனால் 1990க்குப் பிறகு முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு அமைப்புகள்,
இயக்கங்கள் அதிகாரத்தை மையமாக வைத்து முளைக்கத் தொடங்கின. அந்த
அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் அதிரடி வளர்ச்சிக்கு உள்ளூர் ஜமாத்தார்கள்
இடைஞ்சலாக இருப்பதாகக் கருதினர். அதனால் இவர்கள் மத்தியில் மோதல் போக்கு
ஏற்பட்டது. சில இடங்களில் கொலை கூட நடந்தது. இந்து சமயத்தில் நிலவும்
சாதி வெறிக்கு நிகராக முஸ்லிம் சமயத்தில் இந்த இயக்கவெறி தூண்டி
வளர்க்கப்பட்டது.

இதனால்தான் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் நேர்மையான, பாரபட்சமற்ற
தீர்ப்புகளை வழங்கிவந்த ஜமாத்தார்கள் கொஞ்சம் கொஞ்சமாம விலகிவிட்டார்கள்.
இதையடுத்து சில இடங்களில் மார்க்க கோட்பாடுகளைப் பற்றி அறவே தெரியாத
முரட்டு நபர்கள்  ஷரியத் ஆலோசனை வழங்க ஆரம்பித்தார்கள்.  இவர்கள்தான்
தொலைபேசி மூலம் கூட  தலாக் சொல்லலாம் என்று தவறாகப் பயன்படுத்த
ஆரம்பித்தார்கள். தலாக் சொல்லும்போது  இரண்டு நேரடி சாட்சிகள் வேண்டும்
என்ற ஷரியத்தை கூட அவர்கள் பின்பற்றுவதில்லை.



இதில் ஏழை பணக்காரன், செல்வாக்கு மிக்கவன் இல்லாதவன், தன்
அமைப்புக்காரன், அடுத்த அமைப்புக் காரன் போன்ற ஏகப்பட்ட பாரபட்சங்கள்
காணப்பட்டன. இவர்கள்தான் ஆண்களுக்கு தலாக் மூலம் விவகாரத்து
வழங்கியவர்கள், பெண்களுக்கு குலா கோரிக்கைக்கு தீர்ப்பு வழங்க
வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள்.

என்றைக்கும் ஏற்ற ஷரியத் சட்டத்தை வைத்துக் கொண்டு தவறான நபர்கள்
தீர்ப்புகளை வழங்கியதால் ஷரியத் சட்டத்தின் மீது குறை என்ற ஓர்
பொய்த்தோற்றம் கட்டமைக்கப்படுகிறது.  இதற்கு அந்த தவறான முரட்டு நபர்களே
காரணமாகிறார்கள். இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பாதிக்கப்பட்ட
இஸ்லாமியர்களே இத்தீர்ப்புகளை எதிர்ப்பதற்கு அச்சப்படுகின்றனர். (மத
அறிஞரால் நடத்தப்படும் ஷரியத் ஆலோசனை மையத்தின் மீதும் இதுபோன்ற
புகார்கள் உண்டு)



ஆக… நேற்றும் இன்றும் நாளையும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நீதிச்
சட்டமான ஷரியத் சட்டத்தை சில தற்காலிக தவறான நபர்கள் கையிலெடுத்ததால்தான்
முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீது சில காழ்ப்புணர்வாளர்கள் கைநீட்டி
புகார் சொல்ல களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்று பொது சிவில்
சட்டம் அல்ல.

வக்ஃப் போர்டு போல ஜமாத்தார்களின் தீர்ப்பினை கண்காணிக்கும் அதிகாரம்
கொண்ட இமாம்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேல்முறையீடு செய்யும் வகையிலான…  மாவட்ட, மாநில, நாடு தழுவிய அளவிலான
ஒருங்கிணைக்கப்பட்ட ஷரியத் ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டால் ஷரியத்
சட்டம் சில தனி நபர்களால் தவறாகக் கையாளப்படும் களங்கம் களையப்படும்.

ஆனால் இந்த மாற்று ஏற்பாடுகளுக்கான நியாயங்களை முற்றாக மறுதலித்துவிட்டு
ஷரியத் என்ற அறிவு நிறைந்த சட்டத்தைக் கைவிடும் மத்திய அரசின் நோக்கம்
அரசியல் நிரம்பியது.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘முஸ்லிம் பெண்களைக் காப்பாற்றவே இந்த
பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருகிறோம்’ என்று திருவாய் மலர்கிறார்.
பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் தேர்தல்
பிரசாரத்தின் துவக்க விழாவில் பேசுகையில்,

‘’தொலைபேசியில் மூன்று முறை தலாக் சொல்வதன் மூலம் ஒரு முஸ்லிம் பெண்ணின்
வாழ்க்கையை அழிப்பதுதான் ஆணுக்கு அழகா? பெண்களுக்கும் சம உரிமை
வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது இந்து -முஸ்லிம்
பிரச்னை அல்ல.  ஓட்டுக்காக சில கட்சிகள், முஸ்லிம் பெண்களிடம் இருந்து
பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை  21-ம் நூற்றாண்டுக்கும் கொண்டு செல்ல
நினைப்பது  என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. முஸ்லிம் பெண்களுக்கு
அரசியல் சாசனத்தின்படி நீதி வழங்க வேண்டும். இதில் அரசியல் வேண்டாம்”
என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

வெங்கையா நாயுடுகளும், மோடிகளும் முஸ்லிம் பெண்களைப் பற்றி மிகவும்
கவலைப்படுகிறார்கள். அவர்களின் கவலை உண்மையாக இருந்தால்… முஸ்லிம்
பெண்கள் அனைவருக்கும்  தரமான இலவசக் கல்வியை, அவர்களின் சொந்தப்
பகுதியிலேயே வழங்க வேண்டும்.  இன்றும் கிராமப் பகுதிகளில் முஸ்லிம்
பெண்கள் வெகுதூரம் அனுப்பி வைக்கப்பட்டு கல்வி பயிலும் நிலையில் இல்லை.
எனவே  அவர்களுக்கு அவர்களின் சொந்தப் பகுதியிலேயே தரமான கல்வி வழங்குவதே
மிக முக்கியம். தவிர அவர்களுக்கு புதிய சட்டம் வழங்குவது இப்போதைய
தேவையல்ல.  முஸ்லிம்கள் பெண்களுக்கு உரிய கல்வியறிவு கிடைக்கப்பெற்றால்,
அவர்களே ஷரியத் தில் தங்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதைத்
தெரிந்துகொள்வார்களே..

  மத்திய அரசு முஸ்லிம் பெண்கள் பற்றி இன்னும் கவலைப்பட்டால் பல
ஆண்டுகளுக்கு முன் நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி  இந்திய
முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய்ந்து அளித்த அறிக்கை மத்திய அரசின்
பரணில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதை எடுத்துப் படித்து அந்த
கமிட்டியின் பரிந்துரைகளை  அமல்படுத்தினால்  இந்திய முஸ்லிம் பெண்களுக்கு
அதைவிட பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது.

ஆனால் இதையெல்ச்ச்லாம் செய்ய முன்வராத மோடிகளும், வெங்கையா நாயுடுகளும்,
‘இதை அரசியல் ஆக்க வேண்டாம்” என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலேயே
முழங்கி தங்கள் மண்டையை மறைத்தாலும் மண்டையில் இருக்கும் கொண்டையை
மறைக்கத் தவறியிருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருமா
என்பதே கேள்விக்குறியானது. இதுபோன்ற ஓர் விவாதத் தீயைக் கிளப்பிவிட்டு
அதன் மூலம் சிறுபான்மையினர் தங்கள் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள
கட்டாயமாக ஒருங்கிணைய வைக்கப்படுகிறார்கள். இதன் அடுத்தகட்டமாக
பெரும்பான்மையோரை ஒருங்கிணைத்து  உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்
தேர்தல்களில் தன் அரசியல் ஆதாயத்தை  பலத்தை அதிகப்படுத்திக் கொள்ளும்
முயற்சியில் இறங்கியிருக்கிறது பி.ஜே.பி. இதுதான் இப்போது பொது சிவில்
சட்டம் பற்றிய விவாதத்துக்கான சூட்சுமம்.



ஆக பி.ஜே.பி.யின் பொது சிவில் சட்டம் என்பது வெளிச்சத்தின் மீது
எழுதப்படும் இருட்டைப் போன்றதாகும்.

News

Read Previous

கறுப்புப் பணம்

Read Next

தமிழ் இலெமுரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *