பிறர் நலம் பேணல் !

Vinkmag ad

மகளிர் பக்கம்               

பிறர் நலம் பேணல் !

-பாகவியார்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் பிறரின் நலம் பேணியே நடந்திருக்கின்றார்கள். தம்மால் பிறருக்கு எந்தத் துன்பமும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். தம்முடைய பேச்சும் செயலும் பிறரின் மனதைப் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். தம்முடைய மனைவியானாலும், அவர்களின் மனதைக்கூடப் புண்படுத்திவிடாமலும் அவர்களின் உணர்வுகளை மதித்தும் நடந்திருக்கிறார்கள். அதற்குப் பின்வரும் நபிமொழி தக்க சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.

முஹம்மது பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரளி) அவர்கள் “என்னைப் பற்றியும் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உங்களுக்கு (ஒரு நிகழ்ச்சியை) நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டு விட்டுத் தொடர்ந்து கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்த ஓர் இரவில் அவர்கள் (இஷாத் தொழுகை தொழுதுவிட்டுத்) திரும்பி வந்தபோது தமது காலணிகளை, தமது பாதங்கள் படும் இடத்தில் (கழற்றி) வைத்தார்கள். மேலும் தமது கீழாடையின் ஒரு பகுதியை தமது விரிப்பின் மீது விரித்து, நான் உறங்கி விட்டேன் என்று அவர்கள் கருதும் நேர அளவு தங்கியிருந்தார்கள். பின்னர் அமைதியாகக் காலணியை அணிந்துகொண்டு தமது மேல்துண்டையும் நிசப்தமாக எடுத்துக்கொண்டு கதவை அமைதியாகத் திறந்து ஓசையின்றி வெளியானார்கள்.

நானும் எனது (இரவு ஆடைகளைக் களைந்துவிட்டு) தலையில் முக்காடுத் துணியைப் போட்டுக்கொண்டு சட்டையையும் கீழாடையையும் அணிந்து அவர்களுக்குப் பின்னால் (அவர்கள் இவ்வளவு இரகசியமாக எங்கே செல்கின்றார்கள் என்று பார்ப்பதற்காக நடந்தேன். இறுதியில் (மதீனாவிலுள்ள) பகீஉ(ல் ஃகர்கத்) எனும் பொது மயானத்திற்கு வந்தார்கள். (இறந்தவர்களுக்காக அங்கு) தமது கையை உயர்த்தி மூன்று முறை நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் திரும்பிவிட்டார்கள். நானும் (அவர்களுக்கு முன்பாகத்) திரும்பி விட்டேன். அவர்கள் துரிதமாக நடக்க நானும் துரிதமாக நடந்தேன். அவர்கள் ஓட்டமாக நடக்க நானும் ஓட்டமாக நடந்தேன். அவர்கள் பாய்ந்து ஓடிவர நானும் பாய்ந்து ஓடினேன். அவர்களை நான் முந்திக்கொண்டு (வீட்டில்) நுழைந்து படுத்துக் கொண்டேன்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் (வீட்டில்) நுழைந்தார்கள். அவர்கள் (என்னிடம்) “ஆயிஷாவே! உனக்கு என்ன ஆயிற்று? மூச்சு வாங்குறதே. உறங்கும் வேளையில் வயிறு ஏறி இறங்குகிறதே ! என்று கேட்டார்கள். நான், “(அப்படி ஒன்றும்) இல்லையே” எனக் கூறினேன். நபியவர்கள் “நீயே எனக்கு அறிவித்துவிடு ! இல்லையென்றால் நுண்ணறிவாளானான நன்கு அறிந்த அ(ந்த இறை) வன் எனக்கு அறிவித்து விடுவான்” என்று கூறினார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக !” என்று கூறிவிட்டு, விவரத்தை அவர்களுக்குச் சொன்னேன். (அப்போது) அவர்கள், நாம், எனக்கு முன்னால் பார்த்த கருப்பு (உருவம்) நீதானா? என்று கேட்டார்கள். நான், “ஆம் (நானே தான்)” என்று சொன்னேன். உடனே அவர்கள், தம் கையால் எனது மார்பில் எனக்கு வலி உண்டாகும் அளவு நன்கு அடித்துவிட்டு, அல்லாஹ்வும் அவன் தூதரும் உனக்கு அநீதியிழைத்துவிடுவார்கள் என்று கருதினாயா?” என்று கேட்டார்கள்.

நான், “மக்கள் மறைத்தாலும் அல்லாஹ் அதைத் திட்டவட்டமாக அறிவான்” என்று கூறினேன். பின்னர் நபியவர்கள், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் “நீ பார்த்த நேரத்தில் என்னிடம் வந்தார்கள். நீ உனது ஆடைகளைக் களைந்து வைத்(து விட்டு இரவு ஆடைகளை அணிந்) திருந்த நிலையில் என்னிடம் அவர்கள் வர (விரும்ப) வில்லை. ஆகவே அவர்கள் உன்னிடமிருந்து மறைந்துகொண்டு என்னை அழைத்தார்கள். நான் உனக்குத் தெரியாமல் அவரை மறைத்தேன். நீ உறங்கிவிட்டாய் என்று கருதினேன். எனவேதான் உன்னை எழுப்ப விரும்பவில்லை. மேலும் (நான் சென்றபின்) தனிமையில் இருப்பதை நீ வெறுப்பாயோ என்றும் அஞ்சினேன். (ஆகவே தான் எழுப்பவில்லை) பின்னர் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மதீனாவிலுள்ள) பகீஉ எனும் பொதுமயானத்திற்கு வருமாறும் (அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிற) அவர்களுக்கு பாவமன்னிப்புக் கேட்குமாறும் எனக்கு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள். (நூல்: நசயீ: 2010)

மனைவியின் தூக்கத்திற்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்பதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டதை இதிலிருந்து அறியலாம்.

நன்றி : இனிய திசைகள் – மே 2014

News

Read Previous

பிறை சொன்ன சேதி என்ன?

Read Next

என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *