பரக்கத்தான மணவிழா

Vinkmag ad

(  பேராசிரியை ஹாஜியா கே.கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ.பி.டி.,   )

 

“குறைந்த செலவில் திருமணமே அதிக பரக்கத் நிறைந்தது”.                                    –அல்ஹதீஸ்

அறிவிப்பாளர் : ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள்

நூல் : அஹ்மத்

  திருமணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்றியமையாத தேவையாகும். ஒருவரையொருவர் நேசிப்பதற்கு திருமணம் போன்று வேறெதுவுமில்லை. அது தீய பார்வையை விட்டு விலக்குகிறது. பொறுப்பு மிக்க ஆண்மகனாகவும், பெண்ணாகவும் மாற்றுகிறது. இறைவனின் பிரதிநிதியான மனிதனை உலகம் பிறந்ததிலிருந்து உலகின் அழிவு வரை உருவாக்கி அந்த சங்கிலித் தொடர் அறுந்து விடாமல் பாதுகாக்கிறது. அமைதியையும், அன்பையும், கருணையையும் தோற்றுவிக்கிறது. மானம் மரியாதைக்குரிய கேடயமாக உறவுகளை பலப்படுத்துகிறது. சுருங்கக் கூறின் இன்பம் நிறைந்த நல்லறச்சோலையாக மிளிர சுவனத்தின் வழிகாட்டியாகத் திருமணமே நிகழ்கிறது.

  இத்தகு எண்ணிலா நற்பயன்களைத் தரும் திருமணம் எவ்வாறு நடைபெற்றால் இரு வீட்டாரும், தம்பதிகள் இருவரும் இன்புற்று வாழ முடியும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழி வலியுறுத்துகிறது. பெண்ணின் ஒப்புதலும் ஆண்மகனின் மணக்கொடையான மஹரும், இரண்டு சாட்சிகளும் இருந்தாலே போதுமானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாய் கூசாமல் வரதட்சணை தொகை, நகைகள் கேட்பதும், ஊர் மெச்ச வேண்டுமென்பதால் நண்பர்களை, உறவினர்களை, வேண்டப்பட்டவர் என்ற முறையில் நூற்றுக்கணக்கில் கூட்டம் சேர்ப்பதும், அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க திருமண மண்டபங்களை வாடகைக்கு பிடிப்பதும் சீர் செனத்தி என பல வீணான சடங்குகளுக்கு எக்கச்சக்கமாக செலவழிப்பதும், பல வகையான உணவுப் பண்டங்களை தயாரித்தளித்து பெருமைபட்டுக் கொள்வதும் இப்போது நடைமுறை பழக்கங்களாகி விட்டன.

“செலவில் குறைவான திருமணமே பரக்கத்தால் நிறைந்தது” என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இரு தரப்பாருக்கும் செலவு குறைவாக இருப்பதால் மணமகன் வீட்டிலும், மணமகள் இல்லத்திலும் நிம்மதி நிலவும். கடன் தொல்லைகள் இருக்காது மேல்தட்டுமக்கள், கீழ்தட்டுமக்கள் என்ற வேறுபாடு களையப்படும். சிந்தித்து செயல்பட்டால் இறைவனின் பேரருளும், நபிகள் பெருமான் (ஸல்) அவர்களின் நெருக்கமும், ஷஃபாஅத்தும் நிச்சயம் கிடைக்கும்.

( பிப்ரவரி 2011 குர்ஆனின் குரல் இதழிலிருந்து )

News

Read Previous

பிப்ர‌வ‌ரி 26, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ ஆண்டு விழா

Read Next

பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்.. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *