நூல் விமர்சனம் : நாட்டுப்புறத் தமிழில்

Vinkmag ad

 

 

ஆசிரியர் : திருமலர் மீரான் பிள்ளை

விற்பனை : ஜெயகுமாரி புத்தக நிலையம்

கோர்ட் ரோடு

நாகர்கோயில் – 629001

பக்கம்   : 135 விலை ரூ. 14-00

நாஞ்சில் நாட்டாருக்கு எப்பொழுதுமே ஓர் அகம்பாவம் உண்டு. தாங்கள் தாம் தமிழன்னைக்குத் தலை மக்கள் என்று. இது பொறாமையோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஏனெனில் தமிழ் கன்னி நாஞ்சில் நாட்டில் தானே கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறாள் !

அவர்கள் அகம்பாவம் கொள்வதற்கு இசைவாக பண்டு வரலாற்றிலும், இன்றைய வாழ்விலும் ஆதாரங்கள் பல காண முடிகிறது.

ஞானக்கடல் பீரப்பா தங்களின் நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக் கொண்டதும் நாஞ்சில் நாட்டைத்தான்.

மெய்நிலை கண்ட ஞானி நூஹ் ஒலிவுல்லா தேர்வு செய்து கொண்டதும் நாஞ்சில் நாடுதான்.

குஞ்சு மூஸுப் புலவர் போன்று இன்னும் எத்தனையோ வரலாறு உண்டு. இது பண்டு, இன்றோ,

தமிழ்க் கடல் பேராசிரியர் கா.அப்துல் கபூர் சாகிபு, இவரின் இளவல் பாரூக் உள்ளிட்டுப் பலர். இவர்களில் ஒருவர் தான் திருமலர் மீரான் பிள்ளை. இவர் தமிழுக்கும், வரலாற்றுக்கும், அரசியலுக்குமாக 3 எம்.ஏ பட்டம் பெற்றவர். இவர் தான்.”நாட்டுப் புறத்த தமிழியல்” என்ற பெயரில் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

இந் நூலுக்குள் 9 தலைப்புகளில் நாட்டுப்புற சிற்றிலக்கியங்களை அலசி தெளிவாக விளக்கிக் காட்டுகிறார். இந்த 9 தலைப்புகளும்,        (1) காசிம் படைப்போர், (2) இரவிக் குட்டிப் பிள்ளைப் போர், (3) கான் சாகிபு சண்டை, (4) ஐந்து படைப்போர், (5) சைத்தூன் கிஸ்ஸா, (6) தம்பிமார் கதை, (7) சக்கூன் படைப்போர், (8) இராமப் பையன் அம்மானை, (9) மலுக்கு முலுக்கு ராஜன் கதை என்பவையாகும்.

மீரான் பிள்ளை நாட்டுப்புற சிற்றிலக்கியங்களை எடுத்து அலசிக் காண முயன்றிருப்பது தமிழின் மீது உள்ள தனிப் பற்றினால் என்பது மிகையல்ல.

இஸ்லாமியத் தமிழின் சிற்றிலக்கியங்களையும் பெருங்காப்பியங்களையும் ஆய்ந்து காணத் துவங்கினாலே, செய்திச் சுரங்கம், இலக்கிய நயச்சுரங்கம் திறந்து கொண்டு வாரித் தரும் என்பதில் ஐயமில்லை. எனினும் மீரான் பிள்ளை பரந்த கண்ணோட்டத்தில் தமிழுறவால் இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், தம்பிமார் கதை, இராமப்பையன் அம்மாளை ஆகிய சிற்றிலக்கியங்களையும் சேர்ந்திருக்கிறார். இது வரவேற்கத் தக்கது பாராட்டத்தக்கது.

இது இஸ்லாமியத் தமிழரின் தமிழ் மீதுள்ள பேரார்வத்தைக் காட்டுகிறது. அதே சமயம்.

தமிழ், தமிழ் என்று தலை வீங்கக் கத்துகின்ற பலர் செயலைக் காணும்போது வேடிக்கையும் வீனோதமுமாக இருக்கிறது.

தமிழைப் பற்றிப் பேசுகிறவர்கள் உண்மையிலேயே தமிழ் தெரிந்தவர்கள் தானா காப்பியங்களுக்குள் இருக்கின்ற அழியா கருவூலங்களைக் கண்டு சுவைக்கத் தெரிந்தவர்கள் தானா என்று ஐயப்பாடு நமக்குத் தோன்றுகிறது, எடுத்துக்காட்டாக,

முஸ்லிம் அல்லாத தமிழ்ப் பெரும் புலவோர் பலர் ஒரு முகமாகக் கூறுகின்றனர்.

“சிலப்பதிகாரம், மணிமேகலை பெருங்கதை, சிந்தாமணி, இராம கதை, பெரிய புராணம் முதலியன அழியாக் காப்பியங்கள் இவை தமிழன்னை பெற்றுள்ள தலையாய அணிகலன்கள். இவை போன்ற இலக்கியங்கள் தோன்ற வேண்டும்” என்கின்றனர்.

இவர்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது.

ஐயா புலவன்மாரே !

தமிழ்ப் பெருங்காப்பியங்களாக, புதூ குஷ்ஷாம், ராஜநாயகம், சீறாப்பிராணம், தீன் நெறிநீதம், ஆயிர மசலா, வேதபுராணம் இவைகளெல்லாம் இருக்கின்றனவே, இவைகளெல்லாம் அழியாப் பெருங்காப்பியங்களல்லவோ, இப்படிப் பெருங்காப்பியங்களும் தமிழில் இருக்கின்றன என்பதாவது உங்களுக்கு தெரியுமா? அல்லது உங்கள் கருத்துக்கள் குருடாகிவிட்டனவா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

இன்று சிதைந்து கிடக்கின்ற சிற்றிலக்கியங்களை மீரான் பிள்ளை சேகரித்துத் தந்திருக்கிறார் என்றால் நிச்சயமாக முஸ்லிம்கள் அதற்காக அவரைப் பாராட்டப் போவதில்லை; ஏனெனில்,

நடுக்காலத்தில் வடவரின் வயிற்றுக்குள்ளே சென்று ஒடுங்கி செறித்துக்கொண்டிருந்த தமிழை வெளியில் இழுத்துப் போட்டு, நீராட்டிச் செம்மைப்படுத்தி, மீண்டும் அதை கன்னித் தமிழாகக் காட்டிய பெருமை முஸ்லிம்களுக்கே உண்டு, இதை எவர் உடன்பட்டாலும் சரிதான். முறண் பட்டாலும் சரிதான். உண்மை அதுதான் என்பதை வரலாறு மறுக்காது.

ஆக, தமிழைக் காத்த அந்த இஸ்லாமியப் பெருமக்களின் வரிசையிலே மீரான் பிள்ளை தமிழை நூலாக்கித் தந்திருப்பதால் தனிப் பாராட்டுத் தேவையில்லை. அவரின் “நாட்டுப்புறத் தமிழியல்” எனும் நூலை அனைவரும் படித்துப் பல செய்திகளைத் தெரிவதற்கு வாய்ப்பைப் பெறலாம்.

 

நன்றி :

பசும்கதிர்

ஆகஸ்ட் 1987

News

Read Previous

முஸ்லிம் சாதனையாளர் !

Read Next

பசியின் பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *