நூல்: விடுதலைப் பெரும் போரில் வீரமிகு உலமாக்கள்

Vinkmag ad

நூல் அறிமுகம்.
<><><><><>
நூல்: விடுதலைப் பெரும் போரில் வீரமிகு உலமாக்கள்.
ஆசிரியர்: பேராசிரியர்.
எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்.
பக்கங்கள் : 64. விலை: 60 ரூபாய்.
வெளியீடு: புத்தொளி பதிப்பகம்.
தொடர்புக்கு: 95000 62791, 94433 32914.
~~~~~~~~~~~
விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் முஸ்லிம்களையும் இஸ்லாமிய அறிஞர்களையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெள்ளைய அதிகாரிகள் எப்படிப் பார்த்தார்களோ அதே பார்வையோடு தான் இப்போதைய இந்துத்துவ அரசுகள் பார்க்கின்றன.

மோடி தலைமையிலான முதல் அரசில் அங்கம் வகித்தவர்கள் இரண்டாம் அரசில் அங்கம் வகிப்பவர்கள் மாத்திரமல்ல, பல கட்சிகளின் ஆதரவில் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்தோரும் அப்படித்தான்.

வருணாசிரம தர்மத்தின் படி ஆரிய வர்த் இந்து ராஷ்டிராவை இந்தியாவில் அமைத்திடத் துடிக்கும் பயங்கரவாதிகள் (ஆலிம்களை) இஸ்லாமிய அறிஞர்களைக் கண்டு மிரள்வது ஏன்?

பயங்கரவாதிகள் என அவர்கள் மீது முத்திரை குத்தி பொதுச் சமூகத்திலிருந்து அவர்களை விலக்கி வைக்க முற்படுவது எதனால்?

இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கும் மத்ரஸாக்களை “தீவிரவாதத்தின் கோவில்” என்று பீதிவயப்பட்டு பிதற்றுவதற்கு என்ன காரணம்?

இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டுமானால் வரலாற்றை அறிவது அவசியம்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் அதிகாரக் கால்களை வைத்தபோது அதை எதிர்த்து முழு வீச்சாக போராடியவர்கள் இஸ்லாமிய அறிஞர்களே!
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை தம்முடைய மன உறுதியாலும் வீரதீரமான போராட்டங்களாலும் கூர்மையான திட்டங்களாலும் இந்தியாவிலிருந்து விரட்டியடித்தனர் ஆலிம்கள்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போர்களை முன்னே நின்று வழி நடத்த வேண்டிய தேவை ஏற்பட்ட போது அதைச் செய்தார்கள். பின்னாலிருந்து இயக்க வேண்டிய நேரத்தில் இயக்கினார்கள்.பொருள் தேவைப்பட்ட நேரத்தில் திரட்டி வழங்கினார்கள். இன்னுயிர் தேவையெனும் பட்சத்தில் இன்முகத்துடன் உவந்தளித்தனர்.
ஜின்னாவையும் காந்தியையும் முன்னே நிறுத்திவிட்டு பின்னால் நின்று கொண்டனர்.

இந்த போர் உத்திகளை உடைக்க இயலாமல் உடைந்து போனது பிரிட்டிஷ் அரசு. விட்டால் போதும் என்று ஓடிப் போனது.
மனிதனை வஞ்சிக்கின்ற மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற, சமநீதிக்கு எதிரான கொள்கை எதுவாயினும் அது எந்தப் பெயரை சூட்டிக் கொண்டு வந்தாலும் மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு இதுதான்.

அந்த அநீதியான கொள்கையின் பிதாமகன்கள் இந்திய எல்லைக்குள் பிறந்தவர்களா? வெளியில் பிறந்தவர்களா? என்று அவர்கள் பேதம் பார்ப்பதில்லை.
அநீதியாளர்களிடமிருந்து அப்பாவிகளை காப்பாற்றிட வேண்டும் என்ற மார்க்கக் கட்டளையே உலமாக்களை வழி நடத்திற்று.
“இந்துக்கள் முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது முஸ்லிம்களின் கடமை” என்று ஷா அப்துல் அஜீஸ் தைஹ்லவீ(ரஹ்) அவர்கள் ஃபத்வா வழங்கியிருப்பது அந்த அடிப்படையில் தான்.

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் “ஆரியவர்த் இந்து ராஷ்டிரா” அமையும் போது அதை முழு வீச்சில் எதிர்ப்பவர்களாக இந்த உலமாக்களே இருப்பார்கள் என்பதை இந்துத்துவம் நன்கறியும்.

எனவே தான் இவர்களை உருவாக்கிய மத்ரஸாக்களையும் இவர்கள் உருவாக்கிய மத்ரஸாக்களையும் பயங்கரவாதத்தின் பிறப்பிடம் என்று கூறி பொதுச் சமூகத்தை அச்சுறுத்தி உலமாக்களை வெறுக்க வைக்க முயல்கின்றனர் இந்துத்துவவாதிகள்.

இந்த சூழலில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எழுதி வெளியிட்டுள்ள இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
விடுதலைப் போரில் முன்னே நின்ற வீரமிகு உலமாக்கள் பத்தொன்பது பேரையும் அவர்களின் தியாகங்களையும் குறிப்பிட்டு விட்டு இறுதியாக “உலமாக்களை விமர்சிக்க சங்கிகளுக்கு அருகதையில்லை” என்ற இருபதாவது பகுதியில் சங்கிகளின் துரோக வரலாற்றைத் தொட்டுக்காட்டுகிறது இந்நூல்.

அது இந்த நூல் உருவானதற்கான தேவையைச் சொல்கிறது.
“இந்தியா தாருல் ஹர்பு (போரிட்டு மீட்க வேண்டிய நாடு) என்ற ஃபத்வாவை வழங்கியது யார்? எப்போது வழங்கினார்? அதன் பின்னணி என்ன? என்பதையெல்லாம் விளக்கும் பகுதி (பக்கம்:12) சிறப்பு.

“டில்லியின் பழைய பெயர் ஷாஜஹான்பாத்”(பக்கம்:25)

ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னோடி உலமாக்களே(பக்கம்:30)

“பூரண சுதந்திரம் முதலில் கேட்டது உலமாக்களே”(பக்கம்:30)
“வெள்ளையனே வெளியேறு என்று முதலில் தீர்மானம் போட்டது உலமாக்களே”(பக்கம்: 31)

1923 ஆம் ஆண்டு அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது; “ப்பூ….இவ்வளவுதானா உங்கள் தண்டனை? இன்னும் பெரிய தண்டனையை அல்லவா எதிர்ப்பார்த்தேன்” என்று ஆசாத் ஆதங்கப்பட்டார்.(பக்கம்:39)

இப்படி பல அரிய தகவல்களை தாங்கி நிற்கும் இந்த நூல் இளம் தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டியது பரப்பவேண்டியதும் கூட.
-Ilyas Riyaji
வைகறை வெளிச்சம், ஆகஸ்டு,2019 இதழ்.

News

Read Previous

அறிவியலின் பின் அணிவகுப்போம்

Read Next

தமிழக முதல் அமைச்சருக்கு வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *