நரகத்தின் ஆடையை அணியாதீர்

Vinkmag ad

இஸ்லாமியக் குடும்பம் :

நரகத்தின் ஆடையை அணியாதீர்

முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ! “இரு பிரிவினர்கள் நரகவாதிகளாக இருக்கிறார்கள். அதில் ஒரு பிரிவினர் யாரென்றால் (தன் மேனி தெரிய) மெல்லிய ஆடை அணிந்து, தன் தோள்களைச் சாய்த்தபடி நடந்து (அன்னிய ஆண்களின் கவனத்தைத்) தன் பக்கம் கவரக்கூடிய பெண்கள் ஆவார்கள்”.

பெண்களின் ஆடைகள் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதில் கண்ணியம் இருக்க வேண்டும் என்ற அக்கறையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த அறிவுரையை நபி மணித்தோழர் ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்திருக்க இது “முஸ்லிம்” என்னும் நபி மொழித் திரட்டில் இடம் பெற்றிருக்கிறது.

“ஆள் பாதி ஆடை பாதி” என்று சொல்லுவார்கள். எந்த அளவுக்கு கண்ணியமான ஆடை அணிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்குத் தான் சமுதாயத்தில் நமது மதிப்பும் இருக்கும்.

அலங்கோல ஆடையாக இருந்தால் மதிப்பும் அலங்கோலமாகத்தான் இருக்கும் ! அலங்கார ஆடை அணிந்திருந்தால் மரியாதையும் அலங்காரமாகவே இருக்கும். ஆனால் அலங்கார ஆடை என்பது இந்தக் காலத்தில் அலங்கோலக் காட்சிக்கு உரியதாகவே இருக்கிறது.

சிறு குழந்தைகளுக்குரிய ஆடையாக இருந்தாலும் அது ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் சமுதாயம் பெண்கள் சமுதாயம்.

பிள்ளைப் பக்குவம் :-

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதே பெண் இனத்தின் பெருமை எனப்போற்றி நிற்பது நமது இனம்.

இதையெல்லாம் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் காற்றிலே பறக்க விட்டு விட்டார்கள். தனது பெண் குழந்தைகளை விழாக்களுக்கு அழைத்துச் செல்லும் போதுகூட அவர்களின் ஆடைகளிலே கட்டுப்பாடு இருக்கிறதா என்பதை அவதானிப்பதில்லை.

ஆயிரமாயிரம் ஆண்கள் கூடி இருக்கும் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளிலே பெண் பிள்ளைகளை கண்ணியமாக உடை உடுத்தி அழைத்து வர மறந்து விடுகிறார்கள்.

பத்து வயதுப் பெண்ணுக்குக் கூட முட்டுக்காலுக்கு மேலே உள்ள மினிப் பாவாடை ! தோள் வரைக்கும் மட்டும் உள்ள சட்டை… (மேலும் இதை விளக்கிச் சொல்ல கண்ணியமான இந்தக் “குர் ஆனின் குரல்” இதழில் விருப்பமில்லை. புரிந்து கொள்ளுங்கள்.)

பொது இடங்களில் நமது பெண் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது அவர்களின் ஆடைகளின் ஒழுக்கத்தைக் கண்டு பார்ப்பவர்கள் முகம் மலர வேண்டும் ! முகம் சுளிக்கக் கூடாது.

இது யார் வீட்டுப் பிள்ளை? இது யாருடைய மகள்? என்று கேட்கும் போது அதன் பெற்றோர்களுக்கு மதிப்பு கிடைக்க வேண்டும்.

“இந்தப் பிள்ளை எவ்வளவு அழகாக இருக்கிறது? எப்படி ஒழுக்கமான ஆடை அணிந்திருக்கிறது? இது அல்லவா பிள்ளை ! இது அல்லவா குடும்பம் ! நல்ல வளர்ப்பு வளர்த்து இருக்கிறார்கள் !” என்று புகழ்ந்து கூற வேண்டும்.

மோசமான ஆடை அணிந்து இருக்கும் பிள்ளையைப் பார்த்து “இது என்ன பிள்ளையா? இது என்ன குடும்பமா? ஏன் இந்தப் பிள்ளைக்கு இப்படி அசிங்கமான ஆடையை அணிவித்து அழைத்து வந்திருக்கிறார்கள்? நாளை இந்தப் பிள்ளை எப்படி ஒழுக்கமாக வளரும்?” என்று மனம் விசனப்படக் கூடாது.

புர்காவின் பக்குவம் ?

சிறு குழந்தைகளைத்தான் இப்படி அறியாப் பருவத்திலே கெடுத்து வைக்கிறார்கள் என்றால், எல்லாம் தெரிந்து அறிந்த குடும்பத் தலைவிகள் கூட ஆடை விஷயத்தில் மிகப்பொடுபோக்காகவே இருக்கிறார்கள்.

புர்கா அணியும் பெண்கள் கூட தனது தலை முடியைப் பின் பக்கம் வெளியே தெரியும் படித்தான் தொங்க விட்டுக் கொள்கிறார்கள். இது எப்படி முழுமையான ஒழுக்கமாக இருக்க முடியும்?

புர்காவிலே கூட பலவிதமான கவர்ச்சியான வேலைப்பாடுகள் உள்ள “ஒர்க் டிஸைன்” புர்கா தான் நிறைய வலம் வருகிறது? இது தன்னை மறைக்கும் ஒழுக்கமான ஆடையா? அல்லது தன்னை விளம்பரப்படுத்தும் விபரீதமான ஆடையா? ஒன்றுமே புரியவில்லை.

ஆடை ஒரு விமர்சனம் :-

அந்நிய ஆண்களைத் தன் பக்கம் கவரக் கூடிய ஆடைகள்… அது மிடி, சுடிதார் செட்டாக இருந்தாலும் சரி… சேலையாக இருந்தாலும் சரி… புர்காவாக இருந்தாலும் சரி… அது நரகின் பக்கம் இழுத்துச் செல்லும் ஆடை தான் !

ஒரு பெண் வெளியே செல்லும்போது தனக்குப் பிடித்த அழகிய ஆடையை அணிந்து செல்கிறாள். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கூடி இருக்கும் சபைக்குச் செல்கிறாள். நூற்றுக்கணக்கான பல உறவினர்களையும் நட்புக் குடும்பத்தினரையும் சந்திக்கிறாள். பல தோழிகளையும் சந்திக்கிறாள். இப்படி பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போது… நேருக்கு நேராகப் பேசும் மனிதர்கள் அந்தப் பெண்ணிடம் எந்தக் குறையையும் சொல்லமாட்டார்கள். அவர்களை விட்டு விலகிச் செல்லும்போது தான் அவளின் பேச்சு, குடும்பம், உடை பற்றி விமர்சனம் செய்வார்கள். அது அந்தப் பெண்ணுக்குத் தெரியாது.

அந்த விமர்சனம் சந்தோஷமானதாகவும், கண்ணியமானதாகவும், உயர்வாகவும் இருக்க வேண்டுமானால் அந்தப் பெண்ணின் குடும்பமும், பேச்சும், உடையும் கண்ணியமாக இருக்க வேண்டும்.

உடை கூட கண்ணியத்தை உயர்த்தி வைக்கும் என்பது உண்மைதான். “ஆடையை வைத்தே மனிதன் அளக்கப்படுகிறான்” என்கிறார்கள். ஒழுக்கமான ஆடை அணிந்துள்ள பெண்களை உயர்வானவர்கள் என்றும், ஒழுக்கம் குறைந்த ஆடை அணிந்துள்ள பெண்களை ஒழுக்கம் கெட்டவள் என்றும் உலகம் நினைப்பது இயற்கை தானே?

ஒழுங்கீனமான ஆடைகளை அணிந்து செல்லும் பெண்களைப் பற்றி வாழ்விலும் ஒழுக்கம் இல்லாமல் தான் இவள் இருப்பாள் போல என எண்ண வைத்து விடும்.

அப்படிப்பட்ட பெண்களிடம் பிற ஆண்கள் பேசும்போது கூட கண்ணியமாகப் பேசமாட்டார்கள். உள்ளொன்றும், புறமொன்றும் வைத்துத்தான் பேசுவார்கள். இரட்டை அர்த்தத்தோடு விடைத்துப் பேசுவார்கள்.

பெண்ணின் பாதிப்பு :-

இதையெல்லாம் புரியாத சிலவெகுளிப் பெண்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி புண்பட்டுப் போய் விடுகிறார்கள். இதனால் கணவனின் அன்மை இழந்து, நம்பிக்கையை இழந்து, நல்ல வாழ்வையே இழந்து விடுகிறார்கள்.

இத்தனைக்கும் காரணம் என்ன? அந்த ஒழுங்கில்லாத உடை தானே? அழகான – அலங்காரமான உடைகளை உடுத்துவதில் தவறில்லை … ஆனால் அது ஒழுங்கில்லாமல் இருக்கக் கூடாது. உடல் வெளியே தெரிவது போல் இருக்கக் கூடாது. இது தான் முக்கியம்.

பல ஊடகச் செய்திகளைக் காணும்போது பல அசிங்கமான சம்பவங்கள் நடப்பதற்குப் பெண்களே காரணமாக இருப்பது தான் ! அவர்களின் உடைகளை வைத்து ஒழுக்கத்தை தவறாக எடை போட்டு விடுவதுதான் என்று அறிய முடிகிறது.

அதைக் காணும் ஒழுக்கம் கெட்ட ஆண்கள் மன ஊசலாட்டத்துக்கு ஆட்பட்டு விபரீத விளைவுகளைச் சந்தித்து சந்தி சிரிக்கச் செய்து விடுகிறார்கள் ! இது தேவை தானா? நமது அழகு நம்மோடு ! இதைப் பிறருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் உடை நமக்குத் தேவையில்லை !

 

நன்றி :

குர்ஆனின் குரல்

ஏப்ரல் 2013

 

 

News

Read Previous

ப்ளாக் தொடங்குவது எப்படி?

Read Next

‘தமிழ் கொண்டு தனித்துவமாக இயங்கிய தூதுவர்’ — தனிநாயகம் அடிகளார்