தேவை இல்லாத உறவு

Vinkmag ad

வானொலி 6

சிறுகதை

தேவை இல்லாத உறவு

           (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)

 

 

என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு படுத்திருக்கிறானே … இந்த குணாவைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லப் போகிறேன் !

 

குணா ! என் கல்லூரித் தோழன் பெயருக்கேற்ற குணமும் அவனிடம் குடிகொண்டு இருந்தது! நற்குணம் குடிகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தப் பெயரை அவனுக்குப் பெற்றோர்கள் சூட்டினார்களோ என்னவோ? அப்படிப்பட்ட குணவாளன் என் குணா !

 

ஈ எறும்புக்குக் கூட இன்னல் செய்யக்கூடாது என்ற எண்ணமுள்ளவன் என் குணா. இப்போது கூட அவனை மொய்க்க வரும் ஒரு ஈ எறும்பைக்கூட எதிர்த்து விரட்டச் சக்தி அற்றுத்தான் சுருண்டு படுத்திருக்கிறான் குணா.

 

ஏன் இப்படி ஆனான் என்று கேட்கின்றீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள் !

 

ஈப்போவில் விரல் விட்டு என்னும் உயர்ந்த செல்வந்தர்களில் குணாவின் தந்தையும் ஒருவர். ஈப்போவிலேயே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருந்தான் குணா. ஒரே ஆண் பிள்ளையை உயர்ந்த படிப்புப் படிக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த ஆசையில் தலைநகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் புகுத்தினார்கள் அவன் பெற்றோர்கள்.

 

அங்கே தான் என் குணா எனக்கு முதல் அறிமுகம். குணாவின் தன்னடக்கமும், ஒளி வீசும் முகமும் அவனை உயர்ந்த வீட்டுப்பிள்ளை என விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது !

 

முதல் நாள் பெயரையும் ஊரையும் மட்டும் கேட்டேன். வகுப்பாசிரியரின் வினாவுக்கு ஒரு வரியில் விடை சொல்லும் மாணவன் போல “குணா”… ஈப்போ… என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டான்.

மறுநாள், “குணா.. உனக்கு ஈப்போ என்றால் எங்கு தங்கி இருக்கிறாய்? எங்கே சாப்பிடுகிறாய்? என்று கேட்டேன்.

“என் அப்பாவின் நண்பர் வீட்டில் அங்கே தான் சாப்பாடு. மாதம் முடிந்ததும் அவர்களுக்கு என் அப்பா பணம் அனுப்பி விடுவதாகச் சொல்லி இருக்கிறார்” என்றான்.

அதைக் கேட்டதும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. குணா நல்ல பையனாக இருக்கிறான். ஒரே வகுப்பில் படிக்கும் நண்பனுக்கு நாமும் உதவி செய்தால் என்ன? இதை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

கல்லூரி நேரம் முடிந்ததும் வெளியே வந்த குணாவிடம், “குணா” என் வீடு ரொம்ப பக்கம் தான்… வாயேன் வீட்டில் போய் ஏதாவது தண்ணீர் சாப்பிடலாம். அப்படியே என் அப்பா அம்மாவையும் உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று அழைத்தேன்.

“வேண்டாம் வேண்டாம் ! நான் தங்கி இருக்கும் வீடும் ரொம்ப பக்கம் தான். அந்த அங்கிள் ரொம்ப கண்டிஷனான ஆள் ! கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஏன்? என்ன? என்று குடைந்து கேட்பார். இன்னொரு நாள் பார்க்கலாமென்று” போய் விட்டான்.

குணாவின் கட்டுப்பாடு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. குணாவைப் போல் ஒரு நல்ல மாணவன் தான் நமக்குத் தேவை என்று அப்போதே எண்ணிக் கொண்டேன்.

வீட்டில் வந்து விபரம் சொன்னேன். குணாவின் குணங்களைப் பற்றியும், என் வகுப்பில் என் அருகில் அவன் இருப்பதைப் பற்றியும் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொன்னேன். அவன் என்னோடு நம் வீட்டிலேயே தங்கினால் ஒருவருக்கொருவர் கல்வி விபரங்களைக் கலந்து கொள்ளலாம் என்றும் சொன்னேன்.

“அதெற்கென்ன சிவா? நம் வீட்டில் தான் நான்கு அறைகள் இருக்கிறதே? குணா இங்கு தங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லப்பா … ஆனா அவங்க அம்மா அப்பா அதுக்கு சம்மதிப்பாங்களா?” என்றார் அப்பா.

“நீங்கள் எப்படியாவது அவங்க அம்மா அப்பாவைத் தொடர்பு கொண்டு பேசிப் பாருங்களேன் அப்பா” என்றேன்.

“முதலில் நீ குணாவைக் கேட்டுவை பிறகு நான் அவர் அம்மா அப்பாவிடம் தொடர்பு கொள்கிறேன்” என்றார் அப்பா.

மறுநாள் என் விருப்பத்தையும் என் அப்பாவிடம் பேசியதையும் குணாவிடம் எடுத்துச் சொன்னேன். அவன் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

“ஏற்பாடு செய் சிவா. அந்த அங்கிள் வீட்டில் என் வயதில் யாருமே இல்லை சிவா எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ கட்டிப்போட்டது போலத்தான் இருக்கிறது. உன் வீட்டில் தங்கினாலும் இருவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன் என்று பச்சைக்கொடி காட்டினான் குணா.

என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குணா என் திட்டத்திற்கு விடை கொடுத்து விட்டதை என் அப்பாவிடம் வந்து சொன்னேன். அவருக்கும் அதில் சந்தோஷம் தெரிந்தது.

அந்த ஞாயிற்றுக் கிழமை என் பெற்றோருடன் நானும் குணாவும் ஈப்போ சென்றோம்.

குணாவின் தாய் தந்தையைப் பார்க்கும் போது என்னை அறியாமலே கையெடுத்துக் கும்பிட்டேன். அத்தனை சாந்த சொரூபமாக இருந்தார்கள். என்னையும் என் பெற்றோரையும் குணா தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

என் அப்பா எங்கள் ஆசைகளை குணாவின் பெற்றோரிடம் எடுத்துச் சொன்னார். அவர்களுக்கும் இதில் விருப்பம் தெரிந்தது. “சரி ஒன்றாகப் படிக்கும் பையன்கள் ஒரே இடத்தில் தங்கி இருந்தால் ஒருவருக்கொருவர் உபகாரியாக இருக்கலாம். என் மகனும் விரும்புகிறான். குணா இனி உங்கள் பிள்ளை” என்று ஆசீர்வதித்து அனுப்பி விட்டார் குணாவின் அப்பா.

அன்று முதல் என் பெற்றோர்களுக்கு இரண்டு பிள்ளைகள் ஆனது நானும் குணாவும் தான்” “சிவா …குணா” “சிவா … குணா” என்று என் அப்பாவும் அம்மாவும் சாமி பெயரைச் சொல்லுவது போலச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

குணாவும் நானும் அம்மாவுக்கு ஒட்டிப் பிறக்காத இரட்டைப் பிள்ளைகள். ஒன்றாக நிற்க வைத்து நெற்றியில் பொட்டு வைத்துத்தான் கல்லூரிக்கு அனுப்பி வைப்பாள் அம்மா.

குணாவும் நானும் வெளியிலிருந்து வீட்டுக்கு வரும் போது குணாவுக்கு ஒரு வினாடிக்கு முன்னால் நான் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் போதும் “எங்கேடா என்பிள்ளை?” என்று அம்மா அலறுவாள். அப்படி ஒரு பாசத்தை குணா எங்கள் வீட்டில் உருவாக்கி விட்டான். சாப்பிடுவதற்காக நானும் குணாவும் ஒன்றாக உட்கார்ந்திருந்தாலும் குணாவின் தட்டில் தான் முதலில் சோறு போடுவாள் அம்மா.

கல்லூரி விடுமுறை நாட்களிலே கூட குணா வெளியே செல்ல விரும்ப மாட்டான். சமையல் அறையில் நிற்கும் என் அம்மாவையும், வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் என் அப்பாவையும், பிள்ளையார் சுற்றி வருவதைப்போல சுற்றிக் கொண்டு நிற்பான் !

அன்றொரு நாள் ஏதோ ஒரு தாமதம் ! வீட்டில் இருந்து நானும் குணாவும் அவசர அவசரமாக வெளியாகி வேகவேகமாகக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தோம். சாலையைக் கடக்கும் அவசரத்தில் ஒரு பள்ளிச்சிறுமி குணாவின் சைக்கிளில் மோதிக் கீழே விழுந்து விட்டாள் குணாவும் சிறிதும் எதிர்பாராமல் கீழே சரிந்து விட்டான்.

இருவரும் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் “சாரி” சொல்லிக் கொண்டு சமாதானம் ஆகி விட்டார்கள். அந்தச் சிறுமியின் முட்டுக்காலில் கொஞ்சம் அடிபட்டு ரத்தம் கசிந்திருந்தது. அதைக் கண்ட குணா அவள்மீது இரக்கப்பட்டு பத்து ரிங்கிட்டை எடுத்து நீட்டினான். அவள் “பரவாயில்லை… வேண்டாம்” என்றாள். இந்தக்கதை அதோடு முடிந்து விட்டது என்றுதான் நினைத்தேன். என் நினைப்பு தவறாகி விட்டது.

இரண்டு நாட்களுக்குப்பின் சம்பவம் நடந்த அதே இடத்தில் சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்தாள். எங்களைக் கண்டதும் சந்தோஷமான புன்னகை ஒன்று அவளிடமிருந்து பிறந்தது. நாங்களும் பதிலுக்கு கொஞ்சம் சிரித்துக் கொண்டோம்.

சிவா ! அவளிடம் கொஞ்சம் பேசுவோம் வா என்றான் குணா. வேண்டாம் குணா ஏன் தேவை இல்லாமல்?” என்று நான் மறுத்தேன்” பரவாயில்லை நீ வேண்டாம் நான் கொஞ்சம் பேச வேண்டும் போல இருக்கிறது. நான் பேசிவிட்டு வருகிறேன்” என்று குணா அவளை நோக்கிச் சென்றான். நான் சாலையின் ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன்.

ஒரு அரைமணி நேரம் கழித்து குணா என்னிடம் வந்தான். “அவள் பாவம் சிவா ! அப்பா இல்லையாம். அவளையும் அவள் அம்மாவையும் விட்டுவிட்டு காணாமல் போய் இரண்டு வருடம் ஆகிறதாம். அவள் அம்மா மட்டும் ஏதோ ஒரு உணவகத்தில் வேலை செய்கிறாராம். இவள் பக்கத்துப் பள்ளிக் கூடத்தில் தான் SPM படித்து கொண்டிருக்கிறாளாம் … பாவம் சிவா … என்றான் நான் எந்த பதிலும் கூறாமல் அமைதியாகவே வந்து கொண்டிருந்தேன். என் அமைதி குணாவுக்குப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.

என்ன சிவா? பேச்சையே காணோம்? கோபமா? என்றான். சேச்சே … என்ன கோபம்? அதெல்லாம் ஒன்றுமில்லை” என்ற நான் தொடர்ந்து சொன்னேன், குணா இதோடு இதை விட்டுவிடு. இனிமேல் அவளைக் கண்டாலும் பேச வேண்டாம். இது நமக்குத் தேவையில்லாத உறவு. இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. யாருக்கும் திடீர் என்று இரக்கப்பட்டு விடக்கூடாது. நமக்கு இது வேண்டாம். இந்த உறவு பெரிதாகி விட்டால் உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் பதில் சொல்ல முடியாது” என்றேன் அமைதியாக,

நான் சொன்னது குணாவுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டது.” என்ன சிவா என்ன என்ன வெல்லாமோ பேசுகிறாய்? நான் என்ன அவளைக் காதலிக்கப் போகிறேன் என்றா சொன்னேன்? அல்லது கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேனா? நம் சைக்கிளில் அடிபட்டவள் என்ற பரிதாபத்தில் தான் சிவா பேசினேன்” என்றான்.

“குணா ! நான் சொல்வதைக் கொஞ்சம் யோசித்துப்பார். உன் சைக்கிளில் ஒரு தடவை அடிபட்டவள் என்ற பரிதாபத்தில் பேசியதாக நீ சொல்கிறாய், அவளுக்குக் கிடைத்த இந்த அரை மணி நேரத்தில் அவள் வாழ்க்கைக் கதையையே உன்னிடம் சொல்லி இருக்கிறாள். எந்த உறவில் அவள் இதையெல்லாம் உன்னிடம் சொன்னாள்? முதல் பேச்சிலேயே இதையெல்லாம் உன்னிடம் அவள் சொல்ல வேண்டுமென்ற அவசியம் என்ன வந்து விட்டது? இது ஈப்போ இல்லை குணா .. இது தலைநகரம். ஒரு சின்னப் பிரச்சனையாலும் தலைக்கு நரகம் கூட வந்து விடும். உஷாராக இரு” என்று கடுகடுவென்று பொரிந்து விட்டேன். நான் கோபமாகத்தான் சொன்னேன். நான் மிகக் கோபமாக இருப்பதை குணாவும் புரிந்து கொண்டான். வீடு வந்து சேரும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை, அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தோம்.

இதோடு அந்தப் பெண் உறவு முடிந்து விடும் என்று இரண்டாம் முறையாக நம்பினேன். இந்த முறையும் எனக்குத் தோல்வி தான் கிடைத்தது.

குணா விட்டாலும் அவள் விடவில்லை. அவள் விட்டாலும் குணா விடவில்லை. அவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் அவளுக்கு ஏதாவது ஒன்றை குணா கொடுத்துக் கொண்டிருந்தான். செலவுக்குப் பணம் ! அவள் கேட்கும் உடைகள் ! பொருட்கள் ! என நிறையவே இழந்து கொண்டிருந்தான்.

இதெல்லாம் எனக்குப் பிடிக்கா விட்டாலும் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. நான் சொல்வதை கேட்டு நடக்கும் நிலையில் குணா இல்லை. ஆனால் அவர்களிடம் எந்தத் தவறும் நடக்கவில்லை. அவள் வீடுவரை குணா சென்றதில்லை. எங்கள் வீடுவரை அவள் வந்ததில்லை. என்னை

விட்டுப் பிரிந்து இருவரும் எங்கேயும் சென்றதில்லை. அந்த வகையில் என் குணா மீது எனக்குப் பெரிய நம்பிக்கையும் இருந்தது. சாலை ஓரத்து சந்திப்போடு அவர்களின் உறவு நின்று இருக்கிறதே என்ற அளவில் எனக்கு பெரும் திருப்தி இருந்தது.

சில சமயங்களில் குணா சொல்லுவான் “சிவா ! உனக்கும் தங்கை இல்லை. எனக்கும் தங்கை இல்லை. அவள் நமக்கு ஒரு தங்கை போல எண்ணிக் கொள்வோம். அப்பா இல்லாத பிள்ளை. எளிய குடும்பம். ஏதோ நமக்கு முடிந்த உதவியைச் செய்து கொள்வோம். அவ்வளவு தான்” என்பான்.

குணா சொல்வதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. ஆனால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறதே ! இதனால் எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாதே ! காலம் கெட்டுக் கிடக்கிறதே ! கடவுளே காப்பாற்று ! என்றுதான் ஒவ்வொரு நாளும் தெய்வத்தைத் தொழுது கேட்பேன்.

தீடீரென்று இரண்டு நாட்களாகவே அந்தப் பெண்ணைக் காணவில்லை. எனக்குக் கொஞ்சம் திருப்தி ! ஆனால் குணா கலங்கிப் போய்விட்டான். அவனால் யாரிடத்திலும் கேட்க முடியவில்லை. பித்துப் பிடித்தவன் போல் தெரிந்தான். “எங்காவது உறவுக்காரர் வீட்டுக்குச் சென்றிருப்பாள். அல்லது வீட்டில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும்!” என்று குணாவுக்கு சமாதானம் சொல்லி வைத்தேன்.

என் சொல்லில் எல்லாம் குணா சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. சரியாகக் சாப்பிடவில்லை, முன்பு போல் அலங்கரித்துக் கொள்ளவில்லை, அதிகாலை விழித்து விட்டாலும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதில்லை, குணா என்னோடும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை.

இரண்டு நாட்களுக்கு இப்படியே இருக்கட்டும் பிறகு சரியாகி விடும் என்று நானும் ஜாடையாக விட்டு விட்டேன். அம்மாவுக்கோ அப்பாவுக்கோ சந்தேகப்படும் அளவுக்கு யாரும் நடந்து கொள்ளவில்லை.

மூன்றாம் நாள் இரவு மூன்று மணி இருக்கும். எங்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. எல்லோரும் அதிர்ச்சியாக எழுந்து உட்கார்ந்தோம். அப்பா எழுந்து விளக்கைப் போட்டு கதவைத் திறந்தார். இரண்டு காவல் துறையினர் நின்று கொண்டிருந்தனர். வீட்டுக்கு முன் ஒரு போலிஸ்வேன் நின்று கொண்டிருந்தது.

“குணா என்பது யார்? இந்த வீட்டில் தானே இருக்கிறான்? என்று ஒரு போலிஸ்காரர் கேட்டார். “ஆமாம், என்ன விபரம்?” என்று என் அப்பா கேட்டார்.

“மாலா என்ற பெண்ணை மூன்று நாட்களாக காணவில்லையாம். அவளுக்கும் இந்தப் பையனுக்கும் தான் ரொம்ப நெருக்கம் என்று அவள் பெற்றோர்கள் பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்கள். நாங்கள் விசாரிக்க வேண்டும்” என்றார் ஒருவர்.

அப்பாவும் அம்மாவும் திகைத்துப் போய் நின்றார்கள். நான் செய்வது அறியாது விழித்துப் போய் நின்றேன். அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் போலிஸ்காரர்கள் கேட்கவில்லை. இரவோடு இரவாக என் குணாவை இழுத்துச் சென்று விட்டார்கள்.

இதற்குமேல் எதையும் மறைக்க முடியாது என்று முடிவுக்கு வந்த நான் குணாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நடந்த தொட்ட உறவையும் தொடர்ந்த உறவையும் ஆதிமுதல் அந்தம் வரை விளக்கிச் சொல்லி விட்டேன்.

என்னை வெட்டிச் சாய்ப்பது போல அப்பா குமுறி எழுந்தார். அம்மாவும் தன் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள். “அட பாவிப் பயலே … உன்னையாவது இழுத்துப் போயிருக்கக் கூடாதா? ஊரான் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே ! அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று பதறினாள் அம்மா. தலையில் இடி விழுந்தவர் போல அப்பா உடைந்து போய் உட்கார்ந்திருந்தார்.

இரண்டு சிகரெட்டைத் தொடர்ச்சியாக இழுத்துப் புகைத்துப் போட்ட அப்பா – முகத்தைக் கழுவி விட்டு வேகமாக சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டே அம்மாவிடம் சென்று “நான் காவல் நிலையம் வரை சென்று வருகிறேன். டெலிபோன் வந்தாலோ அல்லது யாரும் வந்தாலுமோ ஏதோ வேலையாகச் சென்றிருக்கிறார் என்று மட்டும் சொல். குணா விபரத்தை எந்தக் காரணம் கொண்டும் யாரிடமும் சொல்லக் கூடாது ஜாக்கிரதை” என்று எச்சரித்து விட்டு வாடா தடியா… முட்டாள்” என்று என்னையும் கரித்துக் கொட்டிக் கொண்டே அழைத்தார்.

கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடு போல அப்பா பின்னாடியே சென்றேன். வேகமாகக் காரைக் கிளப்பி இருபது நிமிட தூரம் உள்ள காவல் நிலையத்தை பத்தே நிமிடத்தில் வந்து அடைந்து விட்டார்.

அங்கு சென்று விசாரித்ததில் குணாவை பெரிய காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று விட்டதாகவும் இப்போது யாரும் போய் பார்க்க முடியாது என்றும் – நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பார்ப்பது கஷ்டம் என்றும் ஒருவர் சொன்னார்.

அப்பாவுக்கு அறிமுகமான ஒருவர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று அப்பா சில விபரங்களைக் கேட்டார். அவர் சொன்ன விபரங்கள் என்னையே அதிர வைத்து விட்டது.

காணாமல் போன பெண் பள்ளி மாணவி இல்லையாம். அம்மா, அப்பா எல்லாம் இருக்கிறார்களாம். கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் தானாம். ஆனால் வீட்டுக்கு அடங்காத அடங்காப் பிடாரியாம். தாய் தந்தை சொல்லைக் கேட்க மாட்டாளாம். சரியான ஊதாரியாம். தினமும் நூறு, இருநூறு ரிங்கிட் கூடச் செலவு செய்து விடுவாளாம். தோழிகளோடும் கண்ட பையன்களோடும் சேர்ந்து சுற்றி வருவாளாம். இப்போது வீட்டில் வைத்திருந்த இரண்டாயிரம் ரிங்கிட்டையும் எடுத்துக் கொண்டு போனவள் மூன்று நாட்களாக வீடு திரும்ப வில்லையாம்.

அவளுடைய தோழி ஒருத்தியிடம் போய் அவர்கள் பெற்றோர் விசாரித்ததில் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் குணாவிடம் தான் தற்சமயம் நெருங்கிப் பழகிக்கொண்டு இருப்பதையும் எங்கள் வீட்டின் அடையாளத்தையும் சொல்லி இருக்கிறாள். குணாவின் மீது சந்தேகப்பட்ட அவள் பெற்றோர்கள் குணாவையும் சேர்த்துப் புகார் கொடுத்து விட்டார்கள் இது தான் நடந்திருக்கிறது.

வீட்டுக்கு வந்து சோகமாக அமர்ந்திருந்தார் அப்பா, அவரிடம் பேசுவதற்கு அம்மா பயந்து கொண்டு நின்றாள். அம்மாவைத் தனியே அழைத்துக் சென்று எல்லா விபரத்தையும் நான் சொன்னேன். உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள் அம்மா

காலைப் பொழுது விடிந்து விட்டது. சில சமயங்களில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குணா அப்பா அம்மா கூட எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அப்படி இந்த நேரத்தில் வந்துவிட்டால், விபரீதமாகி விடும் என்று நினைத்த அப்பா ஈப்போவுக்கு டெலிபோன் போட்டு நாங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்கிறோம் என்று சொல்லி விட்டார். கொஞ்சம் நிம்மதியானது.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் நான் அப்பா, அம்மா மூவரும் நரகில் குடியிருந்தது போலத்தான் இருந்தது. யாருக்கும் சாப்பிட மனம் இல்லை. இரவு உறக்கம் கூட இல்லை. குணாவைப் போய் பார்த்து வர எந்த வழியும் இல்லை. என்னையும் அப்பாவையும் விட அம்மா தான் ரொம்பவும் பித்துப் பிடித்தது போலக் கிடந்தாள்.

“குணாவை எப்படிப் பார்ப்போம்? எப்போது பார்ப்போம்? அவனுக்கு எந்தத் தொந்தரவும் வந்து விடக்கூடாது. அவன் செல்வந்த வீட்டுப் பிள்ளை. அவன் செல்லமாய் வளர்ந்த பிள்ளை. அவனைப் பார்த்தால் தான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்கும்” என்று புலம்பிக் கொண்டே இருந்தாள்.

திங்கள் கிழமை காலை விடிந்ததோ இல்லையோ ஆறு மணிக்கெல்லாம் காரை எடுத்துக் கொண்டு அப்பா வெளியாகி விட்டார். முதலில் எங்கள் பகுதியில் இருந்த அந்த சிறிய காவல் நிலையத்தில் தான் சென்று விசாரித்திருக்கிறார். அரை மணி நேரத்தில் வீடு திரும்பி விட்டார். எனக்கும் அம்மாவுக்கும் என்னவென்று புரியவில்லை.

“அந்தப் பெண் வீட்டுக்கு வந்துவிட்டாளாம். வீட்டில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு இரண்டு தோழிகளுடன் லிங்காவிக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு இன்று இரவுதான் வந்து சேர்ந்தாளாம். கொஞ்ச நேரம் முன்பு தான் அவள் பெற்றோர்கள் வந்து புகாரை வாபஸ் பெற்று போயிருக்கிறார்கள். ஒன்பது, பத்து மணிக்கெல்லாம் குணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். எந்தக் கேசும் இல்லை. எந்த விசாரணையும் இல்லை. கடவுள் காப்பாற்றி விட்டான்” என்று அப்பா சொன்னார். அதன் பின்பு தான் எங்களுக்கு உயிர் வந்தது மாதிரி இருந்தது.

அன்று நானும் கல்லூரிக்குப் போகவில்லை. அப்பாவும் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. குணாவைப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை என்று எல்லோரும் வீட்டில் இருந்தோம்.

காலை பத்து மணிக்கு ஒரு டெக்சி வந்து நின்றது. குணா தான் வந்து இறங்கினான். அம்மா ஓடிச் சென்று “என் மகனே வந்துட்டியாப்பா.. உனக்கு ஒண்ணும் ஆகலியே … “ என்று கட்டிப் பிடித்துக் கதறி அழுதாள்.

“சரி சரி ! பையன் கலங்கிப் போய் இருப்பான் குளிக்கச் சொல்லி முதலில் சாப்பாடு கொடு. நான் ஆபிஸ் போய் வருகிறேன்” என்று கிளம்பி விட்டார் அப்பா.

நானும் அன்று கல்லூரிக்குச் செல்லவில்லை. குணாவுக்கு ஆறுதலாக வீட்டிலேயே இருந்து விட்டேன். ஆனால் குணா தான் இன்னும் ஆறுதல் அடையவில்லை.

விசாரணைக்கென்று அழைத்துப் போய் இரண்டு நாள் உள்ளே வைத்து விட்டார்களே என்று ரொம்பவும் அவமானப் பட்டு விட்டான். செய்யாத குற்றத்திற்கும் – குற்றமே இல்லை என்ற நிலையிலும் வாழ்வில் இரண்டு நாட்கள் இப்படிப்பட்ட இடத்திற்குள் இருக்க வேண்டியது வந்து விட்டதே என்று கூனிக் குறுகிப் போய்விட்டான் என் குணா.

அம்மா மடியில் வைத்துக் கெஞ்சினாள். நானும் அழுது மன்றாடினேன். அவன் எழுந்து உட்காரவும் இல்லை – குளிக்கவும் இல்லை – சாப்பிடவும் இல்லை. எங்கள் முகத்தைப் பார்க்கவே வெட்கப்பட்டவன் போலக் கிடந்தான்.

காலையில் வந்து விழுந்தவன் தான் இப்படியே கிடக்கிறான் என் குணா, ஈ, எறும்புக்கும் துன்பம் செய்யக்கூடாது என்று நினைக்கும் என் குணா அவனிடம் வரும் ஈ எறும்பைக் கூட விரட்டும் சக்தி இல்லாமல் படுத்துக் கிடக்கிறான்.

ஆயிரம் தடவை எடுத்துச் சொல்லியும் அந்தத் தேவை இல்லாத பெண்ணிடம் தேவை இல்லாத பாசம், தேவை இல்லாத உறவு, தேவை இல்லாத உதவிகளைச் செய்து வந்த என் குணா இப்போது தேவை இல்லாத வேதனைகளை நெஞ்சில் சுமந்து நொந்து கிடக்கிறான்.

என் குணா தான் என் சொல்லைக் கேளாமல் தேவை இல்லாத வேதனைக்கு ஆளாகி விட்டான். இதைக் கேட்கும் நீங்களாவது யாரிடமும் தேவையில்லாத உறவை வளர்த்துக் கொண்டு தேவையில்லாத வேதனைக்கு ஆளாகி விடாதீர்கள்.

 

 

 

 

 

 

News

Read Previous

மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

Read Next

கஃபா ஆலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *