தேயும் பிறைகள்

Vinkmag ad

தேயும் பிறைகள்


எஸ். ஹஸீனா பேகம், வடகரை, திருநெல்வேலி மாவட்டம்

haseenaetp@gmail.com

 

மாலை மூன்று மணி. பள்ளியில் விளையாட்டு வேளைக்காள பள்ளிமணி ஒலித்தது. உடற்கல்வி ஆசிரியர் நோன்பிருக்கும் மாணவா்களை மட்டும் வகுப்பறையில் ஓய்வெடுக்க அனுமதித்து விட்டு மற்ற பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிவளாகத்திலிருந்த தோட்டப்பகுதிக்கு சென்றார். வாரமொருமுறை தோட்டப்பராமரிப்பிற்கென்று அவா் இப்படி மாணவா்களை அழைத்துச் செல்வது வழக்கம். நோன்பு வைத்திருந்த மாணவா்களில் சிலா் புத்தகப்பையை தலைக்கு வைத்து படுத்துக்கொண்டனா். ஒருசிலர் சுவரில் சாய்ந்தமர்ந்து கொண்டனா். அமீனும் சுவரில் சாய்ந்து கால்கலை நீட்டி அமர்ந்து கொண்டு அவனுக்கு தெரிந்த திக்ருகளை முணுமுணுத்தபடி சொல்லிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சென்றபின் தான் தனது தோழன் ஹசன் தன்னுடன் இல்லாததை அமீன் உணா்ந்தான்.

ஆமாம். இந்த ஹசன் எங்கேயடா போய்விட்டான்.

எல்லாருடனும் தோட்டத்திற்கு போய்விட்டானென்றால் அவன் நோன்பு நோற்கவில்லையா?

காலையில் என்னிடம் நோன்பு என்று தானே கூறினான். என்றவாறு நண்பா்களிடத்தில் ஹசனைப் பற்றிய விவாதம் எழும்பியது. இப்பொழுதெல்லாம் ஹசன் நிறைய மாறிவிட்டான் , அவன் நிறைய பொய் பேசுகிறான் என்று ஒருவன் அமீனின் காதுக்கு மட்டும் கேட்கும்படி அருகில் வந்து சொன்னான்.

மற்றவா்களுக்கு ஹஸன் எப்படியோ அமீனுக்கு அவன் அற்புதமான பண்புகளுடைய கிடைத்தற்கரிய சிநேகிதன் அவன்.  இயல்பில் ஹஸன் பொய்பேசுவனல்ல என்பதை அமீன் நன்கறிவான். அவன் வந்ததும்  கேட்கிறேன். நீங்கள் அவரவா் வேலைகளை பாருங்களப்பா என்று நண்பா்களின் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தோட்ட வேலைகளை முடித்து கை,கால்களை கழுவிக்கொண்டு வகுப்பிற்குள் நுழைந்தான் ஹஸன்.

கடந்த வருட நோன்பில் அமீனும் மற்ற நண்பா்களைப் போல தான் எண்ணிக்கொண்டிருந்தான். அமீனின் அம்மா அவனுக்கு பிடித்தது, சத்து நிறைந்தது என பார்த்து பார்த்து உணவு தயாரித்து சஹருக்கு சாப்பிட தருவார். ஆயினும் மதியம் இரண்டு மணியை தாண்டி அவனுக்கு சோர்வும் கிறக்கமும் ஏற்படுவதை தடுக்க முடியாததாகியிருந்தது. இந்த ஹஸனுக்கு மட்டும் கிறக்கவே செய்யாதுப்பா, என்று நண்பா்களிடம் சொல்லியிருக்கிறான்., இன்னும் சில நேரங்களில் ஹஸன் கிறக்கமும் சோர்வும் ஏற்படாமலிருக்க சத்துபானம் அல்லது ஜுஸ் மாதிரி ஏதோஒன்றை சஹர் நேரத்துல சாப்பிட்டிருப்பான் என்று கூட எண்ணியிருக்கிறான். எப்பொழுதும் பட்டினியோடு போராடியவனுக்கு இறைக்கடமை ஒரு சுமையல்ல என்பதை அறிந்து கொள்ளும் பக்குவத்தை அப்பொழுது அமீன் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

ஹஸன் நீ எங்கேடா போயிருந்த என்றான் நண்பனொருவன்.

தண்ணீர் எடுத்து ஊற்ற

அப்படி என்றால் நீ நோன்பு வைக்கவில்லையா,

நோன்பு தான்

என்று எளிமையாக தன்னுரையை முடித்துக்கொண்டான்.

ஹஸனுடைய பழக்கங்களில் இது ஒன்று, பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரு வாக்கியத்தில் பதிலளிப்பது. விரும்பத்தகாத  விவாதமென்றால் செவிடன் போல மௌனமாக கடந்து விடுவது. இது போன்ற செய்கைகள் அவனிடம் ஒரு பெரிய மனுசத்தனம் இருப்பதாக அமீனுக்கு எண்ண தோன்றியது.

வேறு யாரையாவது தண்ணீர் எடுத்து ஊற்ற சொல்லியிருக்கலாமே என்று அமீன் மெதுவாக பேச தொடங்கினான்.

இல்லைடா அவையெல்லாம் என் அக்கா ஆறாம் வகுப்பு படிக்கும் போது செடியாக நட்டவை. அவள் பத்தாம் வகுப்பு முடித்து போய்விட்டதால் அவற்றை இன்று நான் பராமரிக்கிறேன்.  அவள் செடியாக நட்டவை இன்று என் உயரத்தில் வளா்ந்திருக்கிறது என்றான் ஒருவித புன்னகையோடு,

எவரொருவா் பூமியின் ஒரு மரக்கன்றை நடுகிராரோ அவர்களுக்கு இறைவன் சுவனத்ததில் ஒரு மரக்கன்றை நடுகஜறான் என்று எப்பொழுதோ இமாம் சொன்னது அமீனுக்கு நினைவுக்கு வந்தது. அதை உடனே கேட்டிடவும் செய்தான்.

மறுமையில் கிடைக்கும் நன்மைகள் ஒரு பக்கம் . என்னுடைய இப்போதைய வேண்டுதல் எல்லாம் எங்க அத்தாவைப் பற்றியது தான். எங்க அத்தா சீக்கிரமே ஜெயில்லயிருந்து விடுதலையாகி வரணும். அப்புறம் உங்களை எல்லோரையும் போல நானும் எங்க அத்தாவுடன் எல்லா இடங்களுக்கும் பயணப்படனும். டேய்.. அமீன் நீயும் எனக்காக துஆ செய்யுடா! எங்க அத்தா விடுதலையாகனும் என்று,

இதுவரையிலும் ஹஸன் தன் தந்தையை போட்டோக்களில் மட்டுமே பார்த்திருந்தான். உன்னால எந்தெந்த அமல்களெல்லாம் செய்ய இயலுமோ அதையெல்லாம் செய்து இறைவனிடம் துஆ செய். நம்ம அத்தா விடுதலை பெறுவதற்கு அல்லாஹ் கிருபை செய்வான் என்று அவன் அக்கா ஜைனப் சொல்லியிருக்கிறாள்

ஹஸனுடைய தந்தை ஜெயிலில் இருக்கிறாரென்ற விவகாரத்தை சில வருடத்திற்கு முன்பு தான் ஹஸனால் உணா்ந்து கொள்ள முடிந்தது. அதுவரையிலும் சையது மாமா-வைப்போல தன் அத்தாவும் அயல்தேசத்தில் பணிசெய்கிறார் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான். முன்பொருமுறை  உறவினா்வீட்டு விசேசத்தின் போது தன் வயதொத்த உறவுக்கார பையன் ஒருவன், ஹஸன் உங்க அத்தா ஜெயில்ல தானேடா இருக்கிறார்? என்று கூட்டத்தில் கேட்டுவிட்டான்.

ஹஸனுக்கு செத்தார்போல் ஆகிவிட்டது. மேலும் இவ்விசயம் அவன் எந்நிலையிலும் எதிர்பார்த்திடாத செய்தியாயிருந்தது – இல்லையே எங்க அத்தா வெளிநாட்டுல இருக்காங்க. சையது மாமாகிட்ட வேணா கேட்டு பாரேன். என்று கூறியவாறு அடுத்த வார்த்தைகளுக்கு காத்திராமல் வெளியேறிவிட்டான்.

வீட்டுக்கு சென்று அம்மாவிடம் முறையிட்டு தேம்பிக்கொண்டிருந்தான். ரஹ்மத்துக்கு வருத்தம் தோய்ந்து நிற்கும் மகனை காண ஈரக்குலை கொதித்தது. மகனை நெஞ்சோடு அணைத்து அவனை மடியில் படுக்கவைத்துக் கொண்டு , மகனே உன்னிடம் சொல்வதற்கு என்னிடத்தில் அநேக சங்கதிகள் இருக்கின்றன, அத்துனையும் புரிந்து கொள்ளும் முதிர்ச்சியை நீ பெற்றிருக்கிறாயா என்பது தான் தெரியவில்லை. உனக்கு புரியும்படி எளிமையாக ஒரு விசயம் சொல்கிறேன். ஜெயில்ல இருப்பவா்களெல்லாம் அயோக்கியா்களல்ல. நாட்டில் சுதந்திரமாக ஆட்சி அதிகாரங்களில் வீற்றிருப்பவா்களெல்லாம் முழுநேர யோக்கியா்களுமல்ல. உன் அத்தா அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். குற்றம் புரிந்தவா்களெல்லாம் அவா்களின் பண , அதிகார பலத்தை பயன்படுத்தி பொய்சாட்சிகளை சித்தரித்து விடுதலை பெற்று பகுமானமும் பகட்டுமாக இந்த நாட்டிலே உலா வந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் பண வசதி இல்லை. உங்க அத்தா நிரபராதினு நிரூபிக்க முடியாம அந்த மனுசன் அங்க ஜெயில்லயும் நாம இங்கேயுமா அல்லல்பட்டுக்கிடக்கிறோம். துஆ செய்யனும் மகனே, படைத்தவனிடத்தில் முறையிடுவோம். அநியாயம் பன்றவங்களுக்கு தண்டனை கொடு, நிரபராதிகளை விடுதலை செய்ய கிருபை செய் அல்லாஹ்-னு கேட்போம். இல்லாதப்பட்ட நம்மளால வேற எதை செய்திட முடியும். என்றவாறு மகனின்  தலைமுடியை கோதிவிட்டு நெற்றில் முத்தமிட்டாள். அம்மாவும் அழுதிருக்கிறாள். அழுதுஅழுது அவளது நெஞசம் மறத்துப்போயிருந்தது. எத்தனை இன்னல்களை கடந்திருப்பாள். விசாரணையென்ற பெயரில் தன் கனவன் கைது செய்யப்பட்டபின் அடிப்படை தேவைகளுக்கு கூட தானும் தன் பிள்ளைகளும் தினம் தினம் திண்டாடவேண்டியிருந்தது. அதன்பின் தான் தையல்கம்பேனிக்கு வேலைக்கு செல்ல துவங்கியிருந்தாள். வேலைக்கு சோ்ந்த புதிதில் தொழில் பழகும் சில மாதங்கள் வரை மின்சார தையல்எந்திரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கைவிரல்களை ஊசி தைத்து பொத்தலாக்கி கொண்டுதானிருந்தாள். இப்பொழுது ஜைனபு பெரிய பெண்ணாக இருப்பதால் இரவுணவுக்கு எதையாவது சமைத்து தானும் தம்பியும் சாப்பிட்டு அம்மாவுக்கும் எடுத்துவைத்திருப்பாள். ஆனால் அந்த தொடக்க காலத்தில் ரஹ்மத்து வேலை முடித்து வர இரவு எட்டு மணிக்கு மேல ஆகும். பிள்ளைகளிரண்டும் அம்மா வந்து சாப்பாடு செய்து தருவாள் என்று காத்திருந்தபடியே பசியோடு தூங்கிவிடுவார்கள். அவள் வந்து அவசரஅவசரமாக சமையல் செய்து பிள்ளைகளை எழுப்பி என் தங்கமில்ல, ராசாயில்ல இன்னும் ஒரு வாய், என்று அரைத்தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு அழுதுகொண்டே சாப்பாடு  ஊட்டிவிடுவாள். அன்வா் இருக்கும் போது ஒரு நாள், ஒரு பொழுதேனும் பிள்ளைகள் இப்படி பசியோடிருக்க கண்டிருப்பாளா? ஆட்டோகாரனாக இருந்தபோதும் அந்த ஓட்டுவீட்டுக்குள் ஒரு குட்டி ராஜாங்கத்தை தான் நடத்திவந்தான் என்று தோன்றும்.சவாரி போய் வரும்போதெல்லாம் பழங்களென்ன? பரிசுப்பொருள்களென்ன? பலகாரங்களென்ன?, ராசா வீட்டு பிள்ளைகளாட்டாம் வளா்க்கிறான் பாறேன் என்று சக ஆட்டோகாரர்களும் பேசிக்கொள்வார்கள். ரஹ்மத்தையும் அவன் ரேசன்கடைக்கு செல்வதற்கெல்லாம் அனுமதித்ததே கிடையாது. அரிசிக்கும் சீனிக்கும் போயி வரிசையில காத்துக்கிடக்க போறியாக்கும்.? எதாவது இல்லாதப்பட்டதுகளுக்கு கூப்பனை தூக்கிகொடு, அதுக சாப்பிட்டு போகட்டும் என்பான். இன்று அவனது  மனைவி, மக்கள் தன் வீட்டு அட்டை போதாததால்  இன்னொரு வீட்டின் ரேசன்அட்டைகை்கும் சேர்த்து அரிசி, சீனி, கோதுமை வாங்கி பயன்படுத்தும் செய்தியெல்லாம் இன்னும் அவன் காதுகளுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. குடும்பத்துடன் வெளியில் செல்வதற்கு ஆட்டோவில் ஏறும்பொழுது ராஜகுமாரியை வரவேற்றிடும் காவலனைப்போலும் உயர்அதிகாரியை வரவேற்றிடும் சேவகனைப்போலும் குனிந்து சலாம் வைத்து பாவனைகள் செய்து மனைவியையும் பிள்ளைகளையும் சிரிக்க வைப்பான். பழைய நிகழ்வுகளையெல்லாம் நினைத்துப் பார்க்குகையில் ரஹ்மத்துக்கு வேதனை நெஞ்சை அடைக்கும். அன்வா் விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்ட போது ஹஸனுக்கு 5 வயதிருக்கும். இப்போது அவனும் ஐந்தாம் வகுப்புக்கு போய் விட்டான். இன்னமும் விடியல் மட்டும் பிறக்கவேயில்லை. குற்றவாளி என உறுதி செய்து தண்டனையும் எழுத மாட்டேங்குறான், நிரபராதினு சொல்லி விடுவிக்கவும் மாட்டேங்குறான். சதிகாரர்களின் கூடாரத்தில் நீதிக்கு மட்டும் சேதாரதொகை ரெம்பவே அதிகம். கடந்துவந்த பாதைகளை எண்ணிப்பார்த்தாலே தின்ற சோறெல்லாம் செரித்துவிடும் ரஹ்மத்துக்கு.

மாலை பள்ளிக்கூட இறுதி மணி ஒலித்து மாணவா்களெல்லாம் அணியணியாக வெளியேறிக்கொண்டிருந்த சமயம், அமீன் அவசரமாக வந்து ஹஸனின் தோள்களை தொட்டு “டேய் அத்தா உன்னை வீட்டுக்கு கூட்டி வர சொன்னாங்க, நான் தான் முன்னாலே சொல்ல மறந்துட்டேன், என்றான். சையது மாமா வந்திட்டாங்களோ, எப்ப வந்தாங்க? என்றான் ஹஸன்.

காலைல தான் வந்தாங்க. லொஹர் தொழ போகும் போது சாயங்காலம் மறக்காம ஹஸனையும் கூட்டி வானு சொல்லியனுப்பினாங்க. வா போகலாம் என்று அமீன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லலானான்.

அன்வா் இல்லாத இந்த ஐந்தாறு ஆண்டுகளில் ஒரு அண்ணனாக தன்னால் இயன்றவரை தன் தங்கை பிள்ளைகளுக்கு செய்துகொண்டுதானிருக்கிறார், சையது. எனினும் பிள்ளைகளின் தேவை உடைகளிலும், பொருளுதவிகளிலும் அல்லவே. அவா்கள் தேடித்தவித்திருப்பதெல்லாம் தன் தகப்பனுக்காக தானே. இந்த ரமலானின் இறுதியிலேனும் அந்த பிள்ளைகளின் இரக்கத்துக்காவது அந்த அப்பாவி விடுதலை கிடைத்திடாதா என சையது வருந்தாத நாட்களில்லை. அவனது பிரார்த்தனைகளின் பெரும்பகுதியை தங்கைக்கும் அவளின் குடும்பத்திற்குமாக இறைவனினிடத்தில் முறையிட்டுக்கொண்டிருக்கிறான். இறைவன் நாடவேண்டும். அநியாயக்காரர்களின் சதியிலிருந்து அப்பாவிகள் விடுபடவும் தீயோர்கள் தண்டிக்கப்படவும் அவனிடத்தில் பிரார்த்தனை எனும் ஆயுதத்தை தவிர வேறொன்று இருந்திடவில்லை.

News

Read Previous

அறிவியல் சிந்தனையின்உரத்த குரல்!

Read Next

மக்கள் விஞ்ஞானிகளை மறக்கலாமா!

Leave a Reply

Your email address will not be published.