தலைமை

Vinkmag ad

பெளர்ணமி வெளிச்சத்தில் விண்ணை நோக்கி நீண்டு நின்ற இரண்டு வெள்ளை நிற மினராக்களும் கர்வம் கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது. பள்ளிவாசலின் வெளிவராண்டாவை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் கீற்றுகள் மெல்லிய காற்றினூடே தங்களின்  இறுப்பை அவ்வப்போது நிறுவிக்கொண்டு இருந்தன. பகலில் அடித்த வெயிலின் தாக்கம் லேசாக வராண்டாவில் மிச்சமிருந்தாலும் பேச்சுக்களில் வெளிப்பட்ட அனலால் அது பொருட்படுத்தப்படவில்லை அவர்களால்.

அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருந்தது நீள்வட்டமாக அமர்ந்திருந்த இளைஞர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்.

“முன்னூறு தலகட்டுக்கும் மேல இருக்கோம். ஆனா இதுவரை நம்ம வீதிகள் மட்டும் எந்த அடிப்படை வசதியும் இல்லாம இருக்கு. இதை முறையா ஊர் தலைவர்கிட்ட போய் பேசி சரி செய்யனும்கிற அறிவு இந்த பெரிசுகளுக்கு கொஞ்சம் கூட இல்லை.”

“நாம சொன்னா பொறுங்க பேசிக்கலாம்கிறாங்க.” கொதிப்பாக பேசினான் சலீம். அடுத்து அமர்ந்திருந்த அமீர் “கபர்ஸ்தானுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டனும். வாங்க எம்.எல்.ஏ வை சந்திப்போம். தொகுதி நிதியிலேர்ந்து கட்டித் தாங்கன்னு கேட்போம். குன்னம் ஒன்றியத்தில ஒரு ஊர்ல அப்படித்தான் ஏற்பாடு பண்ணி காம்பவுண்ட் சுவர் கட்டினாங்க. சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. ஒரு பெரிசும் காதுல வாங்கின மாதிரியே தெரியல.”

“முந்தாநாள் மேலத்தெருவில் நடந்த சண்டையில சந்தேகத்தின் பேர்ல எங்கண்ணனை போலீஸ் கூட்டிட்டு போய்டாங்க. முத்தவல்லி கிட்ட போய் வாங்க ஸ்டேசனுக்கு அப்படின்னு கூப்பிட்டோம்.”

“எங்க பரம்பரையே யாரும் ஸ்டேசன் வாசப்படிய மிதிச்சது இல்லை. நான் வரமாட்டேன் அப்படிங்கறார். ஆனா போன வாரம் நடந்த பள்ளிவாசல் பஞ்சாயத்துல என்னமா சவுண்டா குரல் கொடுக்கிறார். இவங்கள நினைச்சா வயிரெறியுது.” என்றான் சபீர்.

“ம்கூம். உன் சொந்த பிரச்சனைக்கு ஜமாத் வரனுமாக்கும். சமுதாயப் பிரச்சனைக்குத்தான் ஜமாத்தும், முத்தவல்லியும், தனிப்பட்ட ஆளுக்கில்லை. அத முதல்ல மனசுல வச்சுக்க. இடைமறித்தான் ரஹ்மான்.”

“ஏய். நீ வாய மூடுடா. உன் சிச்சா முத்தவல்லிங்கிறதனால உனக்கு பொத்துகிட்டு வருதோ? உன்னை புடிச்சுகிட்டு போனா தெரியும் வலி என்னன்னு?

அமர்ந்திருந்த சபீர் எழுந்து முட்டிப்போட்ட வாக்கில் ரஹ்மானை நோக்கி கையை நீட்டியபடி பேசினான்.”

“டேய் அடங்குங்கடா. கருத்தைச் சொல்லும் போது உங்களுக்குள்ளே பேசிக்கிட்டா நல்லாவா இருக்கு. அமைதியா இருங்க. அடுத்து உன் கருத்தை சொல்லுடா சையது.” என்றான் சங்கத்தலைவர் வாசிம்.

லேசாக கனைத்துவிட்டு

நான் வெளிநாட்டில இருக்கும்போது என் ரூம்ல தங்கியிருந்த திருச்சிகாரங்க சொல்வாங்க. அவங்க ஜமாத்ல நிதி வசூல் செய்து வட்டி இல்லா கடன் கொடுத்து நிறைய உதவி செய்வாங்களாம். சிறப்பா அந்த திட்டம் நடந்துகிட்டு இருக்காம். அதேபோல நம்ம ஊர்லயும் நடைமுறைப்படுத்தினா நல்லா இருக்கும்ல.

“இப்படி உபயோகமா சொன்னால்ல நல்லா இருக்கும். சபாஷ்டா சையது.”

“அடுத்து”

“நம் சமுதாயமும் கல்வி விஷயத்தில் ரொம்ப பின் தங்கி இருக்கு. நம்ம ஊர்ல அதிகமா மார்க் வாங்கின பசங்களுக்கு ஜமாத் மூலமா பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தினா. நல்லா இருக்கும்.” இது சுல்தான்.

ஆலோசனைகள் நீண்டு கொண்டே போனது. அனைவரும் தமது கருத்தை சொல்லி முடித்தவுடன் வாசிம் தனது முடிவுரையை சொல்ல தயார்படுத்திக் கொண்டான்.

உறுப்பினர்கள் அனைவரும் வாசிம் உரையை கேட்க அவன் அமர்ந்த திசை நோக்கி தலைகளை திருப்பி கூர்ந்து நோக்கினர்.

“நாமும், நம் சமுதாயமும் எதிர்நோக்கி இருக்கிற பிரச்சனைகள் நிறைய இருக்கு. நாம இன்னிக்கு கூடினதே நாளைக்கு ஜும்மாவுல நடக்கிற ஜமாத் நிர்வாக கமிட்டி தேர்தலில் நம்ம சங்கத்தின் நிலை என்ன அப்படிங்கிறதபத்திதான்.”

“பெரியவங்க யாரும் மாறமாட்டங்க. திடீர்னு அவங்கள மாறச் சொல்றதும் நியாயமில்லை. நாளை நடக்கிற நிர்வாக தேர்தல்ல யார் வேணும்னாலும் தலைவரா வரட்டும் அதபத்தி நமக்கு கவலை இல்லை. நிர்வாகத்தில நாம நுழையாம இருப்பதாலதான் நம் ஆலோசனைகள் எடுபட மாட்டேங்குது. எதற்கெடுத்தாலும் பசங்க சரி இல்ல அப்படின்னு சொல்றது தொடர் கதையா நடந்துகிட்டே இருக்கு.”

நாளைக்கு சங்கத்தை சேர்ந்தவங்க அஞ்சுபேரை நிர்வாக குழு உறுப்பினரா சேர்க்கனும்னு சொல்வோம். சேர்வோம். நிர்வாக குழு உள்ளே நுழைஞ்சு ஜமாத்ல நீங்க சொன்ன கருத்துக்களையெல்லாம் நாம் வலியுறுத்தி ஒவ்வொன்னா நிறைவேத்தலாம். சரிதானே.

“அல்ஹம்துலில்லாஹ்”

“நாளை ஜும்மாவுக்கு நம்மில் அஞ்சு பேர் தயாரா இருப்போம். மறுத்தா பிரச்சனை பண்ணுவோம். அப்புறம் பார்த்துக்கலாம் பெருசுங்களா? நாமளான்னு?”

“சரி…சரி… நேரமாகுது. சீக்கிரம் கஃபாரா ஓதி முடிங்கப்பா”

ஆங் சொல்லுங்க “சுப்ஹானகல்லாஹும்ம… இலைஹி” முனுமுனுத்தவாரே முழங்கிவிட்டு சீக்கிரம் கலைந்தனர் அனைவரும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை. பள்ளிவாசல் வழக்கத்துக்கு மாறாக பரபரப்பாக இருந்தது. உள்ளூரில் இருந்தாலும் தொழவராத புதுமுகங்கள் சிலவும் தென்பட்டன. இமாம் தொழுகை முடித்து துஆ ஓதி முடித்தவுடன் வக்பு போர்டு இன்ஸ்பெக்டர் எழுந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“தற்போதைய தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் புதிய தலைவரையும் நிர்வாகக் குழுவையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நிர்வாகிகளோ உறுப்பினர்களோ யாரும் எந்த வகையிலும் பள்ளிவாசல் சொத்துகளுக்கு குத்தகைதாரராகவோ அல்லது வாடகை தாரராகவோ இருக்கக்கூடாது.” இது விதி. ஆகையால் அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு சேவை செய்ய நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.

மைக் உதவி இல்லாமலேயே பள்ளிவாசல் முழுவதும் அவரின் குரல் பரவியது.

“முதலில் தலைவர் தேர்வு, யார் தயார்?”

சில நொடி அமைதிக்குப் பின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த அப்துல்லா எழுந்து “சுலைமான லெப்பையை தலைவராக இருக்க நான் முன்மொழிகிறேன்.”

இரண்டாவது வரிசையில் தென் திசையில் அமர்ந்திருந்த சித்திக் பாய் அதேபாணியில் பள்ளி மாணவன் போல கையை உயர்த்தி “அதை நான் வழி மொழிகின்றேன்” என்றார்.

“யாருங்க அது சுலைமான் லெப்பை எழுந்திருங்க”

நீளமேற்றிய வெள்ளை ஜிப்பா அதற்கு ஈடுகொடுக்கும் நீளமான வெள்ளை தாடி சகிதமாக எழுந்து நின்றார் சுலைமான் லெப்பை. “இவரை எதிர்த்து யாராவது போட்டியிட விரும்பிகிறீர்களா?”

“ம். காதர் மரைக்காயரை தலைவரா போடலாம்” என்றார் கனீர் குரலில் அஜீஸ்.

நத்தர் முஸ்தபாவும் “ஆமா காதர் மரைக்காயர் தலைவரா வரட்டும் ஏற்கனவே இரண்டு முறை தலைவரா இருந்தவரு” தொடர்ந்து நான்கைந்து குரல்கள் தொடர்ந்து காதர் மரைக்காயரை ஆதரித்தன.

சுதாரித்த சுலைமான் லெப்பை “காதர் மரைக்காயரே தலைவரா இருக்கட்டும். அவர் தான் சரியான ஆள்” என்று மழுப்பியவாரே அமர்ந்து கொண்டார்.

“வேறு யாரும் போட்டி இருக்கா?”

சற்று அமைதி.

”வேறு யாரும் இல்லை”

“அல்ஹம்துலில்லாஹ்”

“காதர் மரைக்காயர் புதிய நிர்வாகக்குழு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“அடுத்து செயலாளர்”

தேர்தல் நீண்டுகொண்டே சென்றது.

வழிமொழிதல், முன்மொழிதல் குரல்கள் வாசீமை வெறுப்பேற்றின.

“அடுத்ததாக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 11 பேரை தேர்ந்தெடுக்கனும்.”

இத்தருணத்திற்காகவே காத்திருந்த இளைஞர் பட்டாளம் பரபரப்பானது.

வாசிம் எழுந்தான்.

“பெரியவங்க தலைமை பொறுப்பில் இருந்து இளைஞர்களுக்கு வழிகாட்டினாதான் வருங்காலத்தில் இளைய சமுதாயமும் நிர்வாகத்தை சிறப்பா வழி நடத்த முடியும்.”

”அதனால நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஐந்து பேரை இளைஞர் சங்கத்தை சேர்ந்தவர்களை சேர்த்துக்கனும் என்று அமர்ந்தான்.”

“சங்கத்து பசங்களை நிர்வாகத்துல சேக்கணும்” மூளைக்கு ஒருவராக இளைஞர்கள் குரல் கொடுத்தனர். காதர் மரைக்காயர் முகம் இறுகியது. கவனித்த சுலைமான் லெப்பை எழுந்து “அவங்க கேட்கறதிலும் நியாயம் இருக்கு. உறுப்பினர்களா அவங்களை சேர்த்துக்கிறது நல்லதுதான். இது என் தனிப்பட்ட கருத்து”

சொல்லி அமர்ந்தார்.

காதர் மரைக்காயர் முகம் கோபத்தில் சூடானது.

ஒரு வழியாக வாசிமின் கோரிக்கை நிறைவேறியது. இளைஞர் சங்கத்தினர் ஐந்துபேர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போன்று மகிழ்வோடு அனைவரும் குதூகலத்துடன் கலைந்து சென்றனர்.

மாலைநேரம் கடைவீதி மோகன் டீக்கடை வழக்கமான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது.

‘டேய் மாப்ள’ குரல் கேட்ட திசை நோக்கி திரும்பினான் வாசிம். கையிலிருந்த டீ க்ளாசை தூக்கி காட்டி அழைத்தார் பெருமாள் கோனார்.

“என்னடா மாப்ள… இன்னைக்கு ஜமாத்துல கலக்கிட்டிங்கிலாம்ல…”

“ஜப்பார் பாய் சொல்லிகிட்டு இருந்தாரு”

“இதென்ன மாமா சாதாரணம்”

“சாதிப்பாகுபாடும் வர்க்க பாகுபாடும் இல்லாத இந்த இஸ்லாமிய சமுதாயம் இன்னும் மேல வரணும்கரதுதான் எங்க நோக்கம். எங்கள மாதிரி இளைஞர்கள் அதிகாரத்தில் இருந்தாதான் மாற்றங்களை கொண்டு வர முடியும். இல்லையா மாமா!

இயல்பாக பேசிக்கொண்டிருந்த பெருமாள் கோனார் சற்று கோபமாக”

“மண்ணாங்கட்டி”

”சாதி வர்க்க பாகுபாடு இஸ்லாமிய சமுதாயத்தில் இல்லையா?”

“டேய். சுலைமான் லெப்பை நல்லவறுதானே. ஏற்கனவே அவர் உங்க ஜமாத் தலைவராக இருந்தப்பதானே உங்க பள்ளிவாசம் காம்பவுண்ட் சுவர் கட்டினது. பள்ளிவாசல் முன்னாடி தளம் போட்டது இப்படி பல வேலைகளை செஞ்சாறு. இப்படியெல்லாம் பாடுபட்டவரை தலைவரா ஏன் தேர்ந்தெடுக்கலை தெரியுமா?

தெரியலையே மாமா”

“இந்த ஊர்ல மரைக்காயர் தலைக்கட்டுகள் தான் அதிகம். லெப்பை தலைக்கட்டுகள் முப்பத்தைஞ்சுக்கும் குறைவு. குறைச்சலா இருக்கிற லெப்பைங்க நம்மள அதிகாரம் பண்ணனுமாங்கிற சின்னப்புத்தி வேலை செஞ்சிதான், இப்ப காதர் மரைக்காயரை தலைவரா தேர்ந்தெடுத்திருகாங்க.”

“உங்களுக்குள்ளேயே இத்தனை பாகுபாடு இருக்கு. சும்மா இஸ்லாம், சகோதரத்துவம், சமத்துவம்னு பேசிக்கிட்டு உங்களை நீங்களே ஏமாத்திக்கிட்டு திரியாதிங்கடா…”

உள்ள குமுரலை அள்ளிக்கொட்டிவிட்டு எதிர்திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தார் பெருமாள் கோனார்.

அவரின் பிம்பம் மறையும் வரை அவரையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் வாசிம்.

News

Read Previous

புதிய அரங்கேற்றம் ! -அத்தாவுல்லாஹ், துபை

Read Next

சோதனைகள் வெற்றிக்கே ! ( ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பி.ஏ., )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *