சூரியன் மேற்கே மறைகிறதா …?

Vinkmag ad

 

சூரியன் மேற்கே மறைகிறதா …?

தொழ விரைகிறதா ?

தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன்

இறைவா !

எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை விரலுக்குள் வந்து விடுகிறது.

உன்னை நினைக்கின்றேன், மவுனமாக இருப்பவர்களும் பேச வந்துவிடுகிறார்கள் !

கவலைகளால் நான் கைது செய்யப்படும் போதெல்லாம் ஒரு வக்கீலாக இல்லை, இல்லை வக்கீலுக்கு மேலாக எனக்கு விடுதலை வாங்கித் தந்து விடுகின்றாய் !

வீட்டைக் காலி செய்யும் படி உரிமையாளர் வற்புறுத்தும் வேளையில், சொந்த வீட்டுக்கான சாவியொன்று கிடைத்தது போல உன் அருள் என்னை ஆரோக்கியப்படுத்தி வருகிறது !

உன்னை வணங்குவோர் வரிசையில் நான் கடைசியில் நின்றாலும், எனக்கு உதவுவோர் வரிசையில் உன் அருள் முன்வரிசையில் நிற்கிறதே !

உன் பாதுகாவலைப் பெற நான் என்ன பாக்கியம் செய்தேனோ தெரியவில்லை !

இறைவா ! சமையல்கட்டுக்கு உதவியாக சேர்க்கப்படும் வேலையாளைப் போலவேனும் என்னை உன் சந்தனச் சபையில் அனுமதிப்பாயா ?

‘மெர்குரி பல்ப்’ வெளிச்சம் போன்று பலரின் மேலான வணக்க வழிபாடுகள் காணப்படுகையில் சிறு ‘மெழுகுவர்த்தி’ வெளிச்சம் போன்றதே என் வணக்க வழிபாடுகள் !

உன் அருட் காடுகளில் விளைந்த மரங்களை வெட்டி அள்ளிக் கொள்ளப் பலரும் கோடாரியுடன் வரும் வேளையில் – சிறு பேனாக் கத்தியுடன் வந்திருக்கும் நான் எதை வெட்டி சேகரிக்கப் போகிறேன் ?

ஆக்கிய கறிச் சோறை அனைவரும் சாப்பிட பரிமாறிய பின் மீதியிருந்தால் சாப்பிடலாம் என என்னும் ஒரு தாய் உள்ளத்தைப் போல வாழ்க்கைத் தடத்தில் இருந்து வருகிறேன்.

பூத்துக் குலுங்கும் உன் அருள் பூங்காவுக்குள் புகும் வாய்ப்பெனக்கு கிடைத்தால் போதும் !

இறைவா ! உலக ஜவுளிக் கடைகளில் உயர் விலையிலான துணிமணிகளைப் பை கொள்ளா அளவுக்கு வாங்கி வருவோர்க்கிடையே ஒரு கைத்துண்டு வாங்கும் அளவுக்கே என் கையிருப்புகள்.

என் பார்வைகள், பட்டு ஜரிகைகளின் பக்கம் போவதில்லை !

என் பயணங்கள், ஊட்டி, கொடைக்கானல் பக்கம் ஊடாடுவதில்லை ! என் பாசங்கள், தேர்தல் கால அரசியல்வாதிகள் போல் திகழ்வதில்லை!

நான் சவாரி செய்ய சைக்கிள் இல்லையே என சஞ்சலப் பட்டிருக்கிறேன், ஊன்றுகோலுடன் நடக்கும் ஒருவரைக் காணும்வரை !

இறைவா ! இன்றைய சமுதாயப் போக்குகள் என்னைச் சங்கடப்பட வைக்கின்றன.

வாசலில் நிற்கும் விருந்தினரை வரவேற்காமல், தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கிப் போன இல்லத்தரசிகள் போல் – இல்லார் முகம் பாராமல் இன்பத் திளைப்பில் பணவசதிப்படைத்தோர் !

அதிகம் ஜகாத், ஸதகா அளிக்க வேண்டும் என எத்தனை மனிதர்கள் திரைக் கடலோடித் திரவியம் தேடுகிறார்கள் ?

அன்றாடப் பாட்டுக்கே திண்டாடுவோர் ஒருபுறம் !

குற்றால நீர்வீழ்ச்சியில் கொண்டாடுவோர் மறுபுறம் !

இவ்விரு நிலைகளும் இல்லாமல் ஒரு நடுநிலைக்கு மன்றாடுவோர் பட்டியலில் என்னை மலர்விப்பாயாக !

அத்தரைப் பூசிக் கொள்ள மல்லிகைப்பூ ஆசைப்படுவதில்லை; அதிக பட்ச ஆசையும் எனக்குள் அரும்வுவதில்லை !

காலில் அணிய பாட்டா செருப்பெதற்கு? பத்து ரூபாய் செருப்பு போதும் எனும் பக்குவம் எனக்குள் பரவிட வேண்டும் !

இறைவா ! சோறு பொங்குவதேன் பானையில், உன்னைத் தொழத்தானோ !

சோலையில் தென்றல் சுகப்படுவதேன், உன்னை எண்ணத்தானோ !

மாலையில் சூரியன் மேற்கே மறைவதேன், உன்னில் ஸஜ்தா செய்யத்தானோ !

வாகனங்கள், பெட்ரோல் நிலையங்களுக்கு வருவது போன்றோ – பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வருவது போன்றோ – திடீர் தேவைகளுக்காக உன்னைத் தேடி வருபவனல்ல நான் !

நூலகத்தைத் தேடிவரும்

மாணவனைப் போல உன்னை

நோக்கி வருபவன் நான் !

என் நோக்குகள், பூக்கும் மலர்களாக –

என் வாக்குகள், காய்க்கும் மரங்களாக –

என் தீர்ப்புகள், ஏற்கும் மனங்களாக –

உன் அருட் குழாயடியில்

குடமாகக் கிடக்கின்றேன்,

என்னை நிரப்பிட இசைவாயாக !

 

நன்றி : நர்கிஸ்

ஜுன் 2011

News

Read Previous

ஓரிரவில் நான்கு கோடிப் பாடல்கள் !

Read Next

கண்ணீரை துடைப்பது யாரு …? —- தேரிழந்தூர் தாஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *