கமலா எப்போது உண்மையை உணர்வாளோ?

Vinkmag ad
கமலா எப்போது உண்மையை உணர்வாளோ?(சிறுகதை)

இந்த ஆம்பள பசங்களே இப்படித்தான், பொறுப்பில்லாதவனுகனு திட்டிக்கொண்டே சமையலறையில் இருந்து வெளியில் வந்த கமலா கையில் இருந்த டீ கோப்பையை தனது கணவன் குமாரிடம் நீட்டினாள்.

மனைவியின் கோபத்திற்கான காரணம் என்னவென்று புரியாமல், யார் பொறுப்பில்லாமல் இருக்கா? நீ யாரை பேசுறானு? குமார் கேட்க எல்லாம் உங்க மச்சினன்கள் இரண்டு பேரையும் தான் சொல்றேனு பொரிந்து தள்ளினாள் கமலா.

அவனுக என்ன செய்தானுக? வீட்டோடு மாப்பிள்ளையா அவனவன் மனைவி வீட்டில் நல்லாத்தானே இருக்கானுக, தேவையில்லாமல் நீ ஏன் அவனுகளை பேசுறேனு குமார் கேட்க? அவ்ளோ தான் வீடே ரணகளமாயிருச்சு.

உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? வீட்டில் உள்ள தாய்,தகப்பனையும் வயதுக்கு வந்து திருமணமாகாத ஒரு தங்கச்சியையும் யார் கவனிப்பா? அவனுக தானே பார்க்கணும்? அவனுக என்னடானா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பொண்டாட்டி தாசனுக போல மாமியார் வீடே தஞ்சம்னு கெடக்குறானுக என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாள் கமலா.

சரி விடு, அவனுகளுக்கு தெரியாதா? செய்ய வேண்டிய நேரத்தில் உன் தங்கச்சிக்கான கடமையை உன் தம்பிமார்கள் செய்வானுக, அதற்கு நீ ஏன் இம்புட்டு டென்ஷனாகுறேனு? கமலாவை அமைத்திப்படுத்த முயன்றான் குமார்.

நீங்க சும்மா கெடங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது. போன வாரம் கூட பொண்டாட்டி தங்க பிரேஸ்லெட் கேட்டானு உடனே ஓடிப்போய் வாங்கி கொடுத்திருக்கானுக. வயசுக்கு வந்த தங்கச்சி வீட்டில் இருக்காளே? கல்யாணமான அக்கா வீட்டில் இருக்காளே? அவளுகளுக்கு ஏதாச்சும் வாங்கி கொடுக்கணும்னு அவனுகளுக்கு தோணுச்சா?

அந்த சிறுக்கிக என் தம்பிமார்களை மயக்கி போட்டிருக்காளுக,அதனால் தான் இவனுகளும் அவளுக முந்தானையில் மொடங்கி கெடக்குறானுக,அப்படி எண்ணத்த தான் அவளுகளிடம் இவனுக கண்டானுகளோ? தெரியலனு மூக்கை சிந்தினாள் கமலா.

போன மாசம் வயதுக்கு வந்த தனது அக்கா மகள் பிரியாவுக்கு கால் பவுனில் தங்க மோதிரம் வாங்கி கொடுக்கலாம்னு தனது சம்பளத்தில் அதற்கான பணத்தை ஒதுக்கி அதை கமலாவிடம் சொன்னபோது அவள் ஆடிய அந்த பேயாட்டம் இப்போது குமாரின் கண்ணில் வந்து போகிறது.

தன் புருஷன் மட்டும் அவன் குடும்பத்துக்கு எதுவும் செய்து விடக்கூடாதுனு நினைக்கும் கமலாவைப் போலத்தானே கமலாவின் தம்பிமார் பொண்டாட்டியும் நினைப்பாளுகனு கமலாவுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?

தனிக்குடித்தனம் செல்ல ஆசைப்படும் ஒவ்வொரு பெண்களும் தனது சகோதரர்கள் மட்டும் பெற்றோர்களோடு இருக்க வேண்டுமென நினைப்பது தான் தர்மமா?

திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல, திருமணத்திற்கு பின்பும் கூட ஒவ்வொருவரின் தாய் வீடும் அவரவர்களின் சொர்க்க பூமியாகும்.அவரவர் பெற்றோர்,உடன் பிறந்தோரின் மீதான அன்பும் கவனிப்பும் இரண்டு தரப்பிலுமே நீடித்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.மனதில் அமைதி நிலை கொள்ளும்.

இந்த உண்மையை கமலா எப்போது உணர்வாளோ? என்னும் கவலையோடு கொடியில் தொங்கிய சட்டையை எடுத்து அணிந்து கொண்டு தனது தாய் வீட்டை நோக்கி பயணித்தான் குமார்.
ஆக்கம்: கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!

Read Next

தமிழால் இணைவோம்…!

Leave a Reply

Your email address will not be published.