கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)

Vinkmag ad

 

( மீ.கா முஹம்மது ரபீக் மிஸ்பாஹி )

”அரசியலுக்காகவே உலக ஆதாயத்தை துறந்தவர் காயிதேமில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம்லீக் ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்று குற்றம் சாட்டப்பட்ட போது முஸ்லிம் லீக் என்றால் முஸ்லிம் பெருமக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசியல் சபை என்று நிலைநாட்டிய பெருமை காயிதே மில்லத் அவர்களை மட்டுமே சாறும்.”

 

 

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ( சமுதாய காவலர் ) எம். முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் இந்திய முஸ்லிம்களின் அரசியல் மற்றும் சமுதாயத்தின் ஒப்பில்லாத் தலைவர். இந்திய சுதந்திர போராட்டத்திலும், இந்திய முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும், தமிழ்ச் சமுதாய வரலாற்றிலும், வைர வரிகளாக பதிக்கப்பட்ட பெருமைக்குரியவர். தன்னுடைய இயற்பெயர் மறைத்து சமுதாயம் அவருக்கு சூட்டிய காயிதே மில்லத் (சமுதாய காவலர்) என்ற பெயர் மட்டும் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதற்கு காரணம் அந்தப் பெயருக்கு இலக்கணமாக சமுதாயத்திற்கு எல்லாத் தளத்திலும் காவலாளியாகத் திகழ்ந்தார்.

அரசியலில் சமுதாயத்தை தலை நிமிரச்செய்வதற்காக எல்லா வகையிலும் தன்னை தியாகப்படுத்தி கொண்டவர் உலக ஆதாயத்தை அடைவதற்காகவே அரசியலில் நுழைந்த பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படித்திருப்போம். அரசியலுக்காகவே உலக ஆதாயத்தை துறந்தவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் லீக் ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்று குற்றம் சாட்டப்பட்டபோது முஸ்லிம் லீக் என்றால் முஸ்லிம் பெருமக்களின் நலன்களையும், உரிமைகளையும், பாதுகாக்கும் ஒரு அரசியல் சபை என்று நிலைநாட்டிய பெருமை காயிதே மில்லத் அவர்களை மட்டுமே சாரும். காயிதே மில்லத் அவர்களுக்கு பின் அந்த இடம் இன்னும் வெற்றிடமாக உள்ளது. அவரைப் போன்று தன்னலமற்ற சமுதாய அக்கறை கொண்ட தேசப்பற்று மிகுந்த சமரசம் செய்து கொள்ளாத கொள்கை கொண்ட ஓர் தலைவர் இன்னும் முஸ்லிம் சமுதாயத்தில் உருவாகவில்லையே என்ற கவலைக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

அண்ணா கண்ட காயிதேமில்லத்

அண்ணாதுரை அவர்கள் 30/1/1962 அன்று காஞ்சிபுரம் ஒலி முஹம்மது பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார். அரசியலில் ஒதுக்கப்பட்ட சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தவருக்கு காயிதேமில்லத் அவர்களின் சேவை அளப்பெரியதாகும். காயிதேமில்லத் அவர்கள் கையில் காசில்லாதவர்கள் தாம். ஆனால் உள்ளத்தில் மாசில்லாதவர்கள் கோடீஸ்வரர்களும் பெரும் வணிகர்களும் அஞ்சி காங்கிரசாருக்கு குரல் கொடுத்து பாடுபட்டவர் காயிதேமில்லத் அவர்கள் “துறவிக்கு வேந்தன் துரும்பு” என்பார்கள் அப்படித்தான் காயிதே மில்லத் அவர்கள் சொந்த நிலத்தை கொஞ்சமும் கருதாத அரசியல்வாதியாக அச்சம் தயவு தாட்சயமின்றி உண்மையை எடுத்துரைக்க கூடிய நெஞ்சுரமும் பெற்றவர்களாக விளங்குகிறார்.                 (5.6.62 உரிமைக்குரல்)

1947 ஆகஸ்ட் 15 நாடு சுதந்திரம் பெற்றபிறகு அதே ஆண்டு டிசம்பர் 13, 14 தேதிகளில் பாகிஸ்தான் கராச்சி மாநகரில் முஸ்லிம் லீக் கவுன்சில் கூடியது. அதில் கலந்துகொள்ள அரசு அனுமதியுடன் இனமானச்சிங்கம் காயிதே மில்லத் அவர்கள் பயணப்பட்டார். அச்சமயம் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஹபீப் வங்கியில் ரூ 40 லட்சம் கையிருப்பு இருந்தது. இத்தொகையிலிருந்து பங்கு பெறவே காயிதே மில்லத் செல்கிறாரென்ற அளவில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசியல் நிர்ணய சபையில் பேசியுள்ளார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கூட அந்த தொகையில் பங்கு வாங்கித்தர தான் உதவட்டுமா? எனக் காயிதே மில்லத் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். டிசம்பர் 13,14 முஸ்லிம் லீக் கூட்டம் முடிந்த பிறகு டிசம்பர் 26 ம் தேதி திரும்புவதற்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 25 அன்று பாகிஸ்தான் பிரதமரும், முஸ்லிம் லீக் பொதுச் செயலறுமான நவாப் ஜாதா லியாகத் அலிகான் காயிதே மில்லத் அவர்களுக்கு பகல் விருந்து தந்தார். விருந்து முடிந்து விட்டு கட்சி மற்றும் அரசியல் நிலை குறித்து பேச்சு வந்த போது ஹபீப் வங்கியில் உள்ள ரூ 40 லட்சத்தில் ரூ17 லட்சத்தை இந்தியாவிலுள்ள முஸ்லிம் லீக்கின் பங்காகத் தரத்தயாராக இருப்பதாக லியாகத் அலிகான் தெரிவித்தார். அது மட்டுமின்றி முஸ்லிம் லீக்கிற்கு சொந்தமான “டான்” பத்திரிக்கையின் சொத்துக்களையும் வங்கி இருப்பையும் கணக்கு பார்த்து அவற்றிலிருந்தும் பங்கு பெற்றுக் கொள்ளலாமென்று அவர் கூறினார். அப்போது காயிதே மில்லத் அவர்கள் ஹபீப் வங்கியில் உள்ள ரூ 40 லட்சமும் சரி ! மற்றபடி “டான்” பத்திரிக்கை சம்பந்தப்பட்டவற்றிலிருந்தும் சரி ! ஒரு பைசா கூட இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு தேவையில்லையென்று ஆணித்தரமாக கூறிவிட்டார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான், காயிதே மில்லத் அவர்களிடம் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் நீங்கள் கவலைப்படவேண்டாம். உடனே எனக்கு தகவல் கொடுங்கள். தந்தி கொடுங்கள் உடனே நாங்கள் தலையிட்டு உங்கள் துயரத்தை போக்கத்தயாராக இருப்போம் என்று கூறினார். அப்போது காயிதேமில்லத் அவர்கள் நவாப் ஜாதா அவர்களே ! நாம் முஸ்லிம்களாக இருந்தாலும் வெவ்வேறு நாட்டவர்கள் தான். நமக்குள் இனி எந்தவித தொடர்பும் கிடையாது. எங்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி ! அது சிறிதாக, பெரிதாக எப்படி இருந்தாலும் அதனை அல்லாஹ்வின் துணை கொண்டு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எனவே எங்கள் நாட்டு விஷயத்தில் நீங்கள் தலையிடக்கூடாது எங்களுக்கு ஏதாகினும் உதவ வேண்டும் என்று நீங்கள் கருதினால் ஒன்றே ஒன்று செய்யுங்கள். இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதை போல பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் வாழுமாறு செய்யுங்கள். அவர்களுடைய பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் உதவுங்கள் அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி என்று கூறியபோது லியாகத் அலிகான் உணர்ச்சி வசப்பட்டு காயிதேமில்லத் அவர்களின் கரங்களைப் பற்றி கண்ணீர் விட்டார். அன்று காங்கிரசும் சரி. முஸ்லிம் லீக்கின் ஆதரவை பெற காயிதே மில்லத்தின் வீட்டு வாசலில் தவம் கிடந்தது. ஒருங்கிணைந்த சென்னை ராஜதாணி சட்டப்பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் லீக் எதிர்கட்சி தலைவராகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் டெல்லி மாநிலங்களவை உறுப்பினராகவும் கேரளா மாநில மஞ்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஓட்டு கேட்ட தொகுதிக்கே போகாமல் வெற்றி வாகை சூடி மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முஸ்லிம் சமுதாயத்திற்கான அரசியல் சாதன வாழ்வுரிமை இட ஒதுக்கீடு ஷரீஅத் பாதுகாப்பு இந்து முஸ்லிம் ஒற்றுமை கல்வி பொருளாதார மேம்பாடு மற்றும் இந்தியாவிலுள்ள ஒதுக்கப்பட்ட சமுதாயங்களுக்கான கண்ணியமிக்க காயிதேமில்லத்தின் சட்ட ரீதியான போராட்டம் கடல் போன்றது.

 

நன்றி :

அல் ஹிந்த்

1-15, ஜுன் 2011

News

Read Previous

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம் !

Read Next

கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *