எழுங்கள்! போராடுங்கள்! முயலுங்கள்!

Vinkmag ad

எழுங்கள்! போராடுங்கள்! முயலுங்கள்!

-திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

thahiruae@gmail.com

Mob  .974 + 66928662

வாழ்க்கை என்பது கவிதைகளில் வசந்தக் காலமாக வர்ணிக்கப் படுகிறது. திரைகளில் பூத்துக் குலுங்கும் தோட்டமாக காட்டப்படுகிறது.கற்பனை உலகிலோ எப்பொழுதும் இருள் கவ்வாத ஒளிமயமிக்க பவுர்ணமி இரவுகளாகவே காட்டப் படுகிறது. சுகமான வாழ்க்கையின் எதிர்ப் பக்கத்தையும் மனிதன் நோக்கித்தான் ஆக வேண்டும். வசந்த் காலத்தை மட்டுமல்ல சுட்டெரிக்கும் கோடை காலத்தையும் அவன் கடந்துதான் ஆக வேண்டும்.தோட்டங்களில் மட்டுமல்ல கால்களின் பாதங்களை கிழிக்கும் கரடு முரடான கற்கள் மற்றும் முட்கள் மீதும் அவன் நடந்தே ஆக வேண்டும். ஒளி வெள்ளத்தில் எந்த சிரமமும் இன்றி போவது மட்டுமல்ல பாதையின் அடுத்தப் பகுதியில் இருள் சூழ்ந்த பள்ளத்திலும் அவன் போய்த்தான் தீர வேண்டும்.அப்போதுதான் வாழ்வின் இலக்கை மனிதன் அடைய முடியும்.

அல்லாஹ்வின் மீது  முழுமையான நம்பிக்கை, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியன மனிதனின் வாழ்வை வளப் படுத்தும்.அவனின் எதிர் காலத்தை பலப் படுத்தும்.

அருள் மறை குர்ஆன் அழகுபட உரைக்கிறது

“நீங்கள் (உண்மையான) விசுவாசிகளாக இருந்தால், (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (குர் ஆன் 5:23)

“நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்”. (குர்ஆன் 3:139)

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது”. (குர்ஆன் 94:6 )

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (குர்ஆன் (2 :155)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (குர்ஆன்  2:156)

“மேலும், மனிதனுக்குதான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை!” (குர்ஆன் 39: 53)

“விசுவாசிகளே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! “.(குர்ஆன் 3:200)

ஆகிய பரிசுத்தக் குர்ஆனின் வசனங்கள் பொருள் அறிய ஓதும் போது உங்கள் உள்ளங்கள்  பரவசப் படும் .அவற்றை நீங்கள் பின்பற்றும் போதும் வாழ்க்கையே முழுமையாக உங்கள் உங்கள் வசப் படும்.

இந்த உலகில் கணவனை இழந்த விதவைகள்,பெற்றோரை இழந்த அனாதைகள், பிள்ளைகளால் கைவிடப் பட்ட பெற்றோர்கள், உடல் ஊனங்களால் நகர முடியமால் இருக்கும்  மாற்றுதிரனாளிகள், அன்றாடம் வலிகளால்  அவதிப் படும் நோயாளிகள், வீடு இல்லாமல் வீதிகளில் படுத்து இருக்கும் மக்கள், ஓவ்வொரு நேரமும் கிடைத்த கொஞ்ச சோற்றை கொண்டு அரை வயிற்றை நிரப்பும் ஏழை மக்கள்,போர்களால் பிறந்த நாட்டில் இருந்து விரட்டப்பட்டு அகதி முகாமில் இருப்பவர்கள் என  ஒவ்வொருவரும் நம்பிக்கை,தைரியம்,தங்களால் முடிந்த முயற்சி பொறுமை சகிப்புத்தன்மை மட்டும் உடையவர்களாக அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் மரணமே அன்றாட செய்தியாய் இருந்திருக்கும். உலகம் பாதிக்கு மேல் மயான பூமியாய் காட்சி அளித்திருக்கும்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துன்பங்களை,துயரங்களோடு வசித்திருக்கிறார்கள். அன்றாடம் துக்கங்களை சுவாசித்து இருக்கிறார்கள்.

நபி அவர்கள் பிறக்கும் முன்பே தந்தை இறந்து ஆறாம் வயதில் தாயையும் இழந்து அனாதையாகி இருக்கிறார்கள்.

மக்களால் கைகளால்,கற்களால் அடித்து துன்புறுத்தப் பட்டு இருக்கிறார்கள்.

மக்காவின் இணை வைப்பாளர்களால் ஊர் விலக்கு செய்யப் பட்டு அவர்களும் அவர்களின் தோழர்களும் இலை தழைகளை சாப்பிட்டு இருந்து இருக்கிறார்கள்.

ஊரை விட்டு அவர்களும் அவர்களின் தோழர்களும் விரட்டப்பட்டு அகதிகளாய் ஆக்கப் பட்டு இருக்கிறார்கள்.

விரோதிகளால் போரில் தாக்கப் பட்டு இருக்கிறார்கள். வீட்டில் விருந்துக்கு அழைக்கப் பட்டு யூதர்களால் விஷம் கொடுக்கப் பட்டு இருக்கிறார்கள்.

தங்கள் செல்வத்தை தேடி வந்த தேவையுடைய மக்களுக்கு அளித்து விட்டு அவர்களே தாங்கள் உணவு இல்லாமல் வயிற்றில் கல்லைக் கட்டி வாழ்ந்து இருக்கிறார்கள்.ஈச்சங் கயிற்றால் ஆன கட்டிலில் படுத்து முதுகெல்லாம் தழும்புகள் அவர்களுக்கு ஆகி இருக்கிறது.

இவை அத்தனையும் சகித்து பொறுமையுடன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை,  தைரியம், விடா முயற்சி ஆகியன கொண்டு வாழ்வின் பாதைகளை கடந்துக் சென்றார்கள்.

எதிரிகள் உதிரிகளாய் ஆனார்கள். துன்பங்கள் தூசுகளாய் ஆனது. மக்கா நகரம் அவர்களின் ஆளுகையின் கீழ்  வந்தது. யத்ரிபோ அவர்களின் அழகியப் பெயரை (மதீனத்துன் நபி – நபியின் நகரம் என ) பெயரை தனக்கு சூட்டி கொண்டது.

பிரச்சினைகளை கண்டு குழம்பி விடாதீர்கள். துன்பங்கள் கண்டு தளர்ந்து விடாதீர்கள். கஷ்டங்களே கண்டு கண்ணீர் விடாதீர்கள். எழுங்கள், போராடுங்கள். முயலுங்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் மிக அருகில் இருக்கிறது நம்பிக்கை யாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் (குர்ஆன் 61:13)

*************************************************************************************

 

News

Read Previous

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’… உஷார்

Read Next

சாவிகள்

Leave a Reply

Your email address will not be published.