உ.வே.சாமிநாத அய்யரை உருவாக்கிய புத்தகம்

Vinkmag ad
உ.வே.சாமிநாத அய்யரை உருவாக்கிய புத்தகம்
( தமிழ்நூல் பதிப்பின் விடிவெள்ளி )
நண்பர்களே….
உ.வே.சாமிநாத அய்யரின் 13 வது (1868) வயதில் வெளியிடப்பட்டு 1870 இல் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ”சீவக சிந்தாமணியின் முதல் பகுதியான நாமகள் இலம்பகம்” நச்சினார்கினியர் எழுதிய சிறந்த உரையுடன் பாடமாக வைக்கப்பட்டது. அன்றைய காலத்து தமிழ்ப் புலவர்களால் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையில் இருந்த இந்த நூலை ஆங்கில அரசாங்கம் பாடமாக வைத்து உயிர்க்கொடுத்தது. இந்த நிகழ்ச்சி பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்து வெளியிடுவதுதான் தமிழர் என்ற தேசிய இன உணர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணத்தை அன்றைய இளைஞர்களின் நெஞ்சத்தில் விதைத்து விட்டது.
பாதிரியார் ஹெச்.பவாரால் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்ட இந்நூல் பிற்காலத்தில் நவீன ஆராய்ச்சிகளுடன் பழந்தமிழ் நூல்களை வெளியிட்ட அறிஞர்களுக்கு ஒளிபாய்ச்சி வழிகாட்டியது என்றால் அது மிகையாகாது.
இந்நூலில் பிற்காலங்களில் உ.வே.சாமிநாத அய்யர் தான் வெளியிட்ட நூல்களுக்கு மிகச் சிறப்பான முன்னுரைகளை எழுதியிருப்பதற்கு இந்த நூலில் ஹெச்.பவாரால் விரிவாக எழுதப்பட்ட ஆராய்ச்சி முன்னுரை முன்னோடியாகத் திகழ்கின்றது. சிந்தாமணியை அய்யர் வெளியிடும் போது ஜைன சமய தத்துவங்களை தான் அறிந்திருக்கவில்லை என்று கூறுகிறார். இந்நூலில் இந்த நூலை வாசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டு ஹெச்.பவார் ஜைன சமய சித்தாந்தம் என்று பெயரிட்டு எழுதியுள்ள தத்துவ பகுதியை உ.வே.சா எப்படி பார்க்காமல் விட்டார் என்பது தெரியவில்லை. பாதிரியார் பவாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் அந்தப் பகுதியை உ.வே.சா படிக்கவில்லை என்று கருதியிருந்தேன். ஆனால் நூலைப் பார்க்கும் போது ஆங்கிலத்தில் அந்தக் கட்டுரை அப்படியே பக்கத்துக்குப் பக்கம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கண்டு வியப்படைந்தேன்.
இந்த நூலை B.A. வகுப்பில் படித்துச் சுவைத்த சேலம் இராமசாமி முதலியார் பத்தாண்டுகள் கழித்து கும்பகோணம் நகரத்தில் உ.வே.சா வை சந்திக்கும் போது முழு நூலையும் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற தன் ஆசையை வெளியிடுகின்றார். கூடவே இந்த நூலைப் பற்றியும் கூறிவிட்டு சீவகசிந்தாமணி முழுமையாக எழுதப்பட்ட ஏட்டுச்சுவடியையும் அவரிடம் கொடுக்கின்றார். பிற்காலத்தில் உ.வே.சாவை தமிழ்த் தாத்தாவாகப் புகழ்பெறுவதற்கு ஒரு அடி எடுத்து கொடுத்தது இந்த நூல்தான்.
பாதிரியார் ஹெச்.பவார் ஒரு ஆங்கிலேயர் அல்லர். ஒரு பிரெஞ்ச்காரருக்கும் அவர் மனைவியாரான சென்னையைச் சார்ந்த ஒரு தமிழ் அம்மையாருக்கும் சென்னையில் மகனாகப் பிறந்தவர். அவர் எழுதிய முன்னுரையில் இந்த நூலைப் பாடமாக வைப்பதின் வழியாக அழிந்துபோகும் நிலையில் உள்ள தமிழ் நூல்களை உயிர்ப்பிக்க முடியும் என்று குறிப்பிடுகிறார். சிந்தாமணி போன்ற தமிழ்க் காப்பியங்கள் உலகின் புகழ்ப்பெற்ற நூல்களுக்கு இணையானது என்றும் வீரமாமுனிவர் சிந்தாமணியை ”கவிதை இளவரசன்” என்று கூறுவதையும் மேற்கோளாகக் கூறுகின்றார்.
ஆய்வுப்பூர்வமான அடிக்குறிப்புகள், அருஞ்சொல் அகராதி, அதே அருஞ்சொல் அகராதி ஆங்கிலமொழியிலும் என்று பல வகைகளிலும் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலை தமிழ் ஆய்வுலகம் மறந்தது ஏனோ?
குறிப்பு
இந்தச் செய்திகளுக்கான ஆதாரப் படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
namagal ilambam.jpg

News

Read Previous

இசை மேதை எஸ்.பி. பாலு

Read Next

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்

Leave a Reply

Your email address will not be published.