உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல்

Vinkmag ad

உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல்




நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தனிமனித உருவாக்கத்தின் நான்காவது நோக்கத்துடன் இப்பத்தியில் மீண்டும் சந்திக்கிறோம். தனிமனித உருவாக்கம் ஏன்? என்ற கேள்விக்கான பதில்களுள் உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல் என்பதுவும் ஒன்று. இத்தலைப்பை கீழ்வரும் கிளைத் தலைப்புகள் ஊடாக அணுகலாம் என்று நினைக்கிறோம்.

  1. நாகரீகம் என்பதன் பொருள் என்ன?
  2. இஸ்லாம் உலகில் மனித நாகரீகத்தை எவ்வாறு தோற்றுவித்தது?
  3. இஸ்லாம் சொல்லும் நாகரீகத்தின் பிரதான கூறுகள்
  4. நாகரீகத்திற்கும் தனிமனித உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு

நாகரீகம் என்பதன் பொருள் என்ன?

இங்கு நாகரீகம் என்பதற்கான விளக்கம் தத்துவவியலாளர்களின் வாதப் பிரதிவாதங்களில் இருந்து நோக்கப்படுவதைத் தவிர்த்து,  அல்குர்ஆனில் இருந்து புரிந்து கொள்ளப்படுவதற்கான ஒரு முயற்சியே நடைபெறுகிறது. இந்தக் கட்டுரை முழுவதிலும் இந்த ஒழுங்கே பின்பற்றப்பட்டுள்ளது.

பொதுவாக அறபுமொழியில் நாகரீகம் என்ற கருத்தைக் குறிப்பதற்கு ‘ஹழாரா’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஹழாரா என்பது நேரடி மொழிக் கருத்தில் நகர்புற வாழ்க்கை என்ற பொருளைத் தருகிறது.

அதாவது அறபு மொழியில் ‘பதாவா’ என்ற சொல்லின் எதிர்பதமாக இது பயன்படுத்தப்படுகிறது. ‘பதாவா’ என்பது நாட்டுப் புற வாழ்வைக் குறிக்கிறது. அறபு சமூகத்தில் நாட்டுப்புற வாழ்வு என்பது ஆரம்ப காலத்தில் காணப்பட்ட,  ஓரிடத்தில் தங்கி வாழாத நாடோடி வாழ்வு வடிவத்தையே கொண்டிருந்தது. அந்த வகையில் இந்த வாழ்வு வடிவத்தின் எதிர் வடிவமான,  நிலையாக தங்கி வாழும் வடிவம் ‘ஹழாரா’ என்ற சொல்லின் மூலம் நாடப்படுகிறது. எனவே,  நாகரீகம் என்பது முதலில் ஸ்திரமான வாழ்வு வடிவம் ஒன்றைக் குறிக்கிறது.

அடுத்து,  நபியவர்கள் கூறினார்கள் “யார் நாட்டுப் புற வாழ்வைக் கடைபிடிக்கிறாரோ அவர் வரண்ட தன்மையைப் பெறுவார்” என்றார்கள். (அஹ்மத்,  தபரானி) இங்கு வரண்ட,  நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு வாழ்வு முறைமையாக நாட்டுப் புற வாழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் இதன் எதிர்வடிவமான நெகிழ்வுத்தன்மையுள்ள ஒரு வாழ்வு முறைமை ஒன்றை நாகரீகம் என்பது குறிக்கிறது.

அதுபோல்,  நாட்டுப்புற அறபு சமூகம் குறித்து அல்-குர்ஆன் பேசும் பொழுது,  இவ்வாறு சொல்கிறது. “நாட்டுப்புற அறபிகள் இறை நிராகரிப்பிலும் நயவஞ்சகத்தனத்திலும் கடுமையாக இருப்பர். அல்லாஹ் தனது தூதுவருக்கு இறக்கிய வரையறைகளை அறிந்து கொள்வதற்கான அருகதை அற்றவர்கள்…” (தௌபா 97) என்கிறது.

இந்த வசனத்தில் இரண்டு வகையான முக்கிய எதிர்மறைப் பண்புகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. முதலாவது பிடிவாதமான கடும்போக்கு. இரண்டாவது ஒரு விடயத்தை சமநிலையில் புரிந்து கொள்ள முடியாத அறிவுப் பலவீனம். இந்த இரண்டும் நாட்டுப் புற வாழ்வின் அடையாளங்களாக இங்கு குறித்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானது. அதாவது அல்-குர்ஆனில் இந்த வசனத்தைத் தொடர்ந்து தொன்னூற்றி ஒன்பதாவது வசனத்தில் நாட்டுப்புற அறபிக்களில் சிலர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றவர்களும் இருக்கிறார்கள் என்ற கருத்து பேசப்படுகிறது. இருந்த போதிலும் முதல் வசனத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் தான் நாட்டுப் புற வாழ்வின் பொதுவிதியாகும். இரண்டாவது வசனத்தில் சொல்லப்பட்ட விடயம் விதிவிலக்கான சூழல் என்கிறார். அந்தவகையில் அதுபோன்ற நாட்டுப்புற வாழ்வு முறையில் இருந்து மனிதர்களை மீட்டு எடுத்து நாகரீகமான ஒரு வாழ்வுக்கு கொண்டு வருவதே அல்குர்ஆனின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே,  மேற்சொன்ன வாழ்வு முறைக்கு எதிர் வடிவமான பொசிடிவ்வான மிதமான அணுகுமுறையும் ஒரு சமநிலையான புரிதல் ஆற்றலும் கொண்ட வாழ்வு முறை ஒன்றை நாகரீகம் என்ற சொல் குறிக்கின்றது.

மேற்சொல்லப்பட்ட விளக்கங்களில் அடையாளம் காட்டப்பட்ட ஸ்திரத்தன்மை,  நெகிழ்வுத்தன்மை,  பொசிடிவ் சிந்தனை,  மிதமான அணுகுமுறை,  சமநிலை அறிவாற்றல் போன்ற பண்புகள் ஒவ்வொன்றும் ஒரு சமூகத்தின் அனைத்து வகையான அபிவிருத்திகளுக்கும் அவசியமானவை என்பது தெளிவானது. குறிப்பாக பௌதீக அபிவிருத்தி என்பது ஸ்திரமான ஒரு வாழ்வின் போதே அமைகிறது.

இந்தப் பின்புலத்தில் இஸ்லாம் சொல்லும் நாகரீகம் என்ற சிந்தனையை பின்வருமாறு எளிமையாக வரையறை செய்யலாம். “நாகரீகம் என்பது இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கிய விதிகளையும் விழுமியங்களையும் கோட்பாடுகளையும் குறிப்பதுடன் அவற்றின் மூலம் அடையப் பெறக்கூடிய மனித சமூகத்தின் உயர்ச்சியையும் எல்லாப் பகுதிகள் சார்ந்த அபிவிருத்திகளையும் குறித்து நிற்கின்றது.”

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் குறித்துக் காட்டுவது பொருத்தமானது. அதாவது,  கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவதுபோல் இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற நாகரீகம் என்பது ஏனைய நாகரீகங்களை விட்டும் வித்தியாசப்படும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. ஏனைய நாகரீகங்கள் அதிகமாக பௌதீக அபிவிருத்திகள்,  மனிதனுடைய பௌதீக,  உடலியல் ஆசைகளை அடைந்து கொள்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியது. உலகம்தான் அவற்றின் நோக்கம். அல்லாஹ்,  மறுமை,  ஆன்மா போன்ற விடயங்களுக்கு அந்த நாகரீகங்களில் உரிய இடம் அமையவில்லை. ஆனால் இஸ்லாம் உருவாக்கிய நாகரீகம் மனிதனை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தியது. பூமியை வானத்துடன் இணைத்தது. உலகை மறுமையுடன் தொடர்புபடுத்தியது. சடத்தை ஆன்மாவுடன் கலந்தது. மூளையையும் உள்ளத்தையும் சமநிலைப்படுத்தியது. அறிவையும் ஈமானையும் சேர்த்தது. பண்பாட்டு உயர்வை எதிர்பார்த்த அதேவேளை பௌதீக அபிவிருத்தியையும் எதிர்பார்த்தது. இதுதான் இஸ்லாத்தின் நாகரீகம். உன்னதமான சமநிலை நாகரீகம் என்கிறார்.

கலாநிதி கர்ளாவி அவர்களுடைய வார்த்தைகள் மேலே சொல்லப்பட்ட நாகரீகம் பற்றிய இஸ்லாமிய சிந்தனையை இன்னும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம். இதே கருத்தை வலுப்படுத்தும் வகையில் கலாநிதி ராகிப் ஸிர்ஜானி அவர்கள் தரும் விளக்கத்தைப் பாருங்கள். அவர் இஸ்லாம் முன்வைக்கும் நாகரீக சிந்தனையை ஒரு பிரமிட் ஒழுங்கில் முன்வைக்கிறார். முதலாவது பிரமிட்டின் அடிமட்டம்,  இது சூழலுடனும்,  பூமியின் கூறுகளுடனுமான உறவாடலைக் குறிக்கும். இதன்மூலம் அபிவிருத்தியடைந்த ஒரு பௌதீக வாழ்வை அடைந்து கொள்வது நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. இரண்டாவது இந்த மட்டத்திற்கு மேலே அமையும் ஒரு மட்டம் இது சக மனிதனுடனான உறவாடலைக் குறிக்கும். இதன் மூலம் உயர்பெறுமானங்களைப் பிரதிபளிக்கும் சகவாழ்வு ஒன்றை அடைந்து கொள்வது நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. மூன்றாவது,  இரண்டாம் மட்டத்திற்கு மேலே அமையக்கூடிய பிரமிட்டின் உயர் மட்டம். இது மனிதன் தனது படைப்பாளனை அறிந்து கொள்ளும் மட்டம். மனிதனுக்கும் படைப்பாளனுக்குமிடையிலான உறவாடலை இம்மட்டம் குறித்து நிற்கிறது. இதன் மூலம் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களைப் பிரதிபளிக்கும் ஒரு வாழ்வை அடைந்து கொள்வது நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. நாகரீகத்தில் இந்த மூன்று மட்டங்களையும் உருவாக்க முடியுமானது இஸ்லாத்தினால் மாத்திரமே என்கிறார்.

இந்த விளக்கத்தில் இரண்டு முக்கிய உண்மைகள் புலப்படுகின்றன. முதலாவது,  இஸ்லாமிய நாகரீகத்தின் முழுமைத்தன்மை. அது தனித்து பௌதீக,  உலக அபிவிருத்தியை மாத்திரம் குறிக்கவில்லை. மாற்றமாக,  ஆன்மீக,  பண்பாட்டு அபிவிருத்திகளையும் உள்ளடக்கியது என்பதை கூறுகிறது. இரண்டாவது,  பிரமிட் வடிவின் மூலம் முழு மனித சமூகமும் எவ்வாறு இந்த நாகரீகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. அதாவது மனிதர்களில் உலகை அபிவிருத்தி செய்பவர்கள் மிகவும் அதிகமாக இருப்பர். மனித உறவை அபிவிருத்தி செய்வோர் அதைவிடவும் குறைவாகவே இருப்பர். இறை உறவை அபிவிருத்தி செய்வோர் அதை விடவும் குறைவாகவே இருப்பர். இதுதான் இஸ்லாம் பரிந்துரை செய்யும் நியாயமான நாகரீக வடிவம்.

இஸ்லாம் உலகில் மனித நாகரீகத்தை எவ்வாறு தோற்றுவித்தது?

இஸ்லாம் சொல்லும் நாகரீகம் என்று பேசும் பொழுது,  பலரது சிந்தனையில் முதலில் தோன்றும் விடயம் என்னவெனின், அதன் தோற்றம் நபியவர்களது தூதுத்துவத்துடன்தான் ஆரம்பிக்கின்றது என்பதாகும். ஆனால் உண்மை அதுவல்ல. அல்லாஹ்தஆலா உலகிற்கு தூதுத்துவங்களை வழங்கத் துவங்கிய முதல் மனிதனான ஆதம் (அலை) அவர்கள் முதலே உலகில் அல்லாஹ்தஆலா முன்வைக்கும் நாகரீகம் ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் இஸ்லாம் முன்வைக்கும் நாகரீகம் என்பது உண்மையில் உலகில் மனித நாகரீகத்தின் தோற்றமாகும். உலகில் தூதுத்துவ வரலாறு என்பது உலகில் மனித நாகரீகம் தோன்றி வளர்ந்த வரலாறாகும்.

இந்தோனேஷிய இஸ்லாமிய அறிஞரான ஷெய்க் அனீஸ் மத்தா அவர்கள் இக்கருத்தை விளக்கும்போது,  உலகில் ஒரு நாகரீகத்தின் தோற்றத்திற்கு நான்கு காரணிகள் அவசியப்படுகின்றன என்கிறார்.

  1. இடம்
  2. காலம்
  3. செயற்படுத்துபவன்
  4. சிந்தனை

அல்லாஹ்தஆலா மனிதனைப் படைக்க முன்னர் பூமியைப் படைத்தான். பூமியைப் படைத்தவுடன் அது அழிக்கப்படும் காலமும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இங்கு முதல் இரண்டு காரணிகளும் உருவாகிவிட்டன. அதுதான் இடமும் காலமும். அடுத்து மனிதன் படைக்கப்படுகிறான். இப்பொழுது மூன்றாவது காரணியும் உருவாகி விட்டது. அதுதான் செயற்படுத்துபவன். அடுத்த என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்ற கேள்வி வருகிறது. அதற்கு விடையாகத்தான் தூதுத்துவம் இறக்கப்படுகிறது. இப்பொழுது நான்காவது காரணியும் உருவாகி விட்டது. அதுதான் சிந்தனை,  இஸ்லாம் சொல்லும் நாகரீகம் இவ்வாறுதான் தோற்றம் பெற்றது.

உலகைப் படைத்ததன் பின்னர் அல்லாஹ்தஆலா மலக்குகளைப் பார்த்துச் சொல்கிறான் “பூமியில் நான் எனது பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்…” (பகரா – 30) என்கிறான். இங்குதான் அல்லாஹ்தஆலா முதன் முதலில் மனிதனின் நாகரீகப் பணியை அறிவிப்புச் செய்கிறான். அது ஒரு ஆக்க நாகரீகமாகவன்றி அழிவு நாகரீகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தைத்தான் மலக்குமார்கள் வெளிப்படுத்தினார்கள். இல்லை அது ஒரு ஆக்க நாகரீகம்தான் அதற்குரிய தயார்படுத்தலை மனிதனில் நான் செய்திருக்கிறேன் என்ற பதிலாகத்தான் அடுத்த வசனத்தில் “ஆதமுக்கு எல்லாப் பெயர்களையும் கற்பித்தான்…” (பகரா 31) என்று அல்லாஹ்தஆலா குறிப்பிடுகிறான்.

ஆதம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூது,  உண்மையில் ஒரு குடும்பத்திற்கான தூது மாத்திரமே. ஏனெனில் அப்போது உலகில் அந்த ஒரு குடும்பம் மாத்திரமே வாழ்ந்தது. இப்பொழுது பூமியில் நிகழ்த்தப்பட வேண்டிய நாகரீகப் பணி அந்தக் குடும்பத்தின் பொறுப்பாக இருந்தது. அதனால்தானோ என்னவோ அல்லாஹ்தஆலா அந்தக் குடும்பத்தின் உருவத் தோற்றத்தை பிரமாண்டமானதாகப் படைத்திருந்தான். ஏனெனில் நாகரீகம் நிகழ்த்தப்பட வேண்டிய பூமி விசாலமானது. ஆனால் அதனை நிகழ்த்த வேண்டிய மனிதர்களின் எண்ணிக்கை குறைவானது. எனவேதான் உருவத் தோற்றமும்,  ஆற்றல்களும் பிரமாண்டமாய் அமைந்திருக்க முடியும். தொடர்ந்து வந்த ஆத்,  ஸமூத் கோத்திரங்களின் அபரிமித ஆற்றல் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளமை தெளிவானது.

அதுபற்றி நபியவர்கள் கூறும்போது “அல்லாஹ்தஆலா ஆதம் (அலை) அவர்களை அவரது தோற்றத்தில் அறுபது முழ உயரத்தில் படைத்தான்… தொடர்ந்தும் மனதப் படைப்பின் பருமன் தற்போது வரை குறைவடைந்து வந்துள்ளது” (புஹாரி,  முஸ்லிம்) என்றார்கள்.

ஒரு குடும்பமாய் இருந்த ஆதம் (அலை) அவர்களது சமூகம்,  தொடர்ந்து கோத்திரங்களாய் சமூகங்களாய் விரிவடைந்த போது,  அவற்றிற்குரிய தூதுத்துவங்களும் அவற்றிற்கேற்ப மாற்றமடைந்து வந்துள்ளன. “ஒவ்வொரு சமூகத்திற்குமுரிய சட்டங்களையும் செயல்வழியையும் நாம் அமைத்தோம்.” (மாஇதா – 48) என்ற அல்லாஹ்தஆலா இந்த உண்மையைத் தெளிவுபடுத்துகிறான். இங்கு தூதுத்துவங்களின் மாற்றம் என்பது அவற்றின் மூலச் செய்தியில் மாற்றம் நிகழ்ந்தமையைக் குறிக்க மாட்டாது. ஏனெனில் எல்லாத் தூதுத்துவங்களினதும் மூலச்செய்தி ஒன்றுதான் என்பதை அல்குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்தினதும் பருமனுக்கு ஏற்ப இந்த உலகில் அதன் நாகரீகப் பணியை மேற்கொள்வதற்கான தூதுத்துவமே வழங்கப்பட்டிருக்கிறது. எல்லா சமூகங்களுக்கும் வழங்கப்பட்ட நாகரீகப் பணி ஒன்றுதான் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “நூஹ் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட வஸிய்யத்துகள் தான் உங்களுக்கு தீனாக வழங்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவையும், இப்றாகீம்,  மூஸா,  ஈஸா (அலை) போன்றவர்களுக்கு வஸிய்யத்தாக சொல்லப்பட்டவையும் தீனை நிலை நாட்டுங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதுதான்…” (ஷுரா – 13) என்கிறது.

இவற்றின் நீட்சியாகத்தான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறுதித்தூது வழங்கப்படுகிறது. இது மனித சமூகத்தின் முதிர்ச்சி நிலையில் வழங்கப்படும் தூது. எனவேதான் அது மறுமை வரையில் நிலைத்திருக்கும் தூதாகவும்,  எல்லா மனிதர்களுக்கும்,  எல்லா இடங்களுக்குமான தூதாகவும் அமைக்கப்பட்டது. அல்குர்ஆன் கூறுகிறது “முழு மனித சமூகத்திற்கும் சுபசோபனம் சொல்பவராகவும்,  எச்சரிப்பவராகவுமே நாம் உங்களை அனுப்பி வைத்தோம்…” (ஸபஃ – 28)என்கிறது.

அந்தவகையில் உலகில் ஆதம் (அலை) முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையில் வழங்கப்பட்ட அனைத்துத் தூதுத்துவங்களும் உலகில் மனித நாகரீகத்திற்கான செயல் வழிகளாகவே காணப்பட்டன. எனவே,  இஸ்லாம் உலகில் ஒரு மனித நாகரீகத்தைத் தோற்றுவிக்க விரும்புகிறது என்பதை நாம் இந்தப் பின்புலத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் சொல்லும் நாகரீகத்தின் பிரதான கூறுகள்

கலாநிதி உமர் அபீத் ஹஸனாஹ்,  கலாநிதி ஸலாஹ் சுல்தான் போன்றவர்கள் சொல்வது போல் இஸ்லாம் சொல்லும் நாகரீகம் பிரதானமாக நான்கு கூறுகளைக் கொண்டது. மற்றொரு வகையில் சொன்னால் இந்த நான்கு காரணிகளின் மீதுதான் இஸ்லாம் சொல்லும் நாகரீகம் எழுந்து நிற்கின்றது.

  1. நம்பிக்கை (அகீதா)
  2. அறிவு
  3. பண்பாட்டு விழுமியங்கள்
  4. அபிவிருத்தி
  1. நம்பிக்கை (அகீதா) :-இங்கு நம்பிக்கை என்பதன் மூலம் குறிப்பாக மறைவான விடயங்கள் பற்றிய நம்பிக்கையே நாடப்படுகிறது. படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை,  மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை,  கூலி தண்டனை பற்றிய நம்பிக்கை,  சுவர்க்கம்,  நரகம் பற்றிய நம்பிக்கை போன்ற நேரடியான புலனுணர்வுகளுக்கு அப்பால்பட்ட நம்பிக்கை ஒன்றின் மீது தான் இஸ்லாம் இந்த உலகில் ஒரு நாகரீகத்தை உருவாக்குகிறது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டது போல் படைப்பாளன் பற்றிய சிந்தனையைத் தவிர்த்து இஸ்லாம் உலக வாழ்வை கட்டியெழுப்பவில்லை. வானமும் பூமியும் இணைந்த ஒரு வாழ்வுதான் இஸ்லாம் சொல்லும் நாகரீகம்.

நவீன கால மகாஸித் சிந்தனையாளர்கள் சொல்வது போல்,  இஸ்லாம் முன்வைக்கும் நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மனிதனது மறுமை வாழ்வை மாத்திரமன்றி உலக வாழ்வையும் நெறிப்படுத்தக் கூடியனவாகும். இஸ்லாம் சொல்லும் நம்பிக்கைகள் மனிதனிடத்தில் அடிமைத்தனத்தை விதைக்கவில்லை. மாற்றமாக சுதந்திரத்தை விதைத்தன. அல்லாஹ்வின் அடிமையாக மாத்திரம் வாழும் போதுதான் உலகில் மனிதன் சுதந்திரத்தை சுத்தமாக உணர முடியும். அதுபோல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள் மனிதனிடத்தில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தவில்லை.  மாற்றமாக வாழ்வில் தன்னம்பிக்கையையும் பிடிப்பையுமே தோற்றுவிக்கின்றன. கலாநிதி ஹிபா ரஊப் அவர்கள் கூறுவது போல் உலகின் கூலியை மாத்திரம் எதிர்பார்ப்பவனுக்கு உலக அபிவிருத்தியை நேர்மையாக நிறைவேற்ற முடியாது. பல சமயங்களில் அது அபிவிருத்திக்குத் தடையாகவே அமையும். ஆனால் மறுமையில் கூலியை எதிர்பார்ப்பவனிடத்தில் அபிவிருத்தி என்பது உலகின் நேர்மையான இலக்காக இருக்கும் என்கிறார்.

  1. அறிவு :-அறிவும் ஆய்வும் தேடலும் இன்றி ஒரு நாகரீகம் உருவாவது சாத்தியமற்றது. அதனால் தான் இஸ்லாம் அறிவையும் ஆய்வையும் தேடலையும் வாஜிபாக்கியது. “அறிவு தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது”   (தபரானி) என்று நபியவர்கள் இதனைத்தான் கூறினார்கள். மாத்திரமன்றி அறிவுக்கான ஒவ்வொரு உறுப்பும் அதற்குரிய பணியை நிறைவேற்றியதா? இல்லையா? என்ற விசாரணையை மறுமையில் எதிர்கொள்ள வேண்டும் என அல்குர்ஆன் குறித்துக் காட்டுகிறது. “செவிப்புலனும்,  பார்வைப் புலனும் உள்ளமும் ஒவ்வொன்றும் அவற்றின் பணி குறித்து விசாரிக்கப்படும்” என்கிறது அல்குர்ஆன். (இஸ்ரா – 36)

இந்த வசனம் ஒரு உண்மையைக் சொல்கிறது அறிவாய்வின் நோக்கம் தனித்து அறிவைப் பெறுவதல்ல. மாற்றமாக அறிவுக்கு ஒரு பணி இருக்கிறது. அதுதான் நிகழ வேண்டிய நாகரீகப் பணி. அந்தவகையில் அறிவாய்வை இஸ்லாம் நாகரீகம் எழுந்து நிற்பதற்கான ஊடகமாய்ச் சொல்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் அல்குர்ஆன் பல்வேறு பௌதீக உண்மைகளைச் சுட்டிக்காட்டி அவை குறித்த ஆய்வை மனிதன் செய்யக் கூடாதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அந்த ஆய்வை மேற்கொள்ளும் மனிதன் வரும் முடிவுதான் “இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை” (ஆல இம்ரான்191) என்ற வார்த்தைகள்.

  1. பண்பாட்டு விழுமியங்கள் :-இது மனித உறவுகள் சார்ந்தது. ஒரு நாகரீகம் எழுந்து நிற்பதற்கு இவை அத்தியவசியமானவை. ஏனெனில் நாகரீகப் பணி என்பது ஒரு கூட்டுப்பணி. ஒரு மனித முயற்சியால் மாத்திரமோ அல்லது தனித்து ஒரு சமூகத்தினால் மாத்திரமோ நிகழ முடியாதது. முழு மனித சமூகத்தின் பணி அந்த வகையில் அங்கு அனைவரும் கடைபிடிப்பதற்குரிய விழுமியங்கள் தேவை. அனைவரையும் ஏற்றுக் கொள்கின்ற,  அனைவரையும் சமமாக மதிக்கின்ற அனைவருக்கும் சுதந்திரம் வழங்குகின்ற சூழல் தேவை. உண்மை,  நேர்மை,  நீதி, சமத்துவம்,  சுதந்திரம்,  கண்ணியம் போன்ற பல்வேறு பண்பாட்டு விழுமியங்களை இஸ்லாம் வலியுறுத்தியது இந்தப் பின்னணியிலாகும்.

நவீன மகாஸித் சிந்தனையாளர்கள் ஒரு உண்மையைச் சொல்வார்கள். இத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் நாம் அடைந்து கொள்ள வேண்டிய இறுதி இலக்குகள் அல்ல. மாற்றமாக பிரிதோர் கூட்டு இலக்கை அடைந்து கொள்வதற்காக அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை. ஆனால் இந்தப் பண்பாட்டு விழுமியங்கள் சமூக வாழ்வில் காணப்படாத போது, கூட்டிணைந்து அடையப்பட வேண்டிய எந்த ஒரு இலக்கும் அடையப் பெறுவது அசாத்தியமானதாக மாறிவிட முடியும். அல்லது அந்த இலக்குகளின் விளைவை மக்கள் சுவைக்க முடியாத நிலை ஏற்படும். எனவே,  இவை ஒவ்வொன்றும் இன்றியமையாத அந்தஸ்த்தைப் பெறுகின்றன. அந்தப் பின்புலத்தில்தான் இவற்றை மகாஸித் என்று அமைத்தார்கள்.

அந்தவகையில் உலகில் நாகரீப் பணி எழுந்து நிற்பதற்கு இத்தகைய விழுமியங்கள் இன்றியமையாதவை என்ற வகையில்தான் அல்குர்ஆன் முழுவதும் இவை பெரிதும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

4.அபிவிருத்தி :- இஸ்லாம் சொல்லும் அபிவிருத்தி சிந்தனை அடிப்படையில் “இமாரதுல் அர்ழ்” எனும் கோட்பாட்டிலிருந்து எழுகிறது. இமாரதுல் அர்ழ் என்பது பூமியை அபிவிருத்தி செய்தல். இது மனிதப் படைப்பின் பிரதான பணிகளுள் ஒன்று என்பதாகவே அல்குர்அன் குறிப்பிடுகிறது. “அவன்தான் உங்களை பூமியில் இருந்து படைத்து அதனை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டான்…” (ஹுத் – 61) என்று அல்குர்ஆன் இக்கருத்தைப் பேசுகிறது.

பூமியின் அபிவிருத்தி மனிதனின் ஒரு அடிப்படைப் பணி என்ற வகையிலேயே பூமியை மனிதப் பயன்பாட்டிற்கு உரிய வகையில் அல்லாஹ்தஆலா அமைத்து வைத்துள்ளதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. “அவன் தான் பூமியை உங்களுக்கு இயைந்து கொடுக்கும் வகையில் அமைத்து வைத்துள்ளான். எனவே,  அதன் பல் திசைகளிலும் நீங்கள் பயணம் செய்து அல்லாஹ்வின் ரிஸ்க்கைப் பெற்றுக் கொள்ளுங்கள்…” (முல்க் – 15) என்று அல்குர்ஆன் அனைவரையும் பார்த்து அபிவிருத்தி அறைகூவல் விடுப்பதைக் காணலாம்.

இஸ்லாம் முன்வைக்கும் அபிவிருத்தி சிந்தனை பூமியில் வாழும் அனைத்துப் படைப்புக்களினதும் நலனை மையப்படுத்திய சிந்தனையாகும். அதாவது பூமியில் மனிதன் உற்பட பறவைகள்,  மிருகங்கள் ஏனைய நுண்ணுயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களையும்,  தாவரங்கள் ஏனைய சடப்பொருட்கள் அனைத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும்.

அந்தவகையில் அபிவிருத்தி என்ற பெயரில் சூழல்,  தாவரங்கள்,  ஏனைய உயிரினங்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இக்கருத்தையே அல்குர்ஆன் பின்வருமாறு வலியுறுத்துகிறது. “பூமியில் வசிக்கும் ஒரு கால் நடையாக இருக்கட்டும்,  தனது இறக்கைகளால் பறக்கும் ஒரு பறவையாக இருக்கட்டும் ஒவ்வொன்றும் உங்களைப் போன்ற ஒரு சமூகமாகவே காணப்படுகின்றன…” (அன்ஆம் – 38). இந்த வசனத்திற்கு இமாம் குர்துபி அவர்கள் விளக்கமளிக்கும்போது,  இங்கு உங்களைப் போன்ற ஒரு சமூகம் என்று சொல்வதன் பொருள் இவை ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் படைப்புகள்,  அவற்றின் ரிஸ்க்கையும் அவனே பொறுப்பேற்றுள்ளான். அந்தவகையில் இங்கு எந்தப் படைப்புக்கும் அநியாயம் இழைக்கப்படவோ அவற்றின் மீது அத்துமீறவோ எவருக்கும் முடியாது என்பதையே வலியறுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.

அடுத்து,  இஸ்லாத்தின் அபிவிருத்தி சிந்தனையின் மற்றொரு சிறப்பம்சம்,  அது பூமியை மனிதனின் இறுதி இலக்காக ஒரு போதும் அமைக்கவில்லை. பூமியை அபிவிருத்தி செய்தல் பற்றிய அல்குர்ஆனின் பார்வையில்,  ஒரு புறம் அது மனிதனின் சிறந்த பயன்பாட்டிற்கு உரியது என்பதுடன் மறுபுறம் மனிதன் அதனையே இறுதி இலக்காக அமைத்து விடவும் கூடாது என்கிறது. இந்த இரண்டுக்கும் மத்தியிலான சமநிலையாகவே இஸ்லாத்தின் அபிவிருத்தி சிந்தனை அமைந்துள்ளது. அந்தவகையில் மறுமை வாழ்வின் வெற்றிற்கான ஒரு சிறந்த ஊடகம் என்ற வகையிலேயே பூமியின் அபிவிருத்தியை அல்குர்ஆன் முன்வைப்பதைக் காணலாம். பூமியின் அபிவிருத்தி என்பதே ஒரு நாகரீகப் பணி என்பதனை மேற்கூறப்பட்ட விளக்கங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

நாகரீகத்திற்கும் தனிமனித உருவாக்கத்திற்குமிடையிலான தொடர்பு

மேற்சொல்லப்படட இஸ்லாத்தின் நாகரீக சிந்தனையை மேலோட்டமாகப் புரிந்து கொள்கின்ற பொழுதே,  அத்தகைய ஒரு நாகரீகம் ஒரு போதும் தானாகத் தோற்றம் பெற மாட்டாது. அதற்கான ஒரு முயற்சியும் உழைப்பும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த உழைப்பை வழங்கக்கூடிய மனிதன்,  குறித்த நாகரீக சிந்தனையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற பொழுதுதான் அவனது உழைப்பு ‘நாகரீகம்’ என்ற விளைவை கொண்டு வந்து சேர்க்க முடியும். இது இயல்பான தர்க்கரீதியான ஒரு முடிவு.

இந்தப் பின்புலத்தில்தான் ஆதமைப் படைத்த அல்லாஹ்தஆலா,  அந்த நாகரீக உருவாக்கத்திற்காய் ஆதமை தயார்படுத்தியமையைக் காணலாம். “ஆதமுக்கு எல்லாப் பெயர்களையும் அல்லாஹ் கற்பித்தான்” (பகரா – 31) என்ற வசனம் இந்தக் கருத்தை நேரடியாகவே உணர்த்துகிறது. மாத்திரமன்றி ஆதமையும் ஹவ்வாவையும் படைத்து நேரடியாக பூமியில் வாழ்வை ஆரம்பிக்க வைக்காமல்,  சுவர்க்கத்தில் கொஞ்ச காலம் வாழவிட்டமையும்,  அங்கு ஷைத்தானுடனான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியமையும் கூட உலகில் கட்டியெழுப்ப வேண்டிய நாகரீகத்திற்கான முற்கூட்டிய பயிற்சிகளாகத்தான் அடையாளம் காண முடிகிறது.

அது போல் மூஸா (அலை) அவர்களது வரலாற்றைப் பார்க்கின்ற பொழுது,  பிர்அவ்னுடைய மாளிகையில் மூஸா (அலை) அவர்கள் வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்த அல்லாஹ்தஆலா,  அது பற்றிக் கூறும் பொழுது,  “எனது அன்பை நான் உங்கள் மீது சொரிந்தேன்,  எனது பார்வையின் கீழ் நீங்கள்; வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக” (தாஹா – 39) என்று கூறுகின்றான். இது அல்லாஹ்வின் திட்டமிட்ட உருவாக்கத்தைக் குறித்து நிற்கின்றது. மாத்திரமன்றி அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்டமையையும் கூறுகின்றது. மூஸா (அலை) அவர்களின் நாகரீகப் பணியை முன்னிறுத்தியே இந்த ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

யூசுப் (அலை) அவர்களது வரலாற்றை அல்குர்ஆன் குறிப்பிடும்பொழுது அவரது உருவாக்கத்தை அல்லாஹ்தஆலா பல கட்டங்களில் செய்திருப்பதைக் காணலாம். முதலில் அவரது குடும்பத்திறனருடனான வாழ்வு,  அடுத்து அரச குடும்பத்தில் வாழ்ந்த வாழ்க்கை,  அடுத்து சிறையில் வாழ்ந்த வாழ்க்கை. சிறை வாழ்க்கையையும் அல்லாஹ்தஆலா திட்டமிட்டு நீடித்தமையையும் காணலாம். இந்த ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு அனுபவத்தை ஏற்படுத்தியமை எதிர்காலத்தில் ஒரு பெரும் நாகரீகப் புரட்சியை ஏற்படுத்துவதற்காக அவர் தயார்படுத்தப்பட்டமையையே காட்டுகிறது.

இதே உண்மையை முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையிலும் அவதானிக்கலாம். ஒரு பெரும் பணியை சுமப்பதற்காக அல்லாஹ்தஆலா அவரைத் தயார்படுத்தியிருக்கிறான் என்பதை அல்குர்ஆன் கூறுகிறது. “உங்களை ஒரு அநாதையாகக் கண்டு அவன் அபயமளிக்கவில்லையா? உங்களை வழிதடுமாறிய நிலையில் கண்டு நேர்வழி காட்டினான். உங்களை வசதியற்ற நிலையில் கண்டு,  வசதிகளை ஏற்படுத்தினான்” (லுஹா – 6,  7,  8) என்கிறது.

உலகில் இஸ்லாம் சொல்லும் மனித நாகரீகம் நிலை நாட்டப்படும் வகையில்,  அதன் பிரதிநிதிகளை அல்லாஹ்தஆலா தயார்படுத்தி வந்துள்ளான் என்பதற்கு அல்குர்ஆனும் நபியவர்களது வாழ்வும் சிறந்த சான்று.

அடுத்து நபியவர்களது ஸஹாபாக்களுடனான வாழ்வை அவதானித்துப் பார்க்கினற் பொழுதும் உருவாக்கம் என்பது மிகவும் ஹைலைட்டாகத் தென்படும் ஒரு உண்மையாகும். அதிலும் குறிப்பாக மதீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தைப் பார்க்கும் பொழுது,  ஒரு நாகரீக வாழ்வொழுங்கில் ஸஹாபாக்களைப் பயிற்றுவிக்கும் செயற்பாடாக அதனை அடையாளம் காணலாம். அக்காலத்தில் ஹிஜ்ரத் என்பது மிக முக்கியமானதொரு மார்க்கக் கடமையாக வலியுறுத்தப்பட்டமையின் பின்புலத்தைப் பார்க்கின்ற பொழுது அது வெறுமனே அரசியல் காரணிகளை மையப்படுத்தியது என்று மாத்திரம் சொல்ல முடியாது. மாற்றமாக முஸ்லிம்களை தனித்துவமான ஒரு நாகரீக வாழ்வொழுங்குக்குள் பயிற்றுவிப்பது அங்கு முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது.

அதனால்தான் ஹிஜ்ரத் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் நாட்டுப்புற வாழ்வை நோக்கி ஒருவர் திரும்பிச் செல்வது ஒரு சமயம் பெரும்பாவமாகவும் மற்றொரு சமயம் ரித்தத்தாகவும் கருதப்பட்டது. நபியவர்கள் பெரும்பாவங்களைப் பட்டியல்படுத்தும்போது அவற்றில் ஒன்றாக “ஹிஜ்ரத்தின் பின்னர் நாட்டுப்புற வாழ்வுக்குத் திரும்பிச் செல்லல்” (பஸ்ஸார்) என்றார்கள். அதுபோல் நபியவர்களது சாபத்துக்குரியவர்கள் பட்டியல்படுத்தப்படும் பொழுது,  அவர்களில் ஒருவராக“ஹிஜ்ரத்தின் பின் நாட்டுப்புற வாழ்வுக்கு மீள்பவர்” (இப்னு குஜைமா) என்றார்கள். இமாம் இப்னுல் அஸீர் அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும்போது, நியாயமான காரணம் இன்றி நாட்டுப்புற வாழ்வுக்கு ஒருவர் திரும்பிச் செல்கின்ற போது அதனை மதம் மாறுதல் போன்றுதான் அன்று கருதினார்கள் என்று விளக்கமளிக்கின்றார்.

இவை மதீனா வாழ்வில் ஒரு நாகரீகப் பணிக்காக ஸஹாபாக்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையே குறித்துக் காட்டுகின்றன.

அதுபோல்,  சூரதுல் பகராவின் கீழ்வரும் வசனத்தை,  ஒரு நாகரீக உருவாக்க செய்தியைச் சொல்வதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. “அல்லாஹ்வின் வண்ணம்,  அல்லாஹ்வை விடவும் அழகிய வண்ணமிடுபவன் யார்? அவனுக்கே நாம் அடிமையாக இருக்கின்றோம்” (பகரா – 138). இந்தக் கருத்தை அல்லாஹ்தஆலா அன்றைய யூத,  கிறிஸ்தவர்களின் தவறான ஒரு வாதத்திற்குப் பதில் அளிக்கும் போது,  எல்லா நபிமார்களும் ஒரே சிந்தனை மரபிலேயே காணப்பட்டனர். அந்த வகையில் எல்லா நபிமார்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அந்த சிந்தனை மரபு அல்லாஹ்தஆலா வடிவமைத்த ஒரு மரபு என்பதைத்தான் இந்த வசனம் சொல்கிறது. அந்தவகையில் உலகில் அல்லாஹ் உருவாக்கிய மனித நாகரீகத்தின் ஒத்த இயல்பையும்,  அந்த இயல்பின் மீது அனைவரையும் அவன் வார்த்தெடுக்கிறான் என்பதையுமே இந்த வசனம் குறித்து நிற்கிறது. இங்கும் நாகரீகத்தின் மீதான ஒரு உருவாக்கம் அடையாளம் காட்டப்படுகிறது.

அடுத்து,  இமாம் ஷாபி அவர்களிடம், அப்துல் காதர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகையில்“பொறுமை,  சோதனை,  அதிகாரம் இவற்றில் எது சிறந்தது எனக் கேட்டபோது,  அதிகாரம் என்பது நபிமார்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து. அது சோதனைக்குப் பின்னரே கிடைக்கப் பெறும். சோதிக்கப்பட்டால் பொறுமை வேண்டும். பொறுமை காத்தால் அதிகாரம் கிடைக்கும். அல்லாஹ்தஆலா இப்றாகீம் (அலை) அவர்களை சோதித்து விட்டு அதிகாரத்தை வழங்கியமையைப் பார்க்கவில்லையா?  அதுபோல் மூஸா (அலை),  அய்யூப் (அலை), சுலைமான் (அலை),  யூசுப் (அலை) அனைவரையும் சோதித்துவிட்டுத்தான் அதிகாரத்தை வழங்கினான். ஏனெனில் அதிகாரம் என்பது மிகச் சிறந்ததொரு அந்தஸ்த்து” என்று பதில் தந்தார்கள். இமாம் ஷாபியுடைய இந்த வார்த்தைகள் ஒரு உருவாக்கத்தின் பின்னர் தான் தலைமைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது எல்லா நபிமார்களுக்கும் பொதுவானது என்பதைக் கூறுகின்றன. அந்தவகையில் நாகரீகம் ஒன்று நிலைபெறுவதற்கு அதனை செயற்படுத்துபவர்கள் தயார்படுத்தப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

எனவே,  எல்லாக் காலத்திலும் தனிமனித உருவாக்கம் ஒன்றின் அவசியம் ஏன் வருகிறது என்பதற்கு உயர்ந்ததொரு மனித நாகரீகத்தை உலகில் கட்டியெழுப்புதல் என்ற நோக்கமும் மிகவும் பிரதானமான ஒன்றாகும்.

அல்லாஹ்வே போதுமானவன்.

News

Read Previous

முகிலினி – இரா. முருகவேள்

Read Next

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *