இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல் )

Vinkmag ad

ரமலான் சிந்தனைகள் – இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல் )

 

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

குர்ஆன் கூறுகிறது” முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்”.( 33:40) மேலும் “அல்லாஹ்வையும் விசுவாசியுங்கள்,தூதரையும் விசுவாசியுங்கள்”. என்றுக் குர்ஆன் கூறுகிறது.

நபி அவர்கள் இஸ்லாம் ஐந்து விசயங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது என்றுக் கூறினார்கள்.அதில் முதலாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை.முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என சாட்சியம் கூறுவது என்றார்கள்.

அல்லாஹ் மனித குலம் இவ்வுலகில் வாழ்வதற்கு வழிமுறைகளை வேதங்கள் மூலம் அளித்தான்.அவற்றை விளக்கி மக்களுக்கு முன்மாதிரிகளாக வாழ்ந்து காட்டி சென்றவர்கள் அவனால் மனிதர்களில் இருந்தே தேர்ந்தெடுக்கப் பட்ட நபிமார்கள். மனித குலம் அனைத்து நபி மார்கள் வழிகளையும் புறக்கணித்து,வேதங்களையும் திரித்து தங்கள் மனம் போன போக்கில் தடம் புரண்டுப் போன தருணம்தான் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி தூதராக,இறுதி நபியாக அனுப்பி வைத்தான்.குர்ஆன் அவர்கள் மீது இறக்கப் பட்டது.அதை விளக்கி அதன் நடை முறை விளக்கமாக அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.

இறுதி நபியாக தேர்ந்தெடுக்கப் பட்ட நபியவர்கள் இயற்கையிலே மிகத் தூய்மையான நற்குணங்கள் மூலம் அப்பணிக்கு தயார்ப் படுத்தப் பட்டு இருந்தார்கள்.அவர்கள் நபியாக  தேர்ந்தெடுக்கப் பட்டது அவர்களின் எதேச்சையாக நடந்த செயலல்ல.அல்லாஹ்வால் ஏற்கனவே முடிவு செய்யப் பட்டு அவர்கள் பிறக்கும் முன்னே வேதங்களில் மற்றும் முன்னர் வந்த இறைதூதர்கள் மூலம் முன்னறிவிப்பு செய்யப் பட்டு இருந்தது. அதனால் முழு உலகின் எதிர்ப் பார்ப்பும் அவர்களின் வருகை குறித்து இருந்தது.

குர்ஆன் யூத மற்றும் கிறிஸ்தவ சமூக மக்களை நோக்கி பேசுகிறது:  “அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்களிடத்திலுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் அவரைப் பற்றி எழுதப்பட்டவராக காண்கிறார்களே, அத்தகைய எழுதப் படிக்கத் தெரியாத (உம்மி) நபியான (நம்) தூதரை பின்பற்றுவார்கள். அவர்களை நன்மையான காரியங்களை (செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி வைத்து, கெட்டவற்றை அவர்கள் மீது விலக்கி வைப்பார். இன்னும் அவர்களை விட்டும், அவர்களுடைய சுமையையும், அவர்களின் மீதுள்ள விலங்குகளையும், (அல்லாஹ்வின் பல கடினமான கட்டளைகளை அவன் அனுமதி கொண்டு) அவர் நீக்கிவிடுவார். ஆகவே எவர்கள் அவர் மீது ஈமான் கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்ட அந்த (வேத) ஒளியை பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். ( 7 : 157 )

 

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் அனுப்பப் பட்ட இறைதூதர் ஈஸா (அலை ) முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்து அவர்கள் சமூகத்துக்கு வழங்கிய முன்னறிவிப்பைக் குர்ஆன் இதோ குறிப்பிடுகிறது

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.(குர்ஆன் 61:6)

 

பழைய ஏற்பாட்டில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்து இறைவன் முன்னறிவிப்பு செய்துள்ளான்.

இதோ சினாய் மலையில் மோசேவிடம் “உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், (அவர்) நான் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம் அதிகாரம் 18, வசனம்18) என்று இறைவன் பேசியது முஹம்மது அவர்களின் தூதுத்துவம் குறித்த முன்னறிவிப்பே ஆகும்.

இறைதூதர் மூஸா – மோசே (அலை)அவர்களும் முஹம்மது (ஸல் )இயற்கை பிறப்பு (தாய் தந்தை மூலம் ) இயற்கையான மரணம்,இருவரும் தங்கள் காலத்திலேயே மக்களால் அங்கீகரிக்கப் பட்டது.ஆட்சி செய்தது.திருமணம் செய்தது என பல ஒற்றுமைகள் உபாகமத்தின் முன்னறிவிப்பு முஹம்மது (ஸல்) அவர்களை குறித்தே வந்துள்ளது என கிஞ்சிற்றும் சந்தேகமின்றி நமக்குக் காட்டுகிறது.

இதோ இயேசு -ஈஸா (அலை )அவர்கள் தம்  மக்களிடம் பேசியதை புதிய ஏற்ப்பாடு பதிவு செய்துள்ளது

‘நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.’ ‘பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்’ .’சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்’ ‘ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கணிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்’ (மத்தேயு 21:43)

.ஹீப்ரு மொழியில் பாரக்கலீத் என்பதை தமிழில் தேற்றரவாளன்.என மொழி பெயர்த்துள்ளனர்.அரபியில் தேற்றரவாளன் என்பதை மொழிபெயர்த்தால் அஹ்மத் என்று வரும். அஹ்மத் என்பது முஹம்மது (ஸல்) அவர்களின் இன்னொரு பெயராகும் மேலே குறிப்பிடப் பட்ட குர்ஆன் வசனத்தில் ஈஸா – இயேசு (அலை) அவர்கள் தமக்குப் பின் வரக்கூடிய அஹ்மத் என்னும் இறைதூதர் குறித்து நான் சுபச் செய்தி சொல்ல வந்துள்ளேன் என்ற வசனமும் இங்கு சிந்திக்கத்தக்கது. மேலும்  தேற்றரவாளன் குறித்துப் பேசும் வசனங்கள் இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பண்புகள் குறித்த குர்ஆன் வசனங்களுக்கு அப்படியே பொருந்திப் போக காண்கிறோம்.

அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார் என்று இயேசு கூறியதை நினைத்துப் பாருங்கள்.இயேசு அவர்கள் விண்ணுக்கு ஏற்றப் பட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டைக் கடந்தும் இன்று அவர் பற்றி பேசும் கிறிஸ்தவர்கள் அல்லாத ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம் மட்டுமே. அவர்களுக்கு இயேசு குறித்து செய்திகள் தந்தது  நபி அவர்களும் அவர்களுக்கு அருளப் பட்ட குர்ஆனுமே ஆகும். நபி அவர்கள் தமது மனோ இச்சைப் படி பேச வில்லை..அவர்களுக்கு அறிவிக்கப் பட்ட இறை செய்தியை அன்றி அவர்கள் பேச வில்லை என்கிறது குர்ஆன் அவர்கள் இவ்வுலகில் தமக்குப் பின் நிகழக் கூடிய காரியங்கள் ,இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும்  மறுமை நிகழ்வுகள் குறித்து பேசியது நூற்றுக்கணக்கான நபி மொழிகளில் வந்துள்ளது.அவர்களுக்கு முன் பெரும்பாலான இறைதூதர்கள் பாலஸ்தீன பூமியில் யூத சமூகத்தில்தான் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.இறைவன் கடைசியில் அந்த சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்காமல் அரபு சமூகத்தில் இருந்து தேர்ந்தேடுத்தான்

உண்மையை உணரும் தருணம் உணர்ச்சி மேலிட கிறிஸ்தவ சகோதரர்கள் இப்படி சொல்வர் என குர்ஆன் கூறுகிறது “இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். குர்ஆன் (5.83)

முஹம்மது (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில் சிரியாவிற்கு அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுடன் சென்றிருந்த போது அங்கே கிறிஸ்தவ மடத்தில் இருந்த பஹீரா என்னும் பாதிரி அவர்களை மிகவும் பாதுகாத்து வைக்குமாறும் ஏனெனில் எதிரிகளால் அவருக்கு இடையூறு  ஏற்படலாம் இவர் பைபிள் கூறும் கடைசி தூதராக வரக் கூடும் என்றும் அவரது அங்க அடையாளங்கள் பைபிளில் முன்னறிவிப்பு செய்யப் பட்டுள்ள இறுதி தூதரின் அடையாளங்களுடன் ஒத்திருக்கிறது என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது .

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு குர்ஆனின் முதல் வசனம் ஹிரா குகையில்  ரமலான் மாதம் இறங்கியப் பின் அதை தம் மனைவி அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் கூற அவர் தனது உறவினரும் கிறிஸ்தவரும் வேதங்களை நன்கு அறிந்தவருமான வரகாஹ் பின் நவ்பலிடம் கூறினார்.நபி அவர்களிடம் அவர்கள் ஹிராவில் சந்தித்த வானவர் பற்றி விசாரித்து விட்டு இவர்தான் மூஸாவை சந்தித்த வானவர் (ஜிப்ரீல் )என்றுக் கூறி விட்டு அவர்கள் இறுதித் தூதர் என்பதை உறுதிப் படுத்தினர்.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திலேயே அவர்கள்  தோன்றிய காலம்,அவர்களது  இருப்பிடம் மற்றும் தோற்றம்  ஆகியவை குறித்து தெரிந்துக் கொண்டு பைபிளின் முன்னறிவிப்பு செய்யப் பட்ட இறுதித் தூதர் அவர்கள் என்பதை உணர்ந்து  அவர்களை நேரடியாக சந்தித்து முஸ்லிம்களான  கிறிஸ்தவர்களான பாரசீகத்தில் இருந்து வந்த சல்மான் பார்ஸி ரோமில் இருந்து வந்த சுஹைப் ரூமி (ரலி ) அவர்களை சந்திக்க வந்து வழியிலேயே இறந்து விட்ட அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி மேலும் பிரபல யூத அறிஞரான அப்துல்லாஹ் பின் சலாம் ஆகியோர் குறித்த சம்பவங்கள் சிந்திக்கத்தக்கது.

இந்து மத வேதங்களும் நபி  அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்கின்றன..இதோ ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச, ஆச்சார்யண ஸமன்வித, மஹாமத் இதிக்கியாத, சிஷ்ய சாகா ஸமன்வித, நிரூபஸ்சேவ மஹாதேவ, மருஸ்தல நிவாஸினம்

இதன் கருத்துச் சுருக்கம்: ஓர் அன்னிய (மிலேச்ச) நாட்டில் ஓர் முசாரியர் தம்முடைய சீடர்களுடன் வருவார். அவரது பெயர் (முஹம் மத்) மஹாமத், அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார். அவர்கள் “”கத்னா” (லிங்கசேதி) செய்வார்கள். குடுமி வைக்க மாட் டார்கள்; தாடி வைத்திருப்பார்கள்; மாமிசம் உண்பார்கள்; சப்தம் போட்டு (அதான்) அழைப் பார்கள் முஸலை(முஸல்மான்) என அழைக்கப் படுவார்கள். (பவிஷ்ய புராணம்:3:25:3)

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று மட்டுமல்ல அவர்களே  இறுதித் தூதர் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.அவர்களுக்குப் பின் இனி யாரும் தூதராக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப் படப் போவதில்லை.இது பரிசுத்தக் குர்ஆன் மூலமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமும்  உறுதிப்படுத்தப் படுத்தப்பட்ட விஷயமாகும். அவர் நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார்.என்ற குர்ஆனின் வசனமும்,எனக்குப் பின் நபி இல்லை முஹம்மது (ஸல்) அவர்களின் கூற்றும் நமக்கு அதை உறுதி செய்கின்றன.எனவே நபிக்குப் பின் தங்களை நபி என்று பிரகடனம் செய்யும் ஒவ்வொருவரும் காபிர் – நிராகரிப்பாளர் என்றே சொல்லப் படுவர் நபி

“அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்” என்ற குர்ஆனின் வசனம் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்து தெளிவாக இருக்க சிலர் அவர்களின் இறுதி தூதுத்துவத்தின் மீது சந்தேகமுற்று வழிகேடர்களை இறைதூதர்களாக விசுவாசம் கொண்டு வழி தவறி விட்டனர்.நபி அவர்களின் காலத்தில் இருந்து இந்த வழிகேடுகள் தொடர்கிறது.நாம் வாழும் சக காலத்தில் இந்தியாவில் தம்மை இறுதித் தூதர் என்று அறிவித்துக் கொண்ட  பஞ்சாபைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத், எகிப்தில் பிறந்து அமெரிக்காவில்  மறைந்த தம்மை இறுதி தூதர் என பிரகடனம் செய்துக் கொண்ட ரஷாத் கலீபா,ஈரானில் பிறந்து தன்னை  இறைத்  தூதர் என அறிவித்துக் கொண்ட பஹாவுல்லாஹ் ஆகிய இந்த மூன்று வழி கேடர்களின் பொய்யான தூதுத்துவ மாயையில் சிக்கி பல மக்கள் வழி தவறி விட்டனர்.தமிழ் நாட்டில் பெரும்பாலும் மிர்ஸா குலாம் அஹ்மதை பின் பற்றி அஹ்மதியா என்ற இயக்கம் மூலமும் ரஷாத் கலீபாவை பின் பற்றி அஹ்லுல் குர்ஆன் அல்லது சப்மிட்டர்ஸ் என்ற பெயரிலும்  செயல் பட்டு வரும் அமைப்புக்கள் மூலம் பணங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக பல மக்கள் இஸ்லாத்தில் இருந்து மத மாற்றம் செய்யப் பட்டு விட்டனர்.வருந்தத் தக்க விசயம் என்னவென்றால் இஸ்லாம் என்ற பெயரிலேயே இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றம் செய்யும் இச்சதிகள்  சத்தமில்லாமல் நடந்துக் கொண்டிருக்கின்றன.எனவே முஸ்லிம்களும் புதிதாக இஸ்லாம் மார்க்கத்தை தழுவ காத்திருக்கும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் இந்த போலி மற்றும் பொய்யான இறைதூதர்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

News

Read Previous

உலகெங்கும் முஸ்லிம்கள் எவ்வளவு நேரம் நோன்பு நோற்கின்றனர் ?

Read Next

ஜுலை 9, ஜித்தாவில் மெப்கோ அமைப்பு நடத்தும் இஃப்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *