இஃப்தார் பார்டி – சிறுகதை

Vinkmag ad

இஃப்தார் பார்டி – சிறுகதை

ஒரு பண்டிகை நாள் நெருங்குகிறதென்றால் அதற்கான எதிர்ப்பார்ப்புகளிலும் திட்டமிடுதலிலும் சிறுவா்கள் பெரியவா்களை விடகெட்டிக்காரா்களே…

அடித்தட்டு துவங்கி மேல்மட்ட பிள்ளைகள் வரை அவரவரர் தம் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றவாறு அவா்களின் கனவுகள்வேறுபட்டிருக்கின்றது.

ரஹீமா பெற்ற இரட்டையா்களும் தங்களுக்கான கனவுகளில் லயிப்புடன் ஈடுபட்டிருந்தனா். இன்னும் ஒரு வாரத்தில் ரமலான்துவங்குகிறது. 30 நாட்கள் நோன்புக்கும் பத்து காசு சம்பாதிக்கிறார் போல் ஏதாவது செய்திட வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்னபெருத்த திட்டங்களெல்லாம் இல்லை. ஆனால் ஏதோ ஒன்றை கட்டாயம் செய்திடனும் என்பது அவா்களின் எண்ண ஓட்டமாயிருந்தது.

சிறுவா்கள் இருவரும் கைக்குழந்தையாய் இருக்கும் காலத்தில் அவா்களுடைய தகப்பனார் வெளிநாடு சென்றதாய் ரஹீமா சொல்லிவைத்திருக்கிறாள்.  மற்றபடி அந்த ஆடவனை பற்றிய உண்மையான விவரங்கள் யாவும் அவளுக்கும் படைத்தவனுக்குமானது ,  அதைபாலகன்களிருவரும் அறிந்திருக்க வாய்ப்புகளில்லை தான். சென்றவருட நோன்பு காலத்தில் பைசல் மாமா கடையில் உதவியாக நிற்ககூப்பிட்டிருந்தார். இரைட்டையா்கள் ஹசன், ஹுசைனும் ஒப்புக்கொண்டு சமோசா, பஜ்ஜி பலகாரங்களை பார்சல் செய்துகொடுத்துக்கொண்டு பைசல் மாமா கடையில் வேலை செய்தார்கள். அந்த பெருநாளுக்கு இருவருக்கும் புதுத்துணி வாங்குமளவிற்குசம்பளம் கொடுத்திருந்தாா் பைசல். இந்த வருடம் அதே போல் அல்லது அதை விட சிறப்பான வேலை ஏதாவது செய்ய வேண்டும் என்பதுஹசனின் கனவு.

 பெரிய கனவெல்லாம் ஒன்றுமில்லை போன வருடம் அவா்களிருவருக்கும் துணி எடுக்கும் அளவுக்கு காசு கிடைத்திருந்தது. இந்த வருடம்அம்மாவுக்கும் சோ்த்து ஒரு புடவை எடுத்துக்கொடுக்கனும் என்பது சின்னவா்களின் ஆசை. அவளும் வெகுநாட்களாக நல்லபுடவை ஒன்றுகூட வாங்கி அணிந்திடவில்லை. அக்கம்பக்கத்தார்களின் அலட்சியப்படுத்தும் ரேசன் புடவைகளை வாங்கி சேகரித்து வைத்துக்கொள்வாள்.விவரம் தெரிந்த நாள் முதல் பீடி சுற்றுவது ஒன்று தான் அவள் அறிந்திருந்த வாழ்வாதாரம். எப்பொழுதோ அத்தா இருக்கும் பொழுது வாங்கிகொடுத்ததாக நான்கு நல்ல புடவைகள் வைத்திருந்தாள். நல்ல நாள் பண்டிகை நாட்களுக்கு, விசேச வீடுகளுக்கு செல்லும்போது மட்டும்பத்திரப்படுத்தப்பட்ட புடவைகளில் இம்மா மிக அழகாக காட்சியளிப்பாள்.   ஹுசைனுக்கு தினமும் அம்மா இது மாதிரி அழகாக உடைஉடுத்த வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அவள் அன்றாடம்  கிழிசல்களடந்த ரேசன் புடவைகளில் சாயமிழந்த புகைப்படம் போன்றேகாட்சியளிப்பாள்.

நோன்பு முப்பதுக்கும் பைசல் மாமாகிட்ட சமோசா, வடை, பஜ்ஜி எல்லாம் மொத்தமாக வாங்கி ஆளுக்கொரு பள்ளிவாசல் நுழைவுகளில்நின்று விற்பனை செய்யலாம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தான் வேலை இருக்கும் போன வரும் சேகுசேன் அப்பாபலகாரங்கள் விற்றுக“கொண்டிருந்தார்  இப்போது அவரின் மவுத்துக்கு பிறகு ரெம்ப நாளாக அங்கு வேறு எவரும் கடை விரித்திடவில்லை.என்றான் ஹுசைன்.

யோசனை நல்லாதானிருக்கு, நமக்கென்றால் மாமாவும் காசு முன்னபின்ன வாங்கிக்கொள்வாா். எல்லாம் சரியா இருந்தா இந்த பெருநாள்சூப்பரா இருக்கும் என்றான் ஹசன்.

நோன்புக்கு முதல் நாள் மாலையில் ஊரெல்லாம் திருநாளாக அல்லோலப்பட ரஹீமா பீடி தட்டோடு மன்றாடிக்கொண்டிருந்தாள்.ஹுசைன் சில நேரங்களில் சொல்லுவான் ” ஏம்மா பீடி சுற்றுனா நோய் வருமாம், இந்த புகையிலை தூள் ரெம்ப கெடுதினு எங்க சயின்ஸ்டீச்சா் சொன்னாங்க என்பான்” ஆமா கெடுதி தான் என்று உப்புக்கு சப்பாணயாக பதிலுரைப்பாள். இரட்டை சிறுவா்கள் இருவரும்தங்களுடைய உண்டியல் காசை கொட்டி எண்ணத்துவங்கினா்.மொத்தமாக  நானூறு ரூபாய் இருந்தது,

அட இருக்கிற காசுக்கு முதல் நாள் பலகாரங்களை வாங்குவோமுடா. ஒத்த ரூவா கம்மி பன்னி மாமா கிட்ட வாங்கிட்டு அந்த ஒரு ரூபாலாபத்துல வித்துருவோம். அடுத்த அடுத்த நாள் அதிகமா வாங்கி வித்துடலாம் என்றான் ஹசன்.

நோன்பின் முதல் நாளிலிருந்து கூட்டாளியிடமிருந்து வங்கிய சைக்கிளில் பலகாரங்கள் அடுக்கிய டிரேயை பொருத்தி வைத்துக்கொண்டுஆளுக்கொரு பள்ளிவாசல் நுழைவுகளில் ஆஜரானார்கள்.அல்ஹம்துலில்லாஹ்னு வியாபாரம் நடந்தது கிரக்கமும் தளா்வும்எல்லாருக்குமானது தான். எனினும் பெரியவாகள் பலர் கூட்டமாக கூடும்வேளையில் சிறிய மனிதனவன் பொருமையும் அனுசரிப்புடனும்மனிதர்களை அணுகுவது அவ்வளவு சுலபாக இருந்திடவில்லை . விற்பனை முடியும் தருணத்தில்  தங்களுக்கென்று நான்கைந்துபண்டங்களை எடுத்து வைத்துவிட்டு வியாபாரத்தை முழுமைப்படுத்திக்கொண்டார்கள்.

நோன்பின் இரண்டாவது வாரத்தில் மாலைப்பொழுதில் வியாபாரத்துக்கு போன 20 வது நிமிடத்திலே ஹுசைன் வியாபாரத்தைமுடித்துக்கொண்டு  ஹுசைன் தன் சகோதரன் இருக்குமிடத்திற்கு வந்தான்.

ஏன்டா இவ்வளவு சீக்கிரம் வித்திட்டியா, என்று வியப்புடன் தன் சகோதரனிடம் வினவினான் ஹசன்.

ஆமாம், அந்த பள்ளியை ஒட்டியிருக்கும் கல்யாண மண்டபத்தில் இன்னிக்கு ஏதோ அரசியல் கட்சி நிா்வாகி வருகிறாராம். இப்தார் பார்டி-னுநிறைய பேர் போட்டா எல்லாம் போட்டு  எம்மாம்பெரிய பிளக்ஸ் இருந்தது தெரியுமா, அங்க இருந்த அண்ணன்மாருங்க கேக் , பப்ஸ், ஜுஸ்என்று ஏராளமான பண்டம் பலகாரங்களை வாங்கி வச்சிருந்தாங்க , நீ பார்க்கலியே வாயை பொளந்திருப்ப, கடைசிய என்கிட்ட வந்து 200சமோசாவையும் எங்க கிட்ட கொடுத்திரு மொத்தமா காசு வாங்கிக்கனு சொன்னாங்க. ரெம்ப சந்தோசம்னு கொடுத்துட்டேன்.மேற்கொண்டும் வேணும் என்றாங்க. அதான் உன்னை கூப்பிட வந்தேன். வா சீக்கிரம் என்று ஹசனையும் அழைத்துக்கொண்டு போனான்.

அந்த பள்ளியின் நுழைவில் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த சாந்தமான சூழ்நிலை குலைக்கப்பட்டிருந்தது, காதுகளை கிழிக்கும் தலைவா்வாழ்க. கோசங்களும் கொடிகளும் சூழ பெரிய காரில் வந்த அந்த வெள்ளை மனிதன் மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தார்.

கூட்டத்திற்கு அப்பால் தள்ளி இரண்டு வாலிபா்கள் பலகாரம் விற்கின்ற ஹுசைனுக்காக காத்திருந்தனா். அட என்னடா இவ்வளவு நேரம்.நாங்க எதிர்பார்த்தத விட கூட்டம் அதிகமா வரும் போல் தெரியுது. என்று ஹசன் கொண்டு வந்த பலகாரங்களையும் மொத்தமாகபெற்றுக்கொண்டாா்கள். அதன் பின் வாலிபா்களில் ஒருவன் சிறுவா்களை நோக்கி அடேய் தம்பிகளா எங்களிடத்தில் பாரிமாறுவதற்கு ஆள்குறையுது , ரெண்டு பேரும் வாரிங்களா ஆளுக்கு அம்பது ரூபா வாங்கிங்கடா என்றான். சின்னவா்களுக்கு சந்தோசம்  தான், சைக்கிளைஓரமாக நிறுத்திவிட்டு  இப்தார் நிகழ்ச்சியில்  பறிமாற தொடங்கினா்.

அந்த இப்தார் பார்டிக்கு சிறப்பு விருந்தினராக காரில் வந்திறங்கிய வெள்ளை மனிதன் உட்பட பிரபல்யமானதொரு சினிமா கதாநாயகனுடன்சோ்த்து நான்கு பேர்  மேடையில் முதல் வரிசையில் வீற்றிருந்தனா்.

ஏன் அண்ணே இவரும் நோன்பு வச்சிருக்காரா என்று மாற்றுமத அரசியல் முக்கியப்புள்ளியான அந்த வெள்ளை மனிதனையும் சினிமாகாரரையும்  குறிப்பிட்டு கேட்டான்   ஹு சைன் வெள்ளந்தியாக.

அடேய் நோன்பு திறப்பவரெல்லாம் நோன்பாளியாக இருக்க வேண்டியதில்ல. வாயை குறைச்சிட்டு வேலையை பாருங்க. எல்லாருக்கும்பரிமாறிட்டு நீங்களும் ஆளுக்கொரு  பிளேட் எடுத்துட்டு நோன்பு திறக்க உட்காந்திருங்க என்றான்  அவா்களை அழைத்து வந்த வாலிபன்.

இப்தார் வேளையில் நோன்பு திறந்து சிற்றுணவு உட்கொண்ட பின் மேடையில் இருந்த அந்த  வெள்ளை மனிதர்  பேச துவங்கினார்

சில நயவஞ்சகா்களின் சூழ்ச்சியால ஆட்சி கயவா்களின் கைகளில் போய்விட்டது. நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தசமுதாயத்திற்கு அதை செய்திருப்பேன். இதை செய்திருப்பேன் என்று முகதத்திலே நவரசங்களையும் கொட்டி ஓர் சிற்றுரைஆற்றிமுடித்தார்.

சிறிது நேரத்தில் தொழுகையை முடித்துக்கொண்டு அந்த கூட்டம் கலையத்தொடங்கியது.

இப்தார் நிகழ்வில் ஏகப்பட்ட பலகாரங்கள் மீந்து போய் சிதறடிக்கப்பட்டு  கிடந்தது. சில பெரிய மனிதர்களின் தட்டில் வைக்கப்பட்டஉணவுப்பொருட்கள் அப்படியே இருந்தது. ஆகாத சொந்தக்காரன் வீட்டுல முகத்தோச்சனைக்கு சாப்பிடறது போல் பிய்த்துதின்றிருப்பார்கள் போலும் என்று கருதினான் ஹசன்.  அந்த வாலிபா்களுக்கு உதவியாய் இருந்து மண்டபத்தை சுத்தம் செய்துவேலைகளை முடித்தனா். கடைசியாய் அந்த வாலிபன் இரட்டை சிறுவா்களை அழைத்து, பேசிய படி ஆளுக்கு அம்பது ரூபாய் தொகையைகொடுத்து நிறைய பலகாரங்கள் கிடக்கு, ஆளுக்கு கொஞ்சமா எடுத்து போங்க என்று கேக், வாழைப்பழம், சமோசாக்களால் நிரம்பிய பாலீதீன்பையை ஹுசைனிடம் கொடுத்தான்.

வாசலில் இரண்டு பெரியவா்கள் பார்த்தியா , நம்ம தலைவா் தங்கமானவரு. அவரு மட்டும் ஆட்சிக்கு வந்திட்டா இடஒதுக்கீடு என்ன !வேலைவாய்ப்பு என்ன! எல்லாம் கேட்காமல் கிடைக்கும் பாத்துக்க என்று விறுவிறுப்பாக பேசிக்கொண்டனா்.

இது போன்ற இப்தார் பார்டி அடிக்கடி நடக்கனுமடா, என்று பேசிக்கொண்டு நடையை கட்டினா் அந்த இரட்டைச் சிறுவா்கள்.

எஸ்.ஹஸீனா பேகம்.

News

Read Previous

கவிதை

Read Next

சூடான தண்ணீர்

Leave a Reply

Your email address will not be published.