அறிவியலின் பின் அணிவகுப்போம்

Vinkmag ad

19 Arivial-PVஅறிவியலின் பின் அணிவகுப்போம்

நூலை அறிமுகம் செய்பவர் பேரா.பெ.விஜயகுமார்….

————————————————————————————–

நூல் அறிமுகம்

அறிவியலின் பின் அணிவகுப்போம்

ஆசிரியர்: பேரா.கே.ராஜு

வெளியீடு : மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர், சென்னை-17.

(78717 80923 / 70109 84247 / 94437 22311)   விலை: ரூ.150

பேராசிரியர் ராஜு தமிழகத்தின் முக்கியமான கல்லூரி ஆசிரியர் சங்கமான மூட்டா பேரியக்கத்தை தலைமையேற்று நடத்திச் சென்ற தலைவர்களுள் ஒருவர். மூட்டா ராஜு என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி இயற்பியல் துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியாற்றி அறிவார்ந்த அறிவியல் மாணவர்களை உருவாக்கியவர். பணி ஓய்வுக்குப் பின் `புதிய ஆசிரியன் எனும் மாத இதழின் ஆசிரியராக இருப்பதுடன் தீக்கதிர் நாளிதழில் `அறிவியல் கதிர்” என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகள் படைத்து அறிவியல் புதிர்களை சாதாரண வாசகர்களுக்கு எடுத்துச் செல்லும் உன்னத பணியைச் செய்து வந்தவர். கட்டுரைகளை ஒரு சேர படிப்பதற்கு ஏதுவாக நூல் வடிவிலும் கொண்டு வருகிறார். அந்த வகையில் “அறிவியலின் பின் அணிவகுப்போம்” நூல் அவரின் ஏழாவது தொகுப்பாகும்.

ஜே.டி.பெர்னால், ஹால்டேன் போன்ற அறிவியலாளர்கள் வழியில் பேராசிரியர் ராஜுவும் அறிவியல் என்பது ஆய்வரங்கத்தில் பூட்டி வைக்கப்படும் காட்சிப் பொருள் அல்ல, மானுடர்கள் அனைவரும்  புரிந்துகொள்ளும் வண்ணம் அறிவியல் உண்மைகளை எளிமையான மொழியில் விளக்கிட வேண்டும் என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவர். அதிலும் குறிப்பாக மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து போயிருக்கும் இந்தியச் சமூகத்தை இருளிலிருந்து மீட்டெடுக்க அறிவியல் ஒளி பாய்ச்சிட வேண்டிய பொறுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்துபவர். “அறிவியலின் பின் அணிவகுப்போம்” என்ற தலைப்பே அவரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்நூலில் படிப்பதற்கு எளிமையானதாகவும், இனிமையானதாகவுமான 51 கட்டுரைகள் உள்ளன. இயற்பியல், வானவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல்,  என்று அனைத்து அறிவியல் பற்றிய செய்திகளும் உள்ளன. அறிவியல் போராளி பார்கவா, விண்ணை அளந்த விஞ்ஞானி யு.ஆர்.ராவ், அறிவியலைச் சாமானியர்களிடம் கொண்டு சென்ற விஞ்ஞானி யஷ்பால், இந்தியாவில் அறிவியல் விழிப்புணர்விற்கு வித்திட்ட ஸ்வர்ணகுமாரி தேவி போன்ற அறிவியலாளர்கள் ஆற்றிய பங்கினை விளக்கும் கட்டுரைகளும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் நடத்தப்படும் அறிவியலுக்கான அணிவகுப்பு குறித்த இரண்டு கட்டுரைகள் காத்திரமானவை. எதற்கும் அறிவியல் அடிப்படையிலான நிரூபணம் தேவையில்லை என்றாகிவிட்ட இந்தியாவில் அறிவியல் பேரணியை என்றோ ஒரு நாள் நடத்தினால் மட்டும் போதாது. அறிவியலுக்குரிய சிம்மாசனத்தைத் தர நாம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்ற ஆசிரியரின் கூற்று இன்றைய இந்திய அறிவியலுக்கு எதிரான சூழலை பளிச்சென்று விளக்குகிறது.

நிலத்திலும், ஆழ்கடலிலும் வாழும் உயிரினங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தை இரு கட்டுரைகளில் விவரித்துள்ளார். ஒருவரது உடல் நலனையும், மன நலனையும் பராமரிப்பதற்கு இசையைப் பயன்படுத்த முடியும் என்ற அறிவியல் உண்மை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. முத்தாய்ப்பாக வந்துள்ள “தண்ணீர் மனிதர்” ராஜேந்திர சிங் பற்றிய 51-வது கட்டுரை நீர் வளத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் அவர் கடைப்பிடித்த வழிமுறைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முத்தான யோசனைகள் அதில் பொதிந்துள்ளன.

நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலக மேலாளர் பிராபகர், இந்நூல் வாசிப்போர் மனதைக் கவர்வதோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்வில் அவர்கள் காணும் ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியல் பார்வையுடன் அணுக வகைசெய்யும் என்ற தன்னுடைய நம்பிக்கையை அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளது மிகச் சரியானது. மதுரை திருமாறன் வெளியீட்டகம் நூலினை பிழைகளின்றியும். கட்டுரைகளுக்கேற்ற பொருத்தமான படங்களுடனும் வெளியிட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.

பேரா.பெ.விஜயகுமார்

News

Read Previous

நல்ல எண்ணங்களை மனதில்…..

Read Next

கீழடியைத் தொடர்ந்து கையில் எடுக்கப்படுமா ஆதிச்சநல்லூர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *