அண்ணலாரின் அகிம்சை வழி !

Vinkmag ad

Scan (1) 

( கீழை ஜஹாங்கீர் அரூஸி )

 இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ! இறைத்தூதரும் இன்முகத்தூதரே ! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் உலகின் முதல் அகிம்சை வாதி என்பதற்கு இஸ்லாத்தின் வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையான தகவல் தான் “ஹுதைபியா உடன் படிக்கை” நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு ஹிஜ்ரி 6 ல் முதன் முதலாக உம்ரா செய்யும் நோக்கோடு 1400 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி புறப்பட்டனர். இந்தப் பயணம் மக்காவை கைப்பற்றுவதற்காக அல்ல முஸ்லிம்களின் உரிமைகளை பெறுவதற்காகத் தான். இது மக்காவின் மக்களுக்கும் தெரியும். ஆனால் முஸ்லிம்களை உம்ரா செய்ய அனுமதித்தால் சுற்று வட்டார அரபு மக்கள் தங்களை துச்சமாக எண்ணி விடுவர் என்று மக்கத்து குறைஷிகளின் தலைவர்கள் அஞ்சினர். இதனால் ஸஹ்லுப்னு அம்ரு என்ற குறைஷித் தலைவரை (ஸல்) அவர்களிடம்  ஓர் அமைதி ஒப்பந்தம் செய்து வருமாறு அனுப்பினார்கள்.

 

ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் :-

1. இந்த ஆண்டு உம்ரா செய்யாமல் திரும்பிடனும்.

2. அடுத்த ஆண்டு ஆயுதம் இல்லாமல் மக்கா வந்து மூன்று நாட்கள் தங்கி உம்ரா செய்து விட்டு திரும்பிடனும்.

3. மக்காவிலிருந்து எங்கள் சமுதாயத்தில் எவரேனும் மதீனா வந்தால் அவரை மக்காவிற்கு திருப்பி அனுப்பி விடுவது.

4. ஆனால் மதீனாவிலிருந்து எந்த முஸ்லிமாவது மனம் மாறி மக்கா வந்து விட்டால் அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

5. அக்கம் பக்கத்து கோத்திரத்தார் அவரவர் விருப்பப்படி யாருடனும் சேர்ந்து கொள்ளலாம்.

6. இவ்வொப்பந்தம் 10 வருடம் அமுலில் இருக்கும் இக்கால கட்டத்தில் முஸ்லிம்களும் குறைஷிகளும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது. என்பன முக்கிய ஷரத்துகளாகும்.

 

இவ்வொப்பந்தத்தில் முஸ்லிம்களின் சார்பில் நபித்தோழர்கள் அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி), ஸஃது (ரலி) போன்றவர்கள் கையெழுத்திட்டனர். மக்கத்து குறைஷியர்களின் சார்பில் ஸஹ்லுப்னு அம்ருடன் சிலர் கையெழுத்திட்டனர். இந்த ஷரத்துகளில் அநேகமாக எல்லாமே முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராகவே இருந்தன. எனினும் போரிட்டு இரு தரப்பிலும் பல உயிர்களை பலி கொடுத்து ரத்தம் சிந்தி தான் தங்கள் உரிமையை பெற வேண்டும் என்ற நிலையை உருவாக்க விரும்பாத (ஸல்) அவர்கள் அமைதி ஒப்பந்தத்தை எழுதுமாறு அலி (ரலி) அவர்களை பணித்தார்கள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று அலி (ரலி) எழுதத் துவங்கினார்கள். ஸஹ்லு குறுக்கிட்டார் ரஹ்மான், ரஹீம் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது ! நம் வழக்கப்படி பிஸ்மிக அல்லாஹும்ம என்று தான் எழுத வேண்டும் என்று கூறினார். அவர் சொல்வது போன்றே எழுதுமாறு (ஸல்) அவர்கள் பணித்தார்கள். அவ்வாறே திருத்தி எழுதப்பட்டது இது முகம்மது ரசூலுல்லாஹ்வும், ஸஹ்லுப்னு அம்ரும் செய்து கொள்ளும் ஒப்பந்தம் என அலி (ரலி) அவர்கள் எழுதினார்கள் ஸஹ்லு மீண்டும் குறுக்கிட்டு நீங்கள் அல்லாஹ்வின் ரசூல் என்பதை நான் ஒப்புக் கொள்பவனாக இருந்தால் உங்களை எதிர்த்து களம் கண்டிருக்க தேவை இல்லை. நீங்கள் இப்போது கஃபாவுக்கு செல்வதையும் தடுக்க வேண்டியதில்லையே ! எனவே தங்கள் பெயரையும் தங்கள் தந்தையின் பெயரையும் தான் எழுத வேண்டும் என்றார்.

 

எனவே முந்தியதை அழித்து விட்டு ஸஹ்லு சொல்வது போல் எழுதுமாறு (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலி (ரலி) அவர்கள் (ஸல்) பெயரை அழிக்க மறுத்து விட்டதால் (ஸல்) அவர்கள் தமது கையால் அழித்து விட்டு முகம்மது பின் அப்துல்லாஹ் என எழுத வைத்தனர். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் தலைமையிலான முஸ்லிம்கள் நினைத்திருந்தால் மக்காவை எளிதில் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் யுத்தத்தை விரும்பாமல் அமைதி எனும் அகிம்சை வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பலஹீனமானவர்களுக்கு பலசாலிகள் விட்டுக் கொடுத்த இந்த சம்பவம் உலக அரசியல் வரலாற்றில் ஓர் அதிசய நிகழ்ச்சியாகும் ! குறிப்பிட்ட அந்த ஹிஜ்ரி    6 –ல் உம்ரா செய்ய முடியவில்லையே என்ற வேதனையுடன் முஸ்லிம்கள் மக்கா திரும்பினர். வழியில் முஸ்லிம்களில் சிலர் இந்த அமைதி ஒப்பந்தம் நமக்கு ஏற்பட்ட பெரிய தோல்வி என்று விமர்சனம் செய்தனர். இவ்வொப்பந்தத்தால் முஸ்லிம்களின் உயிரணைய உரிமை பிரச்சினையான இவ்வருட உம்ராவை இழந்து விட்டோம் என்றும் பேசிக் கொண்டனர். ஆனால் இந்த அகிம்சை ஒப்பந்தம் மகத்தான வெற்றி என்று அல்லாஹ் உறுதியாக சொல்கிறான் !

 

நபியே ! நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியாக வெற்றி வழங்கினோம். உம்முடைய பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் அல்லாஹ் உமக்கு மன்னிப்பதற்காகவும், தன்னுடைய அருட்கொடையை உம் மீது அவன் நிரப்பமாக்குவதற்காகவும், நேரான வழியில் உம்மை நடத்துவதற்காகவும் இன்னும் வலிமை மிக்க ஓர் உதவியாக அல்லாஹ் உமக்கு உதவியளிப்பதற்காகவும் இவ்வாறு வெற்றியளித்தான். (சூரா ஃபதஹ் – வசனம் 1,2,3)

 

முஸ்லிம்களுக்கு உறுதி அளித்தபடியே அல்லாஹ் ஹிஜ்ரி 8 – ம் ஆண்டில் மக்கா மீது வெற்றியை அருளினான். ஒப்பந்தம் நடைபெற்ற இரண்டு ஆண்டிற்குள்ளேயே அவ்வொப்பந்தத்தை ரத்து செய்து விடுமாறு (ஸல்) அவர்களிடம் மக்கத்து குறைஷியர்கள் மன்றாடினர். இதற்கு முக்கிய காரணம் குறைஷியர் தலைவர்களில் ஒருவரான முஸாபிர் என்பவரின் மனைவி சபீஅத் பின்தி ஹாரித் என்ற பெண் (ஸல்) அவர்கள் மதீனா திரும்புவதற்குள் முஸ்லிமாகி மதீனா வந்து விட்டார். ஹுதைபியா ஒப்பந்தப்படி இப்பெண் மக்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் போது வழியில் தப்பி சென்று தலைமறைவாகி குறைஷியர்களுக்கெதிராக போராட ஆரம்பித்தார். இப்பெண்ணை பின்பற்றி ஏராளமான மக்கத்து குறைஷியர்கள் கூட்டம் கூட்டமாக மக்காவை விட்டு வெளியேறி (ஸல்) அவர்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். இந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாத மக்கத்து தலைவர்கள் முஸ்லிம்களுக்கெதிரான ஹுதைபியா உடன்படிக்கையை ரத்து செய்து விடுமாறு நபி (ஸல்) அவர்களிடம் கோரினர். சுப்ஹானல்லாஹ் … பிற்காலத்தில் வீரப்பெண்மணி சபீஅத் பின்தி ஹாரித்தை நபித்தோழர் உமர் பாரூக் (ரலி) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயுதம் ஏந்தாத அகிம்சை வழிக்கு கிடைத்த இவ்வெற்றி இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். தம்முடைய ஆரவாரம், ஆர்ப்பாட்டமில்லாத அகிம்சை வழி போதனையை  தான் தமது சமுதாயத்திற்கும் போதித்தார்கள். முஸ்லிம்களுக்கிடையே ஐந்து விஷயங்கள் பேணுதலுக்குரியவை என்று (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

1. ஒருவர் சலாம் உரைத்தால் அவருக்கு பதில் சொல்வது.

2. நோயுற்றவரை உடல் நலம் விசாரிப்பது.

3. மரணித்தவரை நல்லடக்கம் செய்வதற்காக ஜனாஸாவை பின் பற்றி செல்வது.

4. விருந்துக்கு அழைத்தால் மறுப்பு சொல்லாமல் விருந்தில் கலந்து கொள்வது.

5. தும்மியவருக்கு து ஆ செய்வது ! ( அறிவிப்பாளர் : அபுஹுரைரா (ரலி), புகாரி)

 

 

இந்த ஐந்து விஷயங்களும் மனித குலத்திற்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கிடையில் பேணுதலாக பின்பற்றப்படுமானால் நமக்குள் பிளவுகளோ, கருத்து வேறுபாடுகளோ, கோஷ்டி பூசல்களோ ஏற்பட வாய்ப்புகள் ஏது? நபி (ஸல்) அவர்கள் பேணி பாதுகாத்த அகிம்சை எனும் அமைதி வழியை நாமும் பின்பற்றுவோம் இழந்து போன உரிமைகளை இறைவனருளால் வெல்வோம் !

 

அல்ஹம்துலில்லாஹ் !

News

Read Previous

மகளிர் பக்கம் : வெயில் காயுதே !

Read Next

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *