புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்

Vinkmag ad
2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை..இப்போதும் பொருந்தி வருகிறது..

புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்

பேராசிரியர் கே. ராஜு

2018 மார்ச் 18 அன்று ஆங்கில இந்து நாளிதழில் அதிதி வீணா, விக்ரம் சோனி ஆகிய இரு சூழலியலாளர்கள் ஆற்றங்கரைகளை புதிய குடிநீர் ஆதாரங்களாக நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றனர். உள்ளூரில் எப்போதுமே கிடைக்கக்கூடிய அற்புதமான நீராதாரமாக ஆற்றங்கரைகள் விளங்க முடியும். 2016-ம் ஆண்டில் தில்லி குடிநீர் வாரியம் தொடங்கிய `ஆற்றங்கரைத் திட்டம் சார்பாக நாங்கள் நடத்திய ஆய்வு இதைத் தெளிவாக்கியிருக்கிறது. யமுனை நதிக்கரையில் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு கரைப் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை ஒரு நபருக்கு தினசரி 150 லிட்டர் என்ற கணக்கில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு எங்களால் விநியோகிக்க முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆறுகளில் பாயும் தண்ணீரினாலும் கரைகளில் மணல் சேருவதாலும் ஆற்றங்கரைகள் உருவாகின்றன. இந்த மணல் கரைகள் தனித்தன்மை வாய்ந்த நீர்நிலைகளாக காலப்போக்கில் உருமாறுகின்றன. அவற்றிலிருந்து நாம் எடுக்கும் தண்ணீரை அருகில் இருக்கும் நீர் உடனுக்குடன் ஈடுகட்டிவிடும். எனவே சேமிப்பு குறையாது. இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளின் கரைகளில் அந்த நதிகளில் ஓடும் நீரைப்போல 20 மடங்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழைப்பொழிவினாலும் வெள்ளப்பெருக்கினாலும் ஆற்றங்கரை நீர்நிலைகளில் தண்ணீர் சேர்ந்து கொண்டேயிருக்கிறது. தூய்மையாகவும் இருக்கிறது. ஆற்றங்கரைத் தண்ணீரை பாதுகாத்து பயன்படுத்தி வருவோமானால், அது ஒவ்வோர் ஆண்டும் கடந்த ஆண்டில் எந்தளவுக்கு ஆரோக்கியமான நிலையில் இருந்ததோ அதே அளவுக்கு ஆரோக்கியமான நிலையில் நீடித்த நீர்தரும் சுனையாக இருக்கும். ஆனால் ஒரு எச்சரிக்கை: எந்தளவுக்கு நீர் சுரக்கிறதோ அதைவிடக் கூடுதலாக உறிஞ்சி எடுத்தோமானால் அது பாழ்பட்டு நாளடைவில் விலைமதிப்பற்ற வளத்தை இழக்கும்படி ஆகிவிடும்.

நகரங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் ஆகியவற்றுக்காக வகைதொகையின்றி ஆற்றுநீரை உறிஞ்சி எடுப்பதால் இன்று ஆறுகளில் ஓடும் நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதோடு சாக்கடை நீரும் ஆலைக்கழிவு நீரும் ஆறுகளில் விடப்படுவதால் ஆற்றுநீர் மிகவும் மாசுபட்டுப் போயிருக்கிறது.  சேமி – பயன்படுத்து என்ற ஆற்றங்கரை நீர்த்திட்டத்தின் மூலம் கரையோரங்களில் உள்ள நகரங்களுக்கு பற்றாக்குறைக் காலங்களிலும் தண்ணீரைத் தரமுடியும்.  இது ஒரு சமூக-பொருளாதார-சுற்றுச்சூழலுக்கு இசைவானதொரு திட்டம். அதோடு விவசாயிகளுக்கு ஒரு உத்தரவாதமான வருமானத்தையும் இத்திட்டம் தரக்கூடியது. ஆரோக்கியமான நிலைக்கு ஆறுகளை  மீட்டெடுக்கவும் உதவக் கூடிய திட்டம் இது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி இடையே 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடும் தாமிரபரணி ஆற்றை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இது நீராதாரத்தைத் தருகிறது. குடியிருப்புகள் உள்ள கரைப்பகுதிகளைக் கழித்துவிட்டால், சுமார் 75 கிலோமீட்டர் தொலைவுக்கு கரைகள் கிடைக்கின்றன. ஆற்றின் இரு கரைகளிலும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தண்ணீர் சேமிப்புப் பகுதியாக மாற்றிவிட முடியும். இந்த ஆற்றங்கரைத் திட்டத்தை அமுல்செய்யும் பொறுப்பை விவசாயிகளிடம் தரலாம். கரையோரம் உள்ள விவசாய நிலங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடலாம். ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு குத்தகைப் பணமாக ரூ. 30,000 தரலாம். இதனால் ஆண்டுக்கு ரூ.112 கோடி மட்டுமே அரசுக்குச் செலவாகும். கிடைக்கும் தண்ணீரை விற்பதில் கிடைக்கும் தொகை இதைவிடக் கூடுதலாகவே இருக்கும். குத்தகைக்கு எடுத்த நிலத்தை உணவுப் பொருள் விளையும் பகுதியாக விவசாயிகள் மாற்றிக் கொள்ளலாம். தண்ணீர் அதிகம் தேவைப்படாத பழம் அல்லது கொட்டை விளையும் மரங்கள் அல்லது தாவரங்களை அவர்கள் வளர்த்து வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். குத்தகை மூலமும் மரங்கள் மூலமும் கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு உத்தரவாதமான வருமானமாக இருக்கும். அரசு மானியம் என்று ஏதும் தராமலே விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வாழ்வாதாரத்தைத் தரமுடியும். ஆறுகளிலும் கரைகளிலும் நீர்வளம் பாதுகாக்கப்படும். நகரங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும். ஆற்றங்கரைகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக மாற்றுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும். கரைகளின் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும். மழை இல்லாத காலங்களில் ஆற்றுப்படுகைகளில் உள்ள நீரினால் ஆறு முற்றிலும் காய்ந்துவிடாமல் தடுக்கப்படும்.

ஆகா! கேட்கவே இனிப்பான செய்தியாக இருக்கிறதே? ஆனால்.. இது பெரிய ஆனால்…

நமது கேள்விகள் :  தமிழ்நாட்டில் நடக்கும் மணற்கொள்ளையையும்  ஆறுகளில் கழிவு நீர் கலப்பதையும் தடுக்காமல்,  இதில் எதையுமே நிறைவேற்ற முடியாதே? மணற்கொள்ளையர்களுக்கும், ஆலை அதிபர்களுக்கும்  ஆட்சியாளர்களுடன் உள்ள கள்ள உறவைத் தடுத்து நிறுத்துவது எப்படி?

News

Read Previous

திட்டமிட்டு சிதைக்கப்படும் அரசியல் சாசன அமைப்புக்கள்

Read Next

கம்பன் கழகம்-காரைக்குடி

Leave a Reply

Your email address will not be published.