திருமண நிதி உதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்

Vinkmag ad
திருமண நிதி உதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்
 
சிவகங்கை, ஆக. 7: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற 40 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக, சிவகங்கை ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்க 2 திட்டங்கள் உள்ளன. 18 வயது பூர்த்தி அடைந்த, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் நிதியுதவி பெறலாம்.

 முதல் திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்படும். இதற்கு பத்தாம் வகுப்பு படித்து (தேர்வில் வெற்றி அல்லது தோல்வி) இருக்க வேண்டும். பழங்குடியினர் 5-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

  2-வது திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம் கிடைக்கும். இதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்து பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பங்கள் திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும்.

  சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால், திருமணத்துக்கு முதல் நாள் வரை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். திருமண நாளிலோ அல்லது திருமணம் முடிந்த பின்னரோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் பட்டியல், வருமானச் சான்று ஆகியவற்றின் நகல்கள், திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். 2-ம் திட்டத்தின் கீழ் உதவிபெற பட்டம் அல்லது பட்டயச் சான்று நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

  நிதியுதவி காசோலை தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் காசோலை வழங்கப்படும். இத்திட்டத்தில் இலங்கை அகதிகளும் பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News

Read Previous

இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

Read Next

கலசம் – இணைய தள தமிழ் வானொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *